பன்மாடக் கடையகத்தில் ‘டெசலா’வைப் பார்த்தேன்!

கவிஞர் மகுடேசுவரன்

இந்தியாவில் கால் பதித்துள்ள எலான் மசக்கின் ‘டெசலா’ மகிழுந்து நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் திறந்துள்ளதாம்.

கடந்த ஆண்டின் அமெரிக்கப் பயணத்தில் நண்பர் முத்துடன் இராலே நகரத்தருகிலுள்ள பன்மாடக் கடையகம் ஒன்றில் உலாவினோம். அங்கே டெசலா வண்டியைக் காட்சிக்கு நிறுத்தி வைத்திருந்தனர்.

நான் அவ்வண்டியை ஆர்வத்துடன் நோட்டமிட்டேன். வண்டியை விளக்கும் பொறுப்பிலிருந்த அமெரிக்கப் பெரியவர் “வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பானேன்? வண்டியில் அமர்ந்து பாருங்கள்” என்று அன்புடன் அழைத்தார்.

நான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியின் கட்டுமானத்தைச் சரிபார்த்தேன். உடனிருந்த முத்து என்னைப் படமெடுத்து மகிழ்ந்தார்.

டெசலா மகிழுந்து இடைநிலை அளவுள்ள வழக்கமான மகிழுந்தை விடவும் சற்றே பெரியது. எடைமிக்கது. தானாக ஓட்டிச் செல்லும் ’தானோட்டி’ (Auto Pilot) வாய்ப்போடுதான் விற்பனைக்கு வருகிறது.

உடல் கட்டுமானம், கண்ணாடிகள், இருக்கைகள், ஓட்டுவளைவி, முன்மேடையில் அழகிய கணினித்திரை, மின்கலங்கள், உருளிகள், அவற்றை இயக்கும் இணைப்புகள் ஆகியன தவிர்த்து வேறு எதுவுமே வண்டியில் இல்லை.

உங்களுக்கு முன்னே ஒரு வண்டி இருப்பின் அதுவே நிறுத்துகட்டையை இயக்கியதுபோல் விரைவு தணிக்கும்.

அமெரிக்காவில் தானோட்டி முறைக்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை என்பதால் அம்முறையில் ஓட்டக்கூடாது. ஆனால், வண்டியில் அவ்வாய்ப்பு பொருத்தப்பட்டுள்ளது.

திருப்பும்போதோ நகர்த்தும்போதோ ஏதேனும் நம்மை அறியாமல் முட்டவோ, மோதவோ செய்யலாம் என்றால் வண்டி தானாக நின்றுவிடும். நகராது. முட்டும் நிலை என்பதால் நிறுத்தப்பட்டது என்று திரையில் ஒளிரும்.

அவ்வவ்விடத்தில் ஏற்கப்பட்ட அளவுக்கு மீறிய விரைவில் வண்டி செல்லாது. இப்பகுதியில் எண்பது கிமீ விரைவில்தான் செல்லவேண்டும் என்றால் அவ்விரைவினை மீறாது.

தாம் என்னதான் உயர்வகை மகிழுந்துகளை வைத்திருந்தாலும் அங்கே ‘டெசலா’ மகிழுந்து சென்றால் ஏறிட்டுத்தான் பார்க்கிறார்கள் என்றார்கள்.

நான் டெசலாவைப் பற்றி விருப்புடன் இருப்பதனைப் பார்த்த சியாட்டில் தமிழ்ச்சங்க நண்பர்கள் உங்களை வானூர்தியகத்தில் இறக்கிவிடுவதற்கு நண்பரின் ‘டெசலா’ மகிழுந்துதான் வருகிறது என்று மகிழ்ச்சிப்படுத்தினர்.

சான்பிரான்சிசுகோ நகரில் நண்பர் பாண்டியனாரின் டெசலாவில்தான் சுற்றினோம். பாண்டியனார் அவ்வண்டியைப் புதிதாக ஓட்டத் தொடங்கியிருந்தார் என்பதால் அவ்வப்போது கட்டுப்பாடு மறந்துவிடும் அவருக்கு.

அந்நிலையின்போது வண்டியையே சொல்லவைத்து இயக்கினார். அந்நகரத்தில் எண்ணற்ற மகிழுந்துகள் தானோட்டி முறையில் சுற்றிக்கொண்டிருந்தன. வண்டிக்குள்ளே ஆள் இல்லை. நகரத்தினைத் தானாகச் சுற்றும் ஆய்வுமுறையை மேற்கொள்கின்றன என்றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக ‘இலாசு ஏஞ்சலசு’ நகரில் நான் தங்கியிருந்த ஏழெட்டு நாள்கள் முழுவதும் நண்பர் உலோகேசுவரதனின் டெசலாவில்தான் உலாத்தல். மோட்டார் விகடனில் அடுத்த கட்டுரையாக ‘டெசலா’வைப் பற்றித்தான் எழுத வேண்டும்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment