இனிமையான தருணங்களுடன் சாக்லேட் தினத்தைக் கொண்டாடுவோம்!

இன்று ஜூலை 7 – உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.

மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாக்லேட்டை ரசித்து வந்தாலும், 2009-ம் ஆண்டு வரை சாக்லேட்டைக் கொண்டாடுவதற்கென்று ஒரு சிறப்பு நாள் எதுவும் ஒதுக்கப்படாமல் இருந்தது.

2009-ம் ஆண்டு முதல் ஜூலை 7-ம் தேதி உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1550-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதிதான் ஐரோப்பிய கண்டம் முழுவதற்கும் சாக்லேட் அறிமுகமான நாள் என்று கண்டறிந்ததைத் தொடர்ந்து அந்நாள் உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் நமக்கு மிகவும் பிடித்த சாக்லேட்களைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்…

ஆரம்ப காலத்தில் சாக்லேட்கள் பானமாக மட்டுமே அருந்தப்பட்டு வந்தன. அதை கடவுளின் உணவு என்றும் மயன் காலத்து மக்கள் நம்பினர்.

அப்போது அதன் சுவை சற்றே கசப்பாக இருந்தது. ஆனாலும் அதை பருகும்போது உற்சாகமும், வலிமையும் உண்டாவதாக மக்கள் நம்பினர்.

சாக்லெட் விதைகளைத் தனியாக சாப்பிட முடியாது என்பதால் சிலர், தேன், பால், பழம் போன்றவற்றில் பிசைந்தும் சாப்பிட்டு வந்தார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் ஃப்ரை என்பவர் 1847-ம் ஆண்டில் சாக்லேட் பாரை கண்டுபிடித்தார். அவரது ப்ரை அண்ட் சன்ஸ் நிறுவனம் கடித்து தின்னக்கூடிய சாக்லேட்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டானியல் பீட்டர் என்பவர்தான் முதன்முதலில் 1875-ம் ஆண்டில் மில்க் சாக்லேட்டைக் கண்டுபிடித்தார்.

இதற்காக அவர் சுமார் 8 ஆண்டுகள் பல்வேறு சோதனைகளைச் செய்துள்ளார். இந்த 8 ஆண்டுகளில் தனக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளையும், தோல்விகளையும் கடந்து அவர் இந்த சாக்லேட்டைக் கண்டுபிடித்தார்.

மயன்களின் காலத்தில் சாக்லேட்கள் தயாரிக்க பயன்படும் கோகோ விதைகள், நாணயங்களைவிட அதிகவிலை உயர்ந்ததாக கருதப்பட்டது. அதனால் அதை பலரும் பணத்துக்குப் பதிலாக பயன்படுத்தி வந்தனர். ஒரு முயல் குட்டியை வாங்குவதற்கு ஒரு கோகோ விதை போதுமானதாக இருந்தது.

டார்க் சாக்லேட்களைப் பயன்படுத்துவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் காண்டுபிடித்துள்ளனர்.

அதிலுள்ள flavonoids எனும் சத்து மூளைக்கான ரத்த ஓட்டத்தைத் தூண்டி ஞாபகசக்தியை அதிகரிக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.

இரவில் நிம்மதியான உறக்கத்தைப் பெறவும் டார்க் சாக்லேட்கள் உதவும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உலகின் விலை உயர்ந்த சாக்லேட் என்ற பெருமை நெதர்லாந்து நாட்டின் ‘லா மேட்லைன் ஆ ட்ருஃபே’ (‘La Madeline au Truffe’) என்ற சாக்லேட்டுக்கு உள்ளது இந்த சாக்லேட்டின் விலை 2,600 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்புப்படி 6.22 லட்சம் ரூபாய்.

சாக்லேட்களில் theobromine என்ற ரசாயனம் இருப்பதால் அது நாய்களுக்கு ஆகாது. சாக்லேட்களை நாய்களுக்குக் கொடுத்தால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படும்.

சாக்லேட்களுக்கான கோகோவை தரும் கோகோ மரங்கள் சராசரியாக 100 ஆண்டுகள் வரை இருக்கும் தன்மையுடையவை. அதிகபட்சமாக சில மரங்கள் 200 ஆண்டுகள் வரை இருக்கும்.

அதேநேரத்தில் இம்மரங்களை நட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவை காய்க்கத் தொடங்கும்.

இரண்டாம் உலகப் போரின்போது ராணுவ வீரர்களுக்கான ரேஷனில் சாக்லேட்டும் இடம்பெற்றிருந்தது.

ஆண்டுதோறும் 110 பில்லியன் டாலர் மதிப்புக்கு சாக்லேட்கள் விற்கப்படுகின்றன. உலகில் உற்பத்தியாகும் சாக்லேட்களில் சுமார் 50 சதவீதத்தை அமெரிக்கர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.

உலகில் அதிகம் சாக்லேட் விற்பனையாகும் இடம் பிரஸல்ஸ் விமான நிலையம். இங்கு ஆண்டுதோறும் 800 டன் சாக்லேட்கள் விற்கப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் எடை 5,792 கிலோ.

சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக விளைகிறது.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் அருங்காட்சியகம் பெல்ஜியம் நாட்டில் உள்ளது.

காதலர் தினத்தில் ஜப்பானிய பெண்கள், இதய வடிவத்தில் செய்யப்பட்ட சாக்லேட்களை தங்கள் காதலர்களுக்குக் கொடுப்பார்கள்.

மாவீரன் நெப்போலியன் சாக்லேட்களை அதிகம் விரும்பியதாகவும், மனதளவில் தளரும்போதெல்லாம் சாக்லேட் பானங்களை அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

– சுதிர்

Comments (0)
Add Comment