நூல் அறிமுகம்: உலை வாங்கு மிதி தோல்
பெண் சார்ந்த உணர்வுகளை நோக்கிக் குவிமையப்படுத்தப்பட்ட கவிதைகள் இவை. சகோதரி சுமித்ராவின் பல கவிதைகள் பெண் குறித்த கரிசனம் கொண்டவை.
அவர் பறவை பற்றி பேசினால் அதை நேர்ப்பொருளில் ‘பறவை’ என்று எடுத்துக் கொள்ளலாகாது.
அவர் குறிப்பிடும் ‘பறவை’ என்னும் சொல்லுக்குள் இருப்பது குடும்பச் சுமையின் கனத்தால் அழுத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஆன்மா.
தாமதமாய் கூடு திரும்பும்
நீர்ப் பறவை ஒன்றின்
தனித்த குரல்
தவித்துப் பறக்கிறது.
‘பறவை’யை குறியீடாக்கி சொல்லப்பட்ட இன்னொரு கவிதை ஆண் பெண் இயல்பின் மற்றொரு பரிமாணத்தைப் பேசுகிறது.
பறவையொன்று
கடலிலிருந்து கவ்விச்செல்லும்
ஒற்றை மீன் போலத்தான்
ஒரு பெண் ஒரு ஆணை…
மடிவலையோடு
கடலின் அடிமடியில்
இறங்குவது போலத் தான்
ஓர் ஆண் பல பெண்களை…
உடலின்பத்திற்கான வாய்ப்பாகத் தான் காதலை அணுகுகிறான் ஆண். ஆனால் பெண், அவளின் உயிர்த் தன்மையைத் தொட்டுவிடத்தக்க பேரன்பு கொண்டிருப்பதாக ஒருவனை அவள் உணரும் தருணத்தில்தான் அவளின் காதல் சாத்தியம் என்பதால் ஓர் ஆணை மட்டுமே அவளால் கண்டுகொள்ள இயலும்.
மனம் என்னும் மேடையில் சில காட்சிகள் இன்னெதென உணர்ந்துகொள்ளவியலாத விதத்தில் கலங்கலாக மிக விரைந்து நகர்கின்றன.
இன்னும் சில மிக மெதுவாகவும் சலனிக்கின்றன. அரிதான ஓரிரு காட்சி மனத் திரையில் உறைந்து நின்றுவிடுகிறது.
வேகமாய்
திரைதள்ளிக்கொண்டிருந்த விரல்
திடுமென
நிறுத்தி நிதானித்து
நகராமல் பிடித்து வைக்கிறது
அந்த நாழியை
எப்படிப் புரிந்தது
விரல் நுனிக்கு?
சுய அடையாளங்களின் நினைவுகள் அழிவதின் தருணத்தில் நிகழும் திகைப்புதான் கவிதை.
சுந்தர ராமசாமி நாயை படிமமாக்கி உருவாக்கிய கவிதை, அது எழுதப்பட்ட காலத்தில் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கியது.
சுமித்ரா எழுதிய இந்தக் கவிதை, அன்பு முலாம் பூசப்பட்ட அதிகாரத்தை நாய் என்ற படிமம் வழியாகச் சொல்கிறது:
இங்கு எல்லோருக்குமே
ஒரு நாய் தேவைப்படுகிறது
காட்டுகிற இடத்தில் குரைக்க
நீட்டுகிற இடத்தில் குழைய
ஒரு சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த சிறுபெண்ணின் மனப்புலம்பலாக வெளிப்படும் இக்கவிதையை வாசிக்கையில் நம் இதயத்தைச் சூழ்ந்த சில பாறைகள் நெகிழ்த்தப்பட்டு ஒரு துளி ஈரமாவது விழிகளை நனைக்கும்.
சிலேட்டில் எழுதிப் பழகும் காலத்தில்
ஏன் அழுக்குத் துணிகளில்
குறியும் கோடும்
இட்டுக்கொண்டிருந்தேன்
தெரியவில்லை அப்பொழுது
வேளாண்மை பண்பாடு சார்ந்த சில காட்சிகள் இத்தொகுப்பில் உருவகமாகவோ, படிமமாகவோ காட்டப்படுவது இவற்றின் கவித்திறனை மேம்படுத்துகிறது.
நடுவதற்கு அரித்துவைத்த
நாற்றுகள் நாமென்றே
களைகளும்
எண்ணிக்கொள்கின்றன.
போர்க்கால அகதி முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் மக்களின் உருவகமாக இந்தக் களைச்செடிகள் காட்சியளிக்கின்றன.
************
உலை வாங்கு மிதி தோல்
(கவிதைத் தொகுப்பு)
சுமித்ரா சத்தியமூர்த்தி
வாசகசாலை பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 99426 33833
கே.பி. கூத்தலிங்கம்.
எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்,
koothalingampalaniyappan@gmail.com
நன்றி: தி இந்து தமிழ் திசை