சுபான்ஷு சுக்லாவின் சம்பளம் இதுதான்!

விண்வெளி ஆய்வு மையத்தில் 18 நாட்கள் தங்கி ஆராய்ச்சிகளை செய்து முடித்த நிலையில், இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா, இன்று (ஜூலை-15) பூமிக்குத் திரும்பினார்.

சுபான்ஷு சுக்லா உட்பட மொத்தம் 4 விண்வெளி வீரர்களை ஏற்றிவந்த டிராகன் விண்கலம், இன்று மதியம் 3 மணி 1 நிமிடத்தில் சாண்டியாகோ நகரை ஒட்டியுள்ள பசுபிக் கடலில் தரை இறங்கியது.

முன்னதாக நேற்று மாலை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புறப்பட்ட சுபான்ஷு சுக்லா, சுமார் 22 மணிநேர பயணத்துக்குப் பின் பூமிக்கு திரும்பியுள்ளார்.

பிரதமர் வாழ்த்து:

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன்.

சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் ஒரு பில்லியன் கனவுகளை ஊக்குவித்துள்ளார்.

இது நமது சொந்த மனித விண்வெளி விமானப் பயணமான ககன்யான் நோக்கிய மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாட்டம்:

சுபான்ஷு சுக்லா தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமியை வந்தடைந்ததும் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

சுக்லா தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்தது தொடர்பாக அவரது தாயார் ஆஷா சுக்லா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் மகன் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்துள்ளான். அதற்காக நான் கடவுளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சுபான்ஷு சுக்லாவின் சம்பளம்:

சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்ப, மத்திய அரசு 550 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. இந்த நிலையில் விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு சுக்லாவின் சம்பளம் என்ன என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, இந்த பயணத்துக்காக சுபான்ஷு சுக்லாவுக்கு சம்பளம் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இஸ்ரோ அமைப்பு பொதுவாக விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுக்கு 12 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கும். அந்த சம்பளத்தையே சுக்லாவும் பெறுவார் என்று கூறப்படுகிறது.

இது நம் ஊரில் ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வாங்கும் சம்பாளத்தைவிட மிகவும் குறைந்ததாகும்.

விண்வெளியில் ஹேர் கட்டிங்:

சுபான்ஷு சுக்லா விண்வெளியில் இருந்த காலகட்டத்தில், அங்கு தனது முடியை வெட்டியுள்ளார்.

கடந்த 122 நாட்களாக விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துவரும் சக வீரரும் அமெரிக்காவைச் சேர்ந்தவருமான நிகோலஸ் அயர்ஸ், அவருக்கு ஹேர்கட்டிங் செய்துள்ளார்.

பொதுவாக முடி வெட்டியவுடன் குளிப்பது நம் வழக்கம். ஆனால் விண்வெளி ஆய்வு மையத்தில் குளிக்க வசதி இல்லை என்பதால், முடிவெட்டிய பின்னர் ஈரத் துணியால் தன் தலையை துவட்டி முடிகளைக் களைந்துள்ளார் சுக்லா.

இந்தியா திரும்புவதில் தாமதம்:

விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு திரும்பினாலும், அடுத்த சில நாட்கள் நாசாவின் ஜோன்ஸ் விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா தங்கவேண்டி உள்ளது. அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்கானிப்பார்கள்.

இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சுக்லாவின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரே அவர் அங்கிருந்து வெளியில் அனுமதிக்கப்படுவார். அதன்பிறகு அவர் இந்தியா திரும்புவார்.

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment