இரு மாநிலத் தேர்தல்: உருண்ட தலைகள்!

அண்மையில் நடைபெற்று முடிந்த இரு மாநிலத் தேர்தல்களில், சில பெரிய தலை(வர்)களின் கட்சிகள், படுதோல்வியைச் சந்தித்து, தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கின்றன. அவர்களில் சிலர் குறித்து பார்க்கலாம்:

பாதாளத்தில் விழுந்த தேவிலால் பேரன்:

முன்னாள் துணைப் பிரதமரான தேவிலால், அரியானாவில் செல்வாக்கு மிக்கத் தலைவராக விளங்கியவர். லோக்தளம் கட்சியின் தலைவராக இருந்தார்.

அவரது கொள்ளுப்பேரன் துஷ்யந்த் சவுதாலா. இவரும் அந்தக் கட்சியில் இருந்தவர்தான்.

சகோதர யுத்தம் காரணமாக லோக்தளம் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன் விலகி, ஜனநாயக ஜனதா கட்சியை ஆரம்பித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவரது கட்சி 10 தொகுதிகளில் ஜெயித்தது.

அந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், துஷ்யந்த் ஆதரவைப் பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. துஷ்யந்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

‘இவர்தான் அடுத்த தேவிலால்‘ என ஊடகங்கள் எழுதின. ஆனால் அவரது, தலையில் அப்படி எழுதவில்லையே.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இவரை, கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டது பாஜக. இதன் தொடர்ச்சியாக 7 எம்.எல்.ஏ.க்கள், இவரைவிட்டு விலகி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்கள்.

இந்தத் தேர்தலில் துஷ்யந்த் கட்சி, ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அவரது கட்சி ஒரு இடத்திலும் வெல்லவில்லை. உச்சனா கலன் தொகுதியில் போட்டியிட்ட துஷ்யந்த் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வாங்கி ‘டெபாசிட்’டையே பறிகொடுக்க நேரிட்டது.

கடந்த தேர்தலில் சுமார் 15 % ஓட்டுகள் பெற்ற இவரது கட்சி, இப்போது 1சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார் துஷ்யந்த்.

மெகபூபா முப்தி:

ஜம்மு-காஷ்மீரில் முதலமைச்சராக இருந்தவர் மெகபூபா முப்தி. இவரது தந்தை முப்தி முகமது சயீத்தும், அந்த மாநிலத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார்.

அவர் ஆரம்பித்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் இப்போதைய தலைவராக உள்ளார் மெகபூபா.

ஜம்மு காஷ்மீர் தேர்தலில், மக்கள் ஜனநாயகக் கட்சி, தனித்து போட்டியிட்டது. ‘தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அனைத்து பெரிய கட்சிகளும் ஆதரவு கேட்டு தன்னிடம் வருவார்கள். அப்போது பேரம் பேசலாம்’ என கனவு கண்டார் மெகபூபா.

ஆனால், அந்தக் கட்சி வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மெகபூபா மகள் இல்திஜா முப்தி, பிஜ்பெஹாரா சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

அங்கு அவர், தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் பஷீர் அகமதுவிடம் தோல்வி அடைந்துள்ளார்.

‘கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை’ என்ற பழமொழி மெகபூபா கட்சிக்கு சாலப்பொருந்தும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இவரது கட்சி 28 தொகுதிகளில் வாகைசூடி இருந்தது. இப்போது வெறும் மூன்று.

குலாம் நபி ஆசாத்:

‘எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்’ எனும் சினிமா வசனத்துக்கு இன்றைய சூழலில் பொருத்தமான அரசியல் முகம் – குலாம் நபி ஆசாத்.

காஷ்மீர் முதலமைச்சராக இருந்த அவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பிற மாநிலங்களில், காங்கிரஸ் கூட்டணியில், பிரச்சினை உருவாகும்போது, கட்சி மேலிடம் ஆசாத்தைத்தான் அனுப்பி வைக்கும்.

அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருந்த ஆசாத், இரண்டு ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ‘ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி’ எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்தார்.

ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் ஆசாத் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை.

பெருஞ்சோகம் என்னவெனில் 5 தொகுதிகளில் ஆசாத் கட்சி வேட்பாளர்கள், ‘நோட்டா’வைவிடக் குறைந்த வாக்குகள் வாங்கி, முகம் கறுத்து நிற்கிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்காலத்தை தொலைத்த முக்கிய தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத் என்றால் மிகை அல்ல.

– மு. மாடக்கண்ணு.

Comments (0)
Add Comment