பாமக ஒன்றிணைவதை விரும்புவோர் கவனத்திற்கு!

பாமக நிறுவனர், தலைவரான டாக்டர்.ராமதாசுக்கும் அவருடைய மகனான ‘முன்னாள்’ தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் முற்றிக்கொண்டே போகிறது.

இதன் விளைவு, இரண்டு பேருமே இங்குள்ள ஊடகங்களுக்குப் பரபரப்பான தீனியைப் போடுகிறவர்களாக உருமாறி இருக்கிறார்கள்.

தந்தையும் வாரம் வாரம் பரபரப்பாக பேட்டி கொடுக்கிறார். மகனும் பேட்டி கொடுக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய பெயரை தனது மகன் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளக்கூடாது என்று அதற்கும் தடை விதித்தார் ராமதாஸ்.

ஆனால், மறுநாள் அன்புமணி ராமதாஸ் விடுத்த அறிக்கையில், மறவாமல் தனது தந்தையாரின் பெயரையும் இணைத்தே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பாமக எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று பாமகவுக்குள் இருந்தபடியே பாடுபட்ட அல்லது விரும்பிய அடுத்தக்கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் இதனால் திணறிப் போனார்கள். எந்தப் பக்கம் சேருவது என்கின்ற குழப்பம் அவர்களுக்குள் வந்துவிட்டது.

இதற்கெல்லாம் மேலாக தைலாபுரம் தோட்டத்தில், டாக்டர்.ராமதாஸ் இல்லாத நேரத்தில் அங்கு சென்று தனது தாயாரை அன்புமணி ராமதாஸ் பார்த்துவிட்டு வந்ததுகூட ஊடகங்களில் செய்தியாகி இருக்கிறது.

இதையடுத்து அண்மையில், டாக்டர்.ராமதாஸ் கொடுத்தப் பேட்டியில் தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக ஒரு பரபரப்பான குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.

யார் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால், இப்படி மாறி மாறி தந்தையும் மகனும் அடுத்தடுத்து தனது பேட்டிகள் மற்றும் அறிக்கையின் மூலம் மோதிக்கொள்வது ஊடகங்களுக்கு வேண்டுமானால் பரபரப்பான தீனியாக இருக்கலாம்.

ஆனால், இவ்வளவு காலம் அவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்த பாமகவின் தொண்டர்களுக்குக் குழப்பத்தைத் தான் ஏற்படுத்துமே தவிர, இத்தகைய மோதல்கள் பாமகவை வளப்படுத்தாது.

வரும் தேர்தலிலும் பலனளிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது என்பதை இரு தரப்பினரும் உணர வேண்டிய நேரம் இது.

இருதரப்பிலும் தூண்டி விடுவதற்கு எத்தனையோ பேர் இருப்பார்கள். இப்போதும் அப்படித்தான் இருதரப்பிலும் இருக்கிறார்கள்.

ஆனால், இருதரப்பினரையும் ஒன்றிணைப்பதற்கான மனம் உள்ளவர்கள் குறைந்துபோய் இருக்கிறார்கள்.

இதையும் மீறி அவர்கள் ஒன்றிணைவது அவர்களுக்கும் நல்லது, அவர்கள் வளர்க்கப் பாடுபட்ட கட்சிக்கும் நல்லது.

இதை எந்த பாரபட்சமும் இன்றி இருவரும் உணர்வார்களா?

– லியோ

Comments (0)
Add Comment