முதியோர் உயிரிழப்புகளைத் தடுத்த உலக நாடுகள்!

தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே. இதைத் தொடர்ந்து பேசி, எழுதி வருகிறேன்.
 
“தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை” என்ற செய்தியை அறிந்தபோது, அந்த வாசகம்தான் வருத்தமும் ஆதங்கமுமாய் மனதுக்குள் ஓடியது.
 
ஒரு முக்கிய திரைப்படப் பிரச்சினையின் போது, அவரது கருத்தையும் கேட்டு வெளியிட்டேன். மற்றபடி பெரிய அறிமுகம் இல்லை.
 
கே.ராஜனின் காரசாரமான சினிமா மேடைப் பேச்சுகள் யூடியூப் சேனல்களில் வைரலாகும். ஆனால் யதார்த்தம் வேறு.
 
ஒவ்வொரு மேடையிலும் அவர், “பலகோடி கடன் கொடுத்தேன்.. திரும்ப வரவே இல்லை” என்பார்.
 
ஒரு மேடையில் அவர் எதிரிலேயே இயக்குநர் பாக்யராஜ், “தொடர்ந்து இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. எவ்ளோ கொடுத்தீங்க.. யாருக்குக் கொடுத்தீங்கன்னு டீட்டெய்லே சொல்ல மாட்டேங்கிறீங்க” என்று கிண்டலடித்தார். அரங்கமே சிரித்தது.
 
ஒரு அரசியல் கூட்டத்தில் மேடையில் உதயநிதி ஸ்டாலின் இருக்க.. அவரை மிகவும் புகழ்ந்து பேசினார் கே.ராஜன்.
 
அடுத்துப் பேசிய உதயநிதி, “அண்ணன் (கே.ராஜன்) இப்போ நல்லா பேசுவார். ஆள் இல்லாதப்போ வேற மாதிரி பேசுவார்” எனக் கிண்டலடித்தார். அங்கும் கரவொலி காதைப் பிளந்தது.
 
இதற்குக் காரணம், கே.ராஜனின் பேச்சுகளும், பேசும் முறையும்தான்.
 
தனது உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாக இயங்கிய வயது முதிர்ந்த நபர், இப்படி தற்கொலை செய்துகொண்டாரே என்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்துகிறது.
 
உலக அளவில் முதியோர்கள் தற்கொலை என்பது தொடரவே செய்கிறது.
 
தனிமை, சமூகப் புறக்கணிப்பு, மருத்துவம் செய்ய வழி இல்லாதது, முதுமைக்கே உரிய சிந்தனைத் தடுமாற்றம் ஆகியவை முக்கிய காரணமாக அமைகின்றன.
 
இதிலும் இந்தியா முதலிடம் வகிக்கிறது. (புள்ளிவிவரங்கள் கூகுளில் தெரிந்துகொள்ளுங்கள்)
 
(இந்து) கடவுள் நம்பிக்கை உள்ளோர் அதிகம் உள்ள இந்தியா, நேபாளம்…
 
(இஸ்லாமிய) கடவுள் நம்பிக்கை உள்ளோர் அதிகம் வாழும் பாகிஸ்தான், ஆப்கானித்தான்..
 
(கிறிஸ்தவ) மத நம்பிக்கை உள்ளோர் அதிகம் உள்ள லெசோதோ, லித்துவேனியா..
 
(பவுத்த) மத நம்பிக்கை உள்ள இலங்கை, ஜப்பான்.. என வெவ்வேறு மதங்கள் கோலோச்சும் இந்த நாடுகளில் தற்கொலைகள் அதிகம்.
 
முதலாளித்துவ வல்லரசுகளான அமெரிக்கா, உருசியா.. பொதுவுடமை பேசும் சீனா ஆகிய நாடுகளிலும் தற்கொலைகள் அதிகம்.
 
“தனிமை, சமூகப் புறக்கணிப்பு, மருத்துவம் செய்ய வழி இல்லாதது, முதுமைக்கே உரிய சிந்தனைத் தடுமாற்றம் ஆகியவை, முதியோர் தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைகின்றன” என்கிறது உலக சுகாதார அமைப்பு.
 
‘இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்துவிட்டால் முதியோர், மரணத்தை நாடுவதைத் தடுத்துவிடலாம்! ஆனால் அதெல்லாம் முடியுமா?’ என்ற கேள்வி நமக்கு வரலாம்.
 
‘முடியும்’ எனக் காண்பித்து இருக்கின்றன ஐந்து நாடுகள்.
 
‘நோர்ட்டிக் நாடுகள்’ என்று அழைக்கப்படும் பின்லாந்து, சுவீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள்தான் அவை.
 
இந்த நாடுகள் உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளன.
 
இந்த நாட்டு அரசுகள் முதியோர்களை(யும்) அக்கறையுடன் கவனிக்கின்றன.
 
முதியோருக்கு நிம்மதியாக வாழும் அளவுக்கு மாதச் செலவுக்குத் தொகை அளிக்கின்றன.
 
அரசு வேலை செய்திருந்தால்தான் என்றில்லை… குடிமக்கள் அனைவருக்கும் இந்தத் தொகை உண்டு.
 
தவிர, சிறந்த முதியோர் காப்பகங்களை அரசே நடத்துகின்றது.
 
மேலும், தனது வீட்டிலேயே வாழ நினைப்பவர்களையும் ஊக்குவிக்கிறது. அவர்களைத் தேடி மருத்துவர்கள் வருவார்கள்!
 
இந்த ஐந்து நாடுகளுக்குள் இன்னும் சில ஒற்றுமைகள் உண்டு..
 
ஊழல் இல்லாத அரசுகள், கடவுள் நம்பிக்கை இல்லாத கணிசமான மக்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மிக மிக மிக அரிது, விவாகரத்துகள் அதிகம்!
 
ஆனால், நாம் லஞ்ச ஊழலை இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். கடவுள், கற்பு என்கிற இரு கற்பிதங்களில் ஊறித் திளைக்கிறோம்.
 
இந்த மூன்றும் இல்லாத நாடுகளின் மக்களே மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இதை நாம் உணர வேண்டும்.
 
– ஊடகவியலாளர் டி.வி.சோமு
Comments (0)
Add Comment