100 வயதைக் கடந்து வாழ்ந்த ஸ்பேனிஷ் மொழிக் கவிஞர் நிகானோர் பார்ரா நவீன வாழ்க்கையின் அபத்த நியாயங்களைத் தனது நையாண்டியும், கேலியும் கலந்த தொனியில் கேள்விக்கு உட்படுத்தி என் கவிதையைப் பெரிதும் பாதித்து இருந்தார்.
அவர் தன் எதிர் – கவிதைகளில் பயன்படுத்திய டெக்னிக்குகளில் எவை தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துமோ அவற்றை என் கவிதையில் பயன்படுத்தினேன்.
தமிழில் நான் எழுதிய ‘எதிர்’ – கவிதைத் தொகுதி “மேசை மேல் செத்த பூனை” – 2018இல் வெளியிட்டேன்.
28 கவிதைகள். அட்டையில் உயிருள்ள ஒரு பூனை “I AM DEAD” என்று எழுதப்பட்ட அட்டையைத் தாங்கி நிற்கும் புகைப்படத்தை வைத்தேன்.
“நான் செத்து விட்டேன்” என்பதை ஒரு உயிருள்ள பூனை சொல்லும் விதமாக நமது இன்றைய வாழ்க்கையின் அபத்தத்தை நான் பரிகசித்தேன்.
இரட்டைக் கவிதை என்ற ஒன்றை பரிட்சை செய்து பார்த்தேன். முதல் கவிதையில் சாகப்போகும் பூனை பற்றி எழுதி வந்து கடைசியில் அப்பாவைக் காலையிலிருந்து காணவில்லை என்று முடித்தேன்.
அடுத்த கவிதையில் “சரக்கடிக்கும் அப்பா” பாக்கட் மனி வீட்டில் கொடுக்காததினால் டாஸ்மாக் போவதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பது பற்றி எழுதி கடைசியில் பூனை செத்துக் கிடப்பது பற்றி எழுதினேன்.
இரு கவிதைப் பிரதிகள் ஒன்றையொன்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் ஒரு கவிதைப் பரிசோதனை இது.
1914இல் நிகனோர் பார்ராவின் முதல் கவிதைத் தொகுதி வெளிவந்தபோது அவருக்கு வயது 23. அந்த வயதுக்கே உரிய துணிச்சலுடன் அவர் தனது கவிதைகளில் மொழியை உரைநடையை நோக்கி நகர்த்தியிருந்தார்.
எழுத்து மொழிக்கான நெருக்கமான கட்டமைப்பைத் தளர்த்தி, பேச்சு மொழியை நோக்கித் தனது கவிதைகளைச் செலுத்தினார்.
நகைச்சுவையான கவிதைகளின் உள்ளே மிகப்பெரிய சோகங்களைப் புதைத்து வைப்பதின் மூலமாகச் சோகத்தை மேலும் ஆழப்படுத்தி விடுகிறோம் என்பதை நிகனோர் பார்ரா எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
மிகத்துயரமான ஒரு விஷயத்தைக் கிண்டல், கேலியான ஒரு மொழியின் மூலம் பேசும்போது சோகம் இன்னும் ஆழமாகி விடுகிறது.
சினிமா நடிகர் நாகேஷின் பல படங்களில் மிகச் சோகமான வாழ்க்கை கொண்ட நாகேஷ் எப்போதும் நகைச்சுவையாகப் பேசும்போது நமக்கு அந்த கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் மேலும் அதிகரித்து விடுகிறது.
இதே டெக்னிக்கைத்தான் நிகனோர் பார்ரா தன் எதிர் கவிதைகளில் பயன்படுத்துகிறார்.
இதனைத்தான் நான் எனது “மேசைமேல் செத்த பூனை” எனும் எனது எதிர் – கவிதைகள் தொகுப்பில் எழுதினேன்.
– நன்றி: முகநூல் பதிவு