‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வது மாதிரியே பெட்ரோல், டீசல் விலை போன்ற எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பே, பிரதமர் மோடி இரண்டு வாரத்துக்கு முன்னால் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் பேசும்போது,
“எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். முடிந்தால் கொரோனா காலத்தைப் போல வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அவர் அறிவுறுத்தியபோதே டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், ஏதோ ஒரு பொருளாதார நெருக்கடியை முன்வைத்துதான் பிரதமர் மோடி இதுமாதிரி பேசுகிறார் என்று சொல்லியிருந்தார்கள்.
அவர்கள் கணித்ததைப் போலவே தற்போது பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதனுடைய பின்விளைவாக வாகனக் கட்டணங்கள் உயர்ந்து, வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்களின் விலை உயர்ந்து, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிற சிறு குறு தொழில்களைச் செய்பவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிற விலையேற்றத்தால், இன்னும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே இந்திய அளவில் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து கொண்டிருக்கும் நிலையில், பலர் வேலைவாய்ப்பை இழந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மேலும் பலரின் வாழ்வாதாரங்களைக் குலைய வைக்கும்.
இதைத்தான் தமிழ்நாடு முதல்வரான விஜய்யும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை உணர்த்தி அதனை கைவிடுமாறு வலியுறுத்தி இருக்கிறார்.
ஆனால், சர்வதேசப் பொருளாதாரச் சிக்கலினால் இத்தகைய விலை உயர்வை அறிவித்திருக்கும் மத்திய அரசு தற்போதும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் மேற்காசியப் போரின் விளைவால், இன்னும் சில நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்திக்க நேரிடலாம்.
அதைத் தொடர்ந்து தற்போது கூட, இந்திய எண்ணெய்க் கப்பல் ஒன்று ஈரானால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய நிலையே சர்வதேச அளவில் தொடர்ந்து நீடிக்குமானால், அதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இயல்பான பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சராசரி மக்கள் தலையில் அந்த சுமை இறங்குகிற விதத்தில் அமைந்துவிடும்.
ஏற்கனவே பலதரப்பட்ட சுமைகளைச் சுமந்து அவற்றை இயல்பாக தாங்குவதற்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டாலும், அவர்கள் தொடர்ந்து எவ்வளவு சுமைகளைத் தான் தாங்குவார்கள்.
– எம். மாலதி