அப்போதெல்லாம் வீடுகளில் தாழ்வாரங்களும்
தாழ்வாரங்களில் சிட்டுக்குருவிகளும் இருந்தன
தாழ்வாரம் முழுவதும்
குப்பைகளும் குச்சிகளும்
சிதறுவதுபற்றி கவலைப்படாமல்
சிட்டுக்குருவிக்கு
சீமந்தம் நடத்தாத குறையாக
அதன் முட்டைகள் பாதுகாக்கப்பட்டன
கொட்டாங்கச்சியில் வைத்த பாலை
சிட்டுக்குருவிகள்
பயப்படாமல் குடித்துப் போயின
தாழ்வாரங்களில் குழந்தை ரயில் ஓடியது
மரப்பிளாச்சுகள் அலங்கரித்த
தாழ்வாரத்தை மறக்கத்தான் முடியுமா?
கிராமத்து வீட்டின்
தாழ்வாரத்து மூலையில்
மழைக்காக கட்டப்பட்ட
ஆட்டுக்குட்டிகளின்
புழுக்கைவாசத்தால் நிரம்பியிருக்கும்
தாழ்வாரத்தரையெங்கும்
சிதறிக்கிடப்பது
பஞ்சு றெக்கைகள் அல்ல
அவை சிட்டுக்குருவிகளின்
உதிர்ந்த முத்தங்கள்
காணவில்லையாம் தாழ்வாரங்களை
யார் சொன்னது?
சிட்டுக் குருவிகளின்
கீச்சொலி கேட்கும்
தாழ்வாரம் பத்திரமாக இருக்கிறது
என் நினைவுகளில் ….
– தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய கவிதை… முகநூலில் இருந்து.