விஜய்யின் முதல்வர் அறிவிப்பு எதைக் காட்டுகிறது?

தமிழக வெற்றிக் கழகம் துவக்கப்பட்டதிலிருந்தே என்னதான் அடுத்தக்கட்டத் தலைவர்கள் என்று சிலர் அடையாளம் காட்டப்பட்டாலும் எப்போதும் மையப்புள்ளியாக விஜய்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைச் சுற்றித்தான் கட்சி சுழன்றிருக்கிறது. முக்கிய அறிவிப்புகளை அவரேதான் வெளியிட்டிருக்கிறார்.

வெக வெற்றி பெற்றாலும் விஜய் முதல்வர் வேட்பாளராக இல்லாமல் அவர் சுட்டிக் காட்டுகிற இன்னொருவர்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றுகூட அடிக்கடி தவெக பற்றிப் பேசப்பட்டது.

அவருக்காக தொலைக்காட்சியில் வாதாடிய பிரச்சாரகர்கள்கூட அப்படித்தான் சொல்லி வந்தார்கள்.

தற்போது நிலைமை மாறி பனையூரில் கூடிய தவெக செயற்குழுவில், “விஜய்தான் முதல்வர் வேட்பாளர். அவர்தான் கூட்டணிக் குறித்து முடிவெடுப்பார்” என முன்கூட்டியே அறிவித்திருக்கிறார்கள்.

செயற்குழுவில் பேசிய தலைவரான விஜயும், தெளிவாக “பாஜகவுடன் கூட்டணி இல்லை. கொள்கை எதிரிகள், மக்களைப் பிளவுபடுத்தும் மதவாத சக்திகளுடனும் கூட்டணி இல்லை. திமுக, பாஜகவிற்கு எதிராகவே எப்போதும் தவெக இருக்கும்” என்றும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

இதன்மூலம் கடந்த இரு மாதங்களாக காட்சி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், “விஜய் அந்தக் கூட்டணிப் பக்கம் போவார், இந்தக் கூட்டணிப் பக்கம் வருவார்” என்று தொலைக்காட்சியில் தொடர்ந்து தவெகவின் கூட்டணிப் பற்றி வியூக மன்னர்கள் அலசி ஆராய்ந்து காயப்போட்ட பழைய துணிகளையெல்லாம் அப்புறப்படுத்தி இருக்கிறார் விஜய்.

இவ்வளவுக்கும் பாஜக தரப்பில் விஜய்க்கு ஒரு காவித்துண்டு வரவேற்பைக் கொடுக்க ஆயத்தமாக இருந்தார்கள் பாஜகவினரும், அதிமுகவினரும்.

குறிப்பாக அதிமுக விஜய் தரப்பிடம் மிக மென்மையாகவே இதுவரை நடந்துகொண்டிருக்கிறது.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கூட்டணிப் பிரச்சனையில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. சென்னைக்கு வந்து ஒருநாள் தங்கி அதிமுகவினரை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கூட்டணியை உறுதிப்படுத்தியபோது, மௌனமாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. 

அதன்பிறகு டெல்லிக்குச் சென்றபிறகு அதே அமித்ஷா அளித்தப் பேட்டியில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதில் பாஜக பங்குபெறும் என்றும், யார் முதலமைச்சர் என்ற கேள்விக்கு அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் இருப்பார் என்றும் அமித்ஷா கொடுத்த பேட்டி பலதரப்பட்ட சந்தேகங்களை எழுப்பி தொலைக்காட்சி விவாதங்கள் வழியே புகைந்தது. 

பற்றாக்குறைக்கு, மதுரையில் நடந்த முருகன் மாநாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகும் திராவிட இயக்கங்களைப் பற்றிய விமர்சனத்தை முன்வைத்த காணொளியை எவ்வித தயக்கமுமின்றி பாஜகவின் அனுமதியோடு, மாநாட்டில் ஒலிபரப்பி அதுவும் சர்ச்சையானது. 

அதற்காக, பதில் விளக்கம் சொல்லியே அதிமுகவின் அதிகாரபூவமான பேச்சாளர்கள் தொண்டைக் காய்ந்து போனார்கள். படு விசித்திரமான, தலைசுற்றும் விவாதங்களையெலலாம் அவர்கள் முன் வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த சமயத்தில்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர், விஜயைக் கூட்டணிக்கு வரச்சொல்லி, பேச்சின் மூலமாக நூல் விட்டார்.

அப்படி விடப்பட்ட நூலுக்கும் முயற்சிக்கும் துடிப்பிருக்கிறதா என்பது போகபோகத்தான் தெரியும்.

ஒருவேளை பாஜக கூட்டணியிலிருந்து விலகிக்கொள்ள அதிமுக முடிவெடுத்துவிட்டதா?

அதனால்தான் விஜய் இப்படியெல்லாம் செயற்குழுவில் அறிவிக்கிறாரா? என்பதைப் பார்த்தால், விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த விதம்தான் இடிக்கிறது. 

தன்னைத்தவிர இன்னொருவர் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்படுவதை அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி விரும்புவாரா?

அப்படியென்றால், இதற்கு முந்திய கூட்டமொன்றில், விஜய் கூட்டணி ஆட்சிப்பற்றி அறிவித்திருந்தார். அப்படி என்றால் விஜயுடன் கூட்டணி சேரப்போகிறவர்கள் யார்? 

திமுக மீது சற்றே அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் விலகி தவெக பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புவார்களா?

இன்னும் சில கட்சிகளுடன் பேசிய அனுபவத்துடன்தான் இத்தகைய அறிவிப்பை விஜய் வெளியிட்டிருக்கிறாரா?

அதிலும் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுக்க பயணம் போகும் திட்டத்தைத் துவக்க இருக்கும் நிலையில், திமுகவினர் “ஓரணியில் திரளுவோம்” என்கின்ற பிரச்சாரத்தை துவங்கியிருக்கிற நிலையில், தான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார்.

இதன்மூலம் திமுக, பாஜக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 5 பிரிவுகளாகப் பிரிந்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகின்றனவா? அல்லது இதே கட்சியில் கூட்டணி மாறி நான்காக மாற வாய்ப்பிருக்கிறதா? என்பதெல்லாம், சில மாதங்களுக்குள் புலப்பட்டுவிடும்.

விஜய் நடிக்கும் திரைப்படத்தில்தான் எத்தனையோ டுவிஸ்ட்கள் வரும் என்றால், அதேமாதிரி டுவிஸ்ட்கள் அவர் நடத்தும் கட்சியில்கூட வரும்போலிருக்கிறது.

இன்னும் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருப்பதற்குள் எத்தனை டுவிஸ்ட்களை தமிழக வாக்காளர்கள் சந்திக்க இருக்கிறார்களோ? 

– யூகி 

Comments (0)
Add Comment