மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விசிக!

பானைச் சின்னத்தை நிரந்தரமாகக் கேட்க திட்டம்

தலித் மக்களின் உரிமைகளுக்காக மதுரையைத் தளமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு, ‘தலித் பாந்தர்‘. அதனை, 1989-ம் ஆண்டு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சி என மாற்றியமைத்தார், தொல். திருமாவளவன்.

அந்தக் கட்சி, முதன்முதலாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் களம் இறங்கியது. ஜி.கே மூப்பனாரின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது.

சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். அப்போது தான் அவர், தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்தார்.

2004-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிதம்பரத்தில் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றார்.

சட்டசபைக்குள் நுழைந்தார்

2001-ம் ஆண்டு திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்தது. மங்களூர் சட்டசபைத் தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன், முதன்முதலாக வெற்றியை ருசித்தார். அதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி கிடைத்தது.

2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 2 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றது விடுதலைச் சிறுத்தைகள்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் முதன்முறையாக வென்றார் தொல்.திருமாவளவன்.

2014 மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 2 தொகுதிகளிலும் விசிக தோல்வி அடைந்தது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த வி.சி.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

சிதம்பரத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்திலும் விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டதால், மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இப்போது நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன், 5 லட்சத்து 5 ஆயிரத்து 54 வாக்குகள் பெற்றுள்ளார். சுமார் ஒரு லட்சத்து 3000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் ஜெயித்துள்ளார்.

விழுப்புரத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 4,77,033 வாக்குகள் பெற்று சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இரு தொகுதிகளில் வெற்றியும், 2 சதவீத வாக்குகளையும் வி.சி.க. பெற்றுள்ளது. பானை சின்னத்தில் போட்டியிட்டு இருவரும் வென்றனர்.

மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி 2 எம்.பி-க்களையும் 2 சதவீத வாக்குகளையும் பெற்றால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற முடியும். அதன்படி மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தேர்தல் அரசியலில் வெள்ளி விழாவைக் கொண்டாடிவரும் நிலையில், வி.சி.க-வுக்கு மாநில அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “1999 ஆம் ஆண்டில் இருந்து, எங்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றி வந்துள்ளது.

தற்போது அந்த இலக்கை விசிக அடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை அணுகி அங்கீகாரம் பெறுவதோடு, பானை சின்னத்தை நிரந்தரச் சின்னமாக கேட்க உள்ளோம்” என தெரிவித்தார்.

அங்கீகாரத்தைப் பெறுவதற்கு வி.சி.க., வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கும்.

– மு.மாடக்கண்ணு

RavikumarThirumaThirumavalavanthol thirumavalavanvckviduthalai siruthaigal katchiதலித் பாந்தர்தொல்.திருமாதொல்.திருமாவளவன்பானைரவிக்குமார்விசிகவிடுதலை சிறுத்தைகள் கட்சி
Comments (0)
Add Comment