ட்ரம்பின் வரியால் யாருக்கு பாதிப்பு?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை உயர்த்தி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அவரது இந்தப் புதிய வரிகளால் இந்தியாவில் ஐடி நிறுவனம் மட்டுமின்றி மேலும் பல துறைகள் சிக்கலை எதிர்கொள்கின்றன. அதனால் இந்தியாவுக்கு சவாலான காலமாக இது பார்க்கப்படுகிறது.

டரம்பின் புதிய வரிகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கு கீழக்கண்டவாறு வரி வசூலிக்கப்பட உள்ளது…

ஆர்கானிக் கெமிக்கல்கள் – 54 சதவீதம்
தரைவிரிப்புகள் – 52.9 சதவீதம்
பின்னலாடைகள் – 63.9 சதவீதம்
நெய்யப்பட்ட ஆடைகள் – 60.3 சதவீதம்
ஜவுளி – 52.1 சதவீதம்
தங்கம் மற்றும் வைரம் – 52.1
இயந்திர பாகங்கள் – 51.3 சதவீதம்
பர்னிச்சர்கள் மற்றும் படுக்கைகள் – 52.3 சதவீதம்

இதில் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் 4 துறைகள் பெரிய அளவில் சவாலை எதிர்கொள்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்…

ஜவுளித் துறை

வரி உயர்வுகளால் இந்திய ஜவுளித்துறை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஏற்றுமதியாளரான யோகேஷ் குப்தா இதுபற்றி கூறும்போது, “இந்திய ஜவுளி உற்பத்திகளை வெளிநாடுகளில் விற்க ஏற்கெனவே பலத்த போட்டி உள்ளது. இப்போது அந்த போட்டி அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவில் இந்திய ஜவுளிக்கு 50 சதவீதத்துக்கும் மேல் வரி இருக்கும் நிலையில், ஈகுவேடார் நாட்டைச் சேர்ந்த ஜவுளிப் பொருட்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி இருக்கும். அதனால் அந்நாட்டு ஜவுளிப் பொருட்களின் விலை குறைந்து, இந்திய ஜவுளிப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்கிறார்.

இந்திய ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பான தங்கள் கவலையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.

கடல் உணவுகள்

ஜவுளித் துறைக்கு அடுத்ததாக ட்ரம்பின் புதிய வரிகளால் அதிக சிக்கலை எதிர்கொள்ளப் போவது இந்தியாவில் கடல் உணவு ஏற்றுமதி துறைதான்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் சுமார் 40 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மொத்த மதிப்பு 60 ஆயிரம் கோடி ரூபாய்.

இதில் இரால் மீன்களே அதிகமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்ப்டுகின்றன. ஏற்கெனவே வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் மீன் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு கடும் சவாலை அளித்து வருகின்றன.

இப்போது இந்திய மீன்களின் விலை புதிய வரிவிதிப்பால் அமெரிக்காவில் உயரும் என்பதால் அதன் ஏற்றுமதி கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.

நகை மற்றும் நவரத்தினக் கற்கள்

கடந்த 2024–25-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 83 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நகைகள் மற்றும் நவரத்தினக் கற்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இப்போது ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்புகளால் இந்த தொழிலில் உள்ளவர்கள் வேறு நாடுகளை தேடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நகைத் தொழிலில் இருக்கும் பன்சாலி என்பவர் இதுபற்றி கூறும்போது, “இந்தியாவில் இருந்து நகைகளை ஏற்றுமதி செய்பவர்கள் இனி துபாய் மற்றும் மெக்சிகோ நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு தங்கள் நகைகளை ஏற்றுமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

இந்தியாவின் புகழ்பெற்ற டைட்டன் நிறுவனம் ஏற்கெனவே வரிவிதிப்பில் இருந்து தப்ப, இந்தியாவில் உள்ள தங்கள் நிறுவனங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்ற திட்டம் போட்டு வருகிறது. இது தொழிலாளர்களை பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

வாகனத் தொழில்

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாகன உதிரி பாகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில் சுமார் பாதி உதிரி பாகங்கள் அமெரிக்காவுக்குதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்போது அந்தத் தொழிலும் ட்ரம்பின் புதிய வரிகளால் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில் ட்ரம்ப்பின் வரி விதிப்பு பற்றிக் கருத்துக் கூறியுள்ள பிரதமர் மோடி, “நாங்கள் விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை வழங்குவோம். அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார யுத்தத்தில் ஏழை தொழிலாளர்கள் பாதிக்காமல் இருக்கட்டும்!

 – பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment