106 குழந்தைகள் பெற்ற டெலிகிராம் நிறுவன அதிபர்!

மகாபாரதத்தில் திருதராஷ்டிரருக்கு 100 குழந்தைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்திருப்போம். ஆனால் அது சாத்தியம்தான் என்று இந்த நவீன காலத்தில் நிரூபித்துள்ளார் டெலிகிராம் நிறுவனரான பாவெல் டுரோவ் (pavel durov). தனக்கு மொத்தம் 106 குழந்தைகள் இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

ஒருவருக்கு எப்படி 106 குழந்தைகள் என்ற கேள்வி நமக்கு வரலாம். அதற்கும் ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் பாவெல் டுரோவ்.

தன்னுடைய 106 குழந்தைகளில் 6 குழந்தைகள் மட்டுமே தனக்கு இயற்கையாக பிறந்தவர்கள் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த குழந்தைகளை தனது 3 மனைவிகள் மூலம் அவர் பெற்றுள்ளார்.

மீதமுள்ள 100 குழந்தைகள் அவருடைய விந்தை தானம் செய்து அதன் மூலம் பிறந்தவர்களாம்.

இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது விந்தை தானம் செய்து வருகிறாராம். இதன்மூலம் 12 நாடுகளில் இவருக்கு 100 குழந்தைகள் இருக்கின்றன.

106 குழந்தைகளைப் பெற்றதுடன் நிற்காமல் அவர்களுக்கான சொத்துகளையும் சேர்த்திருக்கிறார் பாவெல் டுரோவ். அப்படி அவர் சேர்த்த சொத்தின் மதிப்பு 17 பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்புப்படி 1,46,200 கோடி ரூபாய்.

இந்த மொத்த சொத்துகளையும் தனது 106 குழந்தைகளுக்கும் சமமாக பிரித்து எழுதி வைத்திருக்கிறார் பாவெல் டுரோவ்.

பிரெஞ்சு பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“என் குழந்தைகள் எனக்கு நேரடியாக பிறந்ததா, இல்லை விந்தை தானம் செய்து நவீன முறையில் பிறந்ததா என்று வித்தியாசம் பார்க்க நான் விரும்பவில்லை. எப்படிப் பிறந்தாலும் அவர்கள் என் குழந்தைகள். அதனால் அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுப்பது என் கடமை” என்று பாவெல் டுரோவ் சொல்லியிருக்கிறார்.

இவர் தனது சொத்துகளை சமமாக பிரித்ததன் மூலம் ஒவ்வொரு வாரிசுக்கும் இந்திய மதிப்பில் 1,379 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் அவர்கள் அதை நினைத்து அதிகம் சந்தோஷப்பட முடியாது. ஏனென்றால் அந்த சொத்துகள் அவர்களுக்கு உடனடியாக கிடைக்காது. 2055-ம் ஆண்டில்தான் கிடைக்கும். தனக்கு இப்போது 40 வயதே ஆவதால் உயிலில் இப்படி ஒரு நிபந்தனையை சேர்த்திருக்கிறார் பாவெல் டுரோவ்.

”நான் என் வாரிசுகளுக்கு 30 ஆண்டுகள் கழித்தே சொத்துகளை பிரித்துக் கொடுப்பேன் என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

அடுத்த 30 ஆண்டுகள் அவர்கள் யாரையும் சார்ந்து வாழாமல் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே இதற்கு காரணம்” என்று இந்த பேட்டியில் பாவெல் டுரோவ் சொல்லியிருக்கிறார்.

பாவெல் டுரோவ் மீது சர்வதேச அளவில் பல வழக்குகள் இருக்கின்றன. அவரது டெலிகிராம் நிறுவனம் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறி பல்வேறு நாடுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ஒரு சிலரால் இவரது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் இவர் தனது சொத்துகளுக்கு உயில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி ஒரு அப்பா கிடைக்க பாவெலின் குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

– பி.எம்.சுதிர் 

Comments (0)
Add Comment