தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற விஜய்யின் செயல்பாடு பலரை வியக்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை கடைபிடித்து வந்த பல மரபுகளிலிருந்து விலகி, தன்னுடைய தனித்துவமான அடையாளத்தையும் நிலைநிறுத்தி இருக்கிறார் விஜய்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக அவசரமாக கூட்டப்பட்ட பதவி ஏற்பு விழாவின்போது, விஜய் ‘கோட்’ சகிதமாக வந்திருந்தது கூட மீடியாவால் உற்று கவனிக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிற பலர் வெள்ளை சட்டை, வேட்டியுடன்தான் பெரும்பாலும் பதவியேற்றி இருக்கிறார்கள்.
ஆனால், காலத்துக்கேற்ற மாற்றத்தை நினைவூட்டும் விதத்தில், தன்னுடைய ‘டிரஸ் கோடை’ மாற்றி, அதை பலருடைய கவனிப்புக்குரிய ஒன்றாகவும் மாற்றி இருக்கிறார் விஜய்.
அதோடு, பதவி ஏற்பு விழாவின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி மிக எளிமையாக வந்து விழாவில் பாராட்டைத் தெரிவித்து விட்டுச் சென்றது அனைவராலும் அதிகமாக கவனிக்கப்பட்டது.
அத்துடன் பதவியேற்கும் விழாவில், பொதுவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்ட பிறகு கூடியிருக்கும் தொண்டர்களுக்காக அங்கேயே பேசுவது என்பதிலும் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி இருக்கிறார் விஜய்.
மேடையில் இருந்த ஆளுநர் உள்ளிட்டவர்களை வழியனுப்பிவிட்டு மூன்று கோப்புகளில் கையெழுத்து போட்டு பின், அதன்பிறகு தன்னுடைய வழக்கமான ஒரு உரையை, அதாவது எழுதியதை வாசிக்காமல் இயல்பாக அவர் பேச ஆரம்பித்ததும், தனது வாக்குறுதிகள் பற்றி நினைவூட்டி சிறிது கால அவகாசம் கூறியதும் எதார்த்தமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் ‘பவர் சென்டர்’ என்கின்ற சொல்லாடல் தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு நபர்கள் குறித்து பேசப்பட்ட நிலையில், தன்னைச் சுற்றி வேறு எந்த ‘பவர் சென்டர்’களும் இல்லை. தான் ஒருவன் மட்டுமே பவர் சென்டராக இருக்கிறேன் என்பதையும் நேரடியாகவே தெளிவுபடுத்தினார்.
அதோடு, ஊழல் எதிர்ப்பில் தான் காட்டும் தீவிரத்தைக் குறிப்பிட்டுவிட்டு, இதை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என ஒரு எச்சரிக்கையும் பதவி ஏற்ப விழாவிலேயே விடுத்தார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
போதைத் தடுப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் கையெழுத்திட்டு இருக்கிற விஜய், பதவி ஏற்ற மறுநாளிலேயே திருச்சியில் நடந்த காவல்துறை எஸ்.பி. கூட்டிய ஒரு கூட்டத்தில் பங்கேற்றவர்கள், திருச்சி சுற்றியுள்ள பல்வேறு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள், அவர்களை நோக்கி மிகவும் வெளிப்படையாகவே அந்த மாவட்ட எஸ்.பி. எச்சரித்திருக்கிறார்.
“இப்போது சட்டம் மிகவும் கடுமையா இருக்கிறது. இதையும் மீறி இனிமேல் குற்றச்செயலில் ஈடுபட்டால் நீங்களும் பாதிக்கப்படுவீர்கள், உங்கள் குடும்பமும் பாதிக்கப்படும்” என்று எச்சரித்த நிகழ்வு விஜய் பதவியேற்ற மறுநாளே நடந்தது.
இதையெல்லாம் விட சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் பதவியேற்ற நாளில் மதிய நேரத்திற்குப் பிறகு, அண்மை காலத்தில் பதவியேற்ற எந்த தமிழக முதல்வரும் செய்யாத விதத்தில், முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று வாழ்த்துப் பெற்றார்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியும் அப்போது அவரை வரவேற்று அரவணைத்து, வீட்டுக்குள்ள் அழைத்துச் சென்ற நிகழ்வெல்லாம் நடந்தது.
அதையொட்டி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிற குறிப்பில் விஜய்க்கு அன்பு நிறை வாழ்த்தும் சில ஆலோசனைகளும் வழங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன் பிறகு மதிமுக தலைவரான வைகோவின் வீட்டிற்குச் சென்று வைகோ, துரை வைகோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினரைச் சந்தித்த நிகழ்வு, அதன் பிறகு வைகோ உணர்ச்சி பொங்க செய்தியாளர்களிடம் நிகழ்த்திய உரை மிக நெகிழ்வானது.
விஜய்யின் இந்த அணுகுமுறையை அண்ணா அவர்களுடன் ஒப்பிடும் அளவிற்குப் போனார் வைகோ.
அதனை அடுத்து பாமக தலைவரான டாக்டர் அன்புமணியும், தர்மபுரி எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணியையும் சந்தித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமான் அவர்களுடனும் ஒரு நெகிழ்வான சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார் விஜய்.
இதன் மூலம் தொடர்ந்து ஊடக கவனத்தில் அதிகம் கவனிக்கப்படக்கூடியவராக மாறி இருக்கிறார் விஜய்.
விஜய்யின் இந்த இத்தகைய அணுகுமுறையைப் பரவலாக அரசியல் கட்சி பேதங்கள் அற்று பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
தமிழக சட்டசபையில் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்றபோது, அதை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் விஜய், இங்கிலாந்தில் சபாநாயகர் பொறுப்பு எப்படியெல்லாம் இதுவரை இருந்திருக்கிறது,
அந்த சபாநாயகர் பொறுப்புக்குப் பங்கேற்கிறவர்களை இழுத்து வராத குறையாக, இழுத்து வந்து இருக்கையில் எப்படி அமர்த்துவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவர் குறிப்பிட்டு பேசியபோது சட்டசபையில் அதற்கு சிரிப்பலை எழுந்தது.
மிகவும் இயல்பானபடி தன்னுடைய உரையை விஜய் பதிவு செய்த விதமும் தொடர்ந்து ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
மே 13-ம் தேதி தன்னுடைய அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக முதல்வரான விஜய் இருந்தாலும்கூட, தமிழக முதல்வரானதும் விஜய் நடந்து கொண்ட விதம் பரவலான பாராட்டை அவருக்குப் பெற்று தந்திருக்கிறது என்பதே அரசியல் பாகுபாடுகளை எல்லாம் மீறிய எதார்த்தமாக இருக்கிறது.
கவனிக்கத்தக்க இத்தகைய துவக்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களின் விருப்பமாகவும் இருக்கிறது.