ஊர் சுற்றி குறிப்புகள்:
தற்போது நாமக்கல் மாவட்டத்தில், பலர் தங்களது ஒரு கிட்னியை விற்றிருப்பது தொடர்பான விவரங்கள் வெளியே வந்து பரபரப்பைக் கிளப்பயிருக்கிறது. காட்சி ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
ஆனால், இத்தகைய கிட்னி வியாபாரம் தமிழகத்தில் நடப்பது புதிதான ஒன்றல்ல. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழுக்காக, இதே நாமக்கல் மற்றும் ஈரோடு சுற்றியுள்ள நெசவாளர்கள் அடர்ந்த பகுதிகளில் பயணப்பட்டபோது, பல நெசவாளர் குடும்பங்களில் யாராவது ஒருவர் தங்களுடைய கிட்னியை விற்றிருப்பது இயல்பான ஒன்றாக இருந்தது.
இதில், ஆண்களும் விற்றிருக்கிறார்கள். பெண்களும் விற்றிருக்கிறார்கள். குடும்பத்தின் பொருளாதார இயலாமைதான் அவர்களை தங்களுடைய கிட்னியை மலிவான விலைக்கு ஒரு பண்டத்தைப் போல விற்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
அப்போதைய நிலையில் தங்கள் கிட்னியை விற்பதற்கு முன்பு, அதற்கு பேசப்பட்ட விலை ஒரு லட்சம். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஒரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பிறகு, அவரது கைகளுக்கு கிடைக்கப்பட்ட தொகை 30-லிருந்து 35 ஆயிரம் ரூபாய் தான்.
இடையில் இடைத்தரகர்கள் எடுத்துக்கொண்டது போக அவர்களுக்கு கிடைத்த தொகை அவ்வளவுதான்.
இதற்கென்று வலுவான சாட்சிகள் இல்லாததால், இதற்காக அவர்கள் எங்கும் முறையிட முடியாத நிலை இருந்த நிலையில், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகனுடன் தான் அந்தப் பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன்.
பல குடும்பங்களைச் சந்தித்தபோது, அவர்கள் தங்கள் இயலாமையைத் தாழ்ந்த குரலில் உருக்கமாகச் சொன்னார்கள்.
நெசவாளக் குடும்பங்கள் தங்கள் நெசவுத்தொழில் மூலமாக கிடைக்கும் வருமானத்தை இழக்கும்போது அதற்கான ஏதாவது மாற்று வழியை தேடும் போது தங்களுடைய ஒரு கிட்னியை விற்பது அங்கு ஒரு மாற்று வழியாக அந்த நெசவாளர் குடும்பங்களுக்குப் பயன்பட்டிருக்கிறது.
அங்குள்ள மருத்துவமனைகளும் அதை இயல்பாக எடுத்துக் கொண்டிருந்தன. இதை அப்போது வார ஒரு வார இதழில் கட்டுரையாக எழுதியிருந்தேன்.
அதே நிலை, இன்று வரை நீடிப்பது நாம் பொருளாதார ரீதியான வளர்ச்சி அடையாத மந்தகதியிலான ஒரு நிலையையே சுட்டெரிக்கும் வெயிலைப் போல உணர்த்துகிறது.
பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற குறிப்புகளை ஆரவாரமாக விவரிக்கிற நாம், அத்தகைய பொருளாதார வளர்ச்சி யாருக்கானதாக அமைந்திருக்கிறது?
யார் பொருளாதார வளர்ச்சியினால் மேம்பட்டு இருக்கிறார்கள்?
யார் கடன்பட்டு வேறு வழியின்றி தங்கள் கிட்னியை விற்கும் அளவுக்கு தாழ்ந்து போய் இருக்கிறார்கள்?
என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்களும், புள்ளி விவரத்தை அடிக்கடிச் சொல்லும் நிதியமைச்சரும் கவனிக்க வேண்டிய விஷயம்.
எப்படிப்பட்ட இயலாமை தங்கள் வாழ்வில் வரும்போது நெசவாளப் பெண்களும் ஆண்களும் தங்கள் கிட்னியை விற்கும் அளவுக்கு அவலமான சூழ்நிலைக்குப் போக நேர்ந்திருக்கிறது பாருங்கள்.
இதைவிட பெருங்கொடுமை என்னவென்றால், மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் நான் பார்க்க நேர்ந்தது.
வட்டிக்குப் பணம் வாங்கிய ஒருவர் சரிவர பணத்தைக் கொடுக்காததால், அந்த வட்டிக்கு பணம் கொடுத்தவர் அவரை வம்படியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருடைய கிட்னியை எடுக்கும் அளவுக்குப் போனதும், இதே சமூகத்தில் நடந்திருப்பதையும் நேரடியாக உணர முடிந்திருக்கிறது.
அப்படிக் கிட்னியை எடுக்கப் போகிறவர்களை மாநகராட்சிக் கழிவறையில் அடைத்து வைத்திருந்த அவலம் கூட, இதே மதுரையில் நடந்தேறியிருக்கிறது.
இந்த அவலம் நீண்ட காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.
– மணா