ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான சம்பவம்தான் என்றாலும், கடந்த 2 வாரங்களில் அது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்த 2 வாரங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது ஜப்பான் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டூம்ஸ்டே என்று அழைக்கப்படும் துடுப்பு மீன்களுக்கும் உலக அழிவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது.
பொதுவாக கடலின் ஆழமான பகுதியில் இருக்கும் இந்த மீன்கள் மேல்பரப்புக்கு வராது.
பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் நேரத்தில்தான் மேலே வரும். அதனால் மீனவர்களின் வலைகளில் சிக்காது.
ஆனால், கடந்த சில காலமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பிடிபட்ட துடுப்பு மீன், 30 அடி நீளமுடையதாக இருந்ததோடு மின்னும் வெள்ளி நிறம், ரிப்பன் போன்ற உடல் அமைப்பு மற்றும் அதன் தலையில் சிவப்பு துடுப்பைக் கொண்டிருந்தது.
துடுப்பு மீன் பூகம்பம் அல்லது சுனாமியை முன்னறிவிக்கும் அறிகுறிகளுடன் தொடர்புடையது என்பதால் பெரிய அளவில் பூகம்பம் அல்லது சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் ஜப்பானியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதோடு சேர்த்து ஜூலை 5-ம் தேதி உலகில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்படலாம் என்ற ஜோதிடக் கணிப்பு மங்கா காமிக் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இப்போது ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், அந்தக் கணிப்பும், துடுப்பு மீன்களும் நாட்டுக்கு வரும் ஆபத்தைத்தான் முன்கூட்டியே சொல்லியுள்ளதோ என்ற அச்சம் ஜப்பானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜப்பானுக்கு சுற்றுலா செல்பவர்களும் தங்கள் பயணத்தை தள்ளிவைத்துள்ளனர். அந்நாட்டின் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாத ஜோதிடக் கணிப்புகளை நினைத்து மக்கள் பயப்பட வேண்டாம் என்று ஜப்பானிய அரசு மக்களிடம் கேட்டுள்ளது.
அதேநேரத்தில் ஜப்பானில் மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையத்தின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கண்காணிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
ஜப்பானில் கடந்த 2 வாரங்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்நாட்டு மக்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
“அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களாலும், துடுப்பு மீன் கடற்பரப்புக்கு மேலே வருவதாலும் அச்சமாக இருக்கிறது. இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஜப்பானில் உள்ள டொகாரா தீவுதான் இந்த நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்துக்கு முன்பு ஒவ்வொரு முறையும் பெருங்கடல் பகுதியில் இருந்து பெரிய ஓசை கேட்பதாக அத்தீவில் வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள்.
தொடர் நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டுக்கு 39 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். ஆனால், நிலநடுக்கம் மற்றும் சுனாமி அச்சத்தால் இப்போது அது வெகுவாகக் குறைந்துள்ளது.
ஜப்பானுக்கு ஹாங்காங்கில் இருந்துதான் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டு இருந்தனர்.
ஆனால், இப்போது ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு செல்லும் விமானம் பெருமளவில் குறைக்கப்படும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மங்கா காமிக் புத்தகத்தின் கணிப்பைப் பார்த்து (Manga prediction) ஜப்பானியர்கள் பயப்படுவதற்கும் காரணம் இருக்கிறது.
ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பெல்லாம் இந்த காமிக் புத்தகம் முன்பே கணித்துள்ளது.
உதாரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுனாமியில் 20 ஆயிரம் ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர்.
இதை அந்த புத்தகம் முன்பே கணித்திருந்தது.
அதுபோல் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் கணித்திருந்தது. அந்த வகையில் ஜூலை 5-ம் தேதி நிலநடுக்கம் ஏற்படும் என்று அந்த புத்தகம் கணித்துள்ளது.
இந்த முறை அந்தக் கணிப்பு பொய்யாக ஜப்பானியர்களுடன் சேர்ந்து நாமும் பிராத்தனை செய்வோம்.
– பி.எம்.சுதிர்