ஜுலை 27. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம். நம் நாட்டில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு சடங்கு. அரசுத் தரப்பில் மாலை மரியாதைகள் நடந்துவிடும். அது நம் இல்லங்களில் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்போல்.
ஆனால், இந்தியாவில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள் என்பது ஒரு புத்தொளி அல்லது புத்துணர்வு தரும் நாள். அவர் கண்ட கனவு இந்தியர்களுக்கானது. இந்தியாவை உயர்த்துவதற்கானது.
அவர் அதை அறிஞர்கள் கொண்டு அறிக்கையாக்கி வைத்துவிட்டதால் அது அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. அதை நிறைவேற்ற அவர் முழுமையாக நம்பியது சமூகத்தில் உள்ள நல்லவர்களையும் மாணவர்களையும்தான்.
ஆகையால்தான் அவர் தொடர்ந்து உணர்வூட்டும் பயிற்சிகளை தான் இறக்கும்வரை மாணவர்கள் மத்தியில் செய்து கொண்டிருந்தார். அப்படித்தான் மாணவர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
அப்படிப்பட்ட இளைஞர்கள் பலர் அங்கு ஆண்டுதோறும் வருவதுண்டு. அதுபோலவே இந்த ஆண்டும் ஆகஸ்ட் 27ஆம் தேதி இளைஞர்கள் பலர் வந்திருந்தனர்.
அதில் ஒரு குழு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் முதல் நாளே வந்து, மறுநாள் அவரின் நினைவிடத்தில் ஒரு உறுதிமொழி எடுக்க தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு சில வயதானவர்களும் வந்திருந்தனர்.
முதல் நாள் வந்த அவர்கள் விவேகானந்தர் வந்து இறங்கிய இடம், அன்னை சாரதாதேவி தங்கி பிரார்த்தனை செய்த இடம் அனைத்துக்கும் சென்று தாங்கள் இந்திய நாட்டுக்கானவர்கள் சமுதாயத்திற்கானவர்கள் என்ற உயர்ந்த எண்ணத்தை வலிமைப்படுத்த அந்த பரிசுத்த ஆன்மாக்களின் சக்தியைப் பெற்று மறுநாள் காலை தவம் செய்யச் செல்வதுபோல் காலை 8 மணிக்கு நினைவிடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர்.
கலாம் ஐயாவின் குடும்பத்தார் செல்லும் நேரத்தில் அந்த இளைஞர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த சமாதியைச் சுற்றி அந்த இளைஞர்கள் அமர்ந்து தியானம் செய்தனர்.
ஒரு மணி நேரமும் ஆசிரமச்சூழலை அவர்கள் உருவாக்கி விட்டனர்.
சிறப்பு விருந்தனர்கள் வந்து பிராத்தனையில் பங்கேற்றுவிட்டு மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு வெளியே சென்றபின் அந்த மாணவர்கள் ஒரு உறுதிமொழி எடுத்தனர் அந்த சமாதிக்கு பக்கத்திலிருந்து.
அடுத்து வெளியில் இருந்த கலாம் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்துவிட்டு வெளியில் வந்து ஒரு நினைவுப் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கு மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஒரு காவலர் வந்தார்.
புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவர்களைப் பார்த்து இப்போது யார் வருகிறார் தெரிகிறதா என்று உரத்த குரலில் அவர்களைக் கேட்டார். அந்த இடத்தில் என்னால் ஒன்றை உணர முடிந்தது.
அங்கு இருந்த மாணவர்கள் சுற்றுலா வந்தவர்கள் அல்ல, பொறுப்புமிக்க தன்னலமற்ற மாணவர்கள். ஒவ்வொருவரும் இந்த நாட்டில் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய அறிவயிலாளர்கள். மாபெரும் வழிகாட்டித் தலைவர்கள்.
அந்த மாணவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை கவனித்திருந்தால் மாணவர்களை மாவட்ட ஆட்சியருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பார் அந்தக் காவலர். நம் பாதுகாவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி அப்படி.
மக்களுக்கு பணி செய்வதைவிட அதிகார வர்க்கத்திற்கு சேவகம் செய்ய வெள்ளைக்காரன் பழக்கியதை அப்படியே அடிமை உளவியலில் செயல்பட்டு, ஆட்சியர் உயர்ந்தவர் போலும் மாணவர்கள் ஏதோ வேடிக்கை பார்க்கும் அடிமைக் கூட்டம் என்று எண்ணி அவர் செயல்பட்டார்.
இந்த நாட்டில் நடக்க வேண்டிய மாற்றம் நிறைய உள்ளது என்று எண்ணிய வண்ணம் அந்த மாணவர்கள் அமைதியாக வெளியே வந்தனர்.
இந்த மாணவர்களுக்கு உறுதிமொழியை அந்த இடத்தில் வாசித்தது நான்தான். அப்படி நான் வாசித்ததை அந்த மாணவர்கள் விண்ணதிரும் வகையில் முழக்கமிட்டனர். அந்த உணர்வு என்ன என்பதை அந்த இடத்தில் இருந்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் வந்தே மாதரம் முழக்கத்தை எந்த உணர்வில் போட்டார்களோ அதே உணர்வில் முழக்கமிட்டது. அனைவருக்கு ஒரு புதுச் சக்தி வந்ததுபோல் இருந்தது அந்த உறுதிமொழி.
“வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக இலட்சிய சமுதாயத்தில் என் பொறுப்பு” என்ற தலைப்பில் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக உலகத்தில் இந்தியாவிற்கே உரித்தான, மகத்தான
பண்புகளையும் ஒற்றுமையையும், திறன்களையும் அடிப்படையாகக் கொண்டது.
அப்படிப்பட்ட உயர்ந்த பண்புகளுடன் கூடிய இலட்சிய சமுதாயத்தை உருவாக்க 100 துறைகள் கொண்ட வலுவான கட்டமைப்பை நல்லோர் வட்டம் வடிவமைத்துள்ளது.
“சுதந்திரப் போராட்ட காலத்தில் நான் இல்லையே” என்று ஏங்குபவர்கள் பலர் இங்குண்டு. அப்படிப்பட்டவர்கள் இன்று “புதிய இந்தியாவிற்காக இலட்சிய சமுதாயம் படைக்க” நானும் ஒருவர் என்பது மட்டுமல்ல, நானும் ஒரு பொறுப்பாளர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட,
நல்லோர் வட்டம் உருவாக்கியிருக்கும் 100 செயல்திட்டங்களில் எங்களுக்கு விருப்பமான ஒரு செயலுக்கு பொறுப்பேற்று கலாம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்” என்று அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்த உறுதிமொழி ஏனென்றால் அப்துல் கலாம் தயாரித்த அறிக்கை இந்தியா 2020ல் ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இந்தியச் சூழலில் நடைபெறும் அரசியல் ஆளுகை மற்றும் நிர்வாகம் எவ்வளவு சீர்கெட்டுப்போய் இருக்கின்றன என்பதைப் படம் பிடித்து காண்பித்துவிட்டு, இந்தச் சூழலிலும் நாட்டுப் பற்றுடன், மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்லவர்கள் ஒவ்வொரு இடத்திலும் இருக்கின்றார்கள்.
அவர்களை இணைப்பதன் மூலம்தான் இந்தச் சமூகத்தை மேம்பாட்டுப் பணிகளுக்குத் தயார் செய்ய முடியும் என்று எண்ணிச் செயல்பட்டார்.
மக்களின் அறிவார்ந்த பங்களிப்பு இன்றி மேம்பாட்டை எந்தச் சட்டத்தாலும், எந்தத் திட்டத்தாலும் கொண்டுவர முடியாது என்பதுதான் அவரின் திடமான கருத்து. கலாமின் கருத்துக்களை நெஞ்சத்தில் சுமந்து சென்று செயல்பட வந்தவர்கள்தான் அந்த இளைஞர்கள்.
அடுத்து அந்த மாணவர் குழு ஒரு கருத்தரங்கம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றனர். அவர்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டு நானும் அங்கு சென்றிருந்தேன்.
அந்த ஒரு நாள் முழுவதும் தாங்கள் அர்ப்பணிப்புடன் நம் சமூகத்திற்கு நாட்டுப் பற்றுடன் நாம் படிக்கின்ற இடத்தில், வாழும் இல்லத்தில், எப்படி செயல்பட வேண்டும், அதற்கு நம்மை எப்படித் தயார் செய்துகொள்ள முடியும் என்பதையே விவாதித்த வண்ணம் இருந்தனர்.
அவர்களிடம் உரையாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த அரைமணி நேரத்தில் நாம் செயல்படும் சமூகம் சுதந்திரமான நாட்டில் எப்படி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது என்பதை விளக்கினேன்.
சுதந்திர நாட்டில், மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில், குடியரசு நடைபெறுகின்ற நாட்டில் எப்படி அரசு எஜமானனாக முடியும். மக்கள் தானே எஜமானராக இயங்க வேண்டும். அதற்கு மாறாக அரசுதானே இன்று மக்களை கட்டி மேய்க்கிறது.
அரசியல் கட்சிகள்தானே கட்சிக்காரர்களை கட்டி மேய்க்கிறது. சுதந்திரமாக, பொறுப்புடன் குடிமக்களாக ஒழுக்கத்துடன் பண்புகளுடன் சமூகக் கண்ணோட்டத்துடன் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டிய குடிமக்கள் இன்று எப்படி பொறுப்பற்று அனைத்து இடங்களிலும் சுயநலத்துடன் செயல்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டினேன்.
எந்த இடத்திலும் ஒழுக்கமான, அற விழுமியங்களுடன் நாட்டை முதன்மைப்படுத்திய செயல்பாடு என்பது அரிதாகி பொருளியலில் உயர்ந்து அறத்தில் தாழ்ந்து சமூகம் தன் கட்டமைப்பில் செயல்பாட்டில் சிதிலமடைவதின் விளைவு எங்கும் அமைதியற்ற சூழலில் நாம் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
காரணம் நமக்கு வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் நம்மை மேய்த்தார்களேயன்றி, நம்மை அறிவில் உயர்த்தி வாழ்வில் இந்திய நாட்டுக்கான ஒரு தெளிவான சமூக வாழ்வைக் கட்டமைத்து வாழ வழிகாட்ட இயலவில்லை. மக்களும் அறமற்று வாழ்ந்து தாழ்ந்தனர், அரசும் நேர்மையற்று அறம் பிறழ்ந்து செயல்படுகின்றது.
அரசியலில் எந்தப் பண்பும், நியதியும் அற்று பிழைப்புவாதத்தை முன்வைத்து செயல்படும் ஒரு அலங்கோலத்தைச் சந்தித்து வருகிறோம்.
இதற்குத் தீர்வு தான் என்ன என்றால், நம் சமூகத்தை மாற்றினால் அன்றி இதற்குத் தீர்வு சட்டத்திலோ, திட்டத்திலோ தொழில் நுட்பத்திலோ பெறமுடியாது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
நாம் முதலில் நற்பண்புகளுடன், முன்மாதிரியாக, சமுதாயத்திற்கு வழிகாட்டும் நிலைக்கு அறிவில் தெளிவு பெறவேண்டும். நாம் எங்கும் ஒத்த உணர்வாளர்களுடன் இணைந்து, நாமே ஒரு சமுதாயமாக வாழவேண்டும். நாம் வாழும் வாழ்க்கை மற்றவரை வியக்க வைக்க வேண்டும். அப்படி வாழ்ந்து வியாபிக்க வேண்டும்.
அந்த மாணவர்களுக்கு ஒரு கல்லூரியின் தாளாளர் அந்த நிகழ்வில் பங்கேற்று விருது கொடுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூ.5000 அறிவித்து ஊக்கப்படுத்தினார்.
காரணம் அந்த மாணவர்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தியது, தாங்கள் செய்த செயல்களைப் பதிவிட்டதிலிருந்து கிடைத்த உணர்வில் அவர் அந்த பரிசுத்தொகையை அறிவித்தார்.
அதே கூட்டத்தில் அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் தன் சித்தப்பா தன் வாழ்நாள் முழுவதும் யாருக்காக உழைத்தார் எப்படி நாட்டுப்பற்றுடன் செயல்பட்டார், அவர் ஏன் இளைஞர்களையும் மாணவர்களையும் நம்பி கடைசிவரை தன் உயிர் போகும்வரை அவர்களை முன்னிறுத்திச் செயல்பட்டார் என்பதை உணர்வுபூர்வமாக விளக்கி உரையாற்றி உணர்வூட்டினார் மாணவர்களுக்கு.
எங்கள் சித்தப்பாவின் கனவை நனவாக்க இளைஞர்களாகிய நீங்கள் புறப்பட்டு பணி செய்வது எங்களுக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது என்று உணர்வு கொப்பளிக்க உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இஸ்ரோ விஞ்ஞானியும் அந்த மாணவ்ரகளை உற்சாகப்படுத்தினார் தன் உரையாலே. இவ்வளவு செயல்களிலும் பங்கேற்று வேடிக்கை மனிதரைப்போல் அந்த மாணவர்கள் வீடு திரும்பவில்லை.
ஒரு சபதம் எடுத்து நான் என்னென்ன பொறுப்புமிக்க பணிகளை ஆற்றுவேன் என்று தங்களின் பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு கனத்த இதயத்துடன் வீடு திரும்பியது ஒரு வரலாற்று நிகழ்வு.
இவர்கள் புகழுக்காகவோ, சுயநலத்திற்காகவோ, பதவிக்காகவோ எதையும் சிந்திக்காததினால் ஊடக வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டு இருந்தனர்.
ஆனால், அவர்கள் ஒரு வரலாறு படைப்பார்கள் என்ற செய்தியை மட்டும் அழுத்தமாக அங்கு விட்டுச் சென்றார்கள் என்பதுதான் அந்த நிகழ்வின் முக்கியச் செய்தி.