காலத்தைக் கூட கரைத்து விடுகிறது மழை!

நூல் அறிமுகம்:

தூங்காமல் விழித்திருக்கும் மனிதர்களுக்கு நிலவு ஒரு கதைசொல்லியின் கவிதைகள் பிரிவின் துயர் பகிரும் கவிதைகளைச் சொல்லிச் சொல்லி ஆற்றுகிறது.

கவிதைகள், அருகில் இல்லாத தன்துணைக்குச் சொல்ல நினைக்கும் வார்த்தைகளாக, அன்பை நினைவூட்டும் வாட்டமுற்ற பிரிவின் செய்திகளாக வெளிப்பட்டுள்ளன என்கிற பால்நிலவனின் வார்த்தைகள் நிதர்சனம்.

நானும் நீயும் வேறு வேறு அல்ல, உன்னில் இருந்து என்னை ஒளியாகவோ, நிழலாகவோ தனித்தனியே பிரித்தறியவில்லை. சுடருக்குள் நிழலாக ஒன்றியே நிற்கிறேன் என்கிறது ஒரு கவிதை.

//உன் பெயரிட்டு அழைக்கையில்
மேகம்
நதி
பறவை
மண்
தேவதை
குழந்தை
எல்லாம்
திரும்பிப் பார்க்கின்றன//
– என்கிறார் கவிஞர்.

ஆம்! பிடித்த ஒன்றை அத்தனையிலும் பொருத்திப் பார்ப்பதும் பிடித்த ஒன்று அத்தனையிலும் பொருந்திப் போவதும் இப்படி ப்ரியங்களில் தானே?!

மழை, ஆம் மழை எல்லாவற்றையும் கரைத்து விடுகிறது. கவிஞர் மழை குறித்து ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார்…

//உனக்கும் எனக்கும் இடையில்
நினைவு
மறதி
தனிமை
மௌனம்
காலம்
எல்லாவற்றையும்
கரைத்துவிடுகிறது
மழை//

ஒரு பெருமழைக்கு பின்னான பேரீரம் படர்ந்த நிலம் போல அத்தனையையும் கரைத்து விட்டுப் புதிதாய் ஒரு தொடக்கத்திற்கு தயார் செய்கிறது அந்த மழை. மண்ணை மட்டுமல்ல மனிதர்களையும் கூட…

ஆங்காங்கே அவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகளை அள்ளிச் சேர்த்து நினைவுச் சுருக்குப்பையில் பொதித்து வைத்துக் கொள்ளச் செய்தது என்னை.

அப்படி சில…

// என் நகரும் காலமே//
// அன்பே முடிவிலி //
ஆஹா!!

இங்கு பலூன்களுக்கும் உயிர் வந்து விடுகின்றன இவரது ‘வண்ணங்களுக்கு பின்னே’ எனும் தலைப்பிலான கவிதையில்.

//கடற்கரையில்
சுடப்படுவதற்கென்றே
உயிர்பெறுகின்றன
பலூன்கள்//

கணநேர உயிர் வாழ்தலுக்கென உயிர்த்தெழுதல் என்று உயிர்பெறும் உயிர்களைச் சொல்வதை நான்கு வரிகளில் நறுக்கென்று சொல்லிவிடுகிறார்.

மிச்சம் என்று இன்னொரு கவிதை…

//நடுங்குறு குளிரில்
நேற்று என் வாசலில்
நெடுநேரம்
நின்றிருந்தது இரவு

விடிவதற்குச் சற்றுமுன்
மிச்சமிருந்த கண்ணீரை

இட்டனுப்பினேன்
அதன் திருவோட்டில் //

பிரிவுத் துயரின் இரவுப் பொழுதுகளெல்லாம் முழுவதும் உழன்று, இறுதியாக விடிவதற்கு சற்று முன்னே விழிநீரை உகுக்கச் செய்கின்றன.

ஏன், இப்படி? என்கிற விடை தெரியாத கேள்விகள் எல்லாம் கழுவிரக்கத்தின் மொத்தமாய் உருக்கொண்டு உதிரும் கண்ணீரை அந்த இரவின் திருவோட்டில் இட்டனுப்புவது இறுதியில் நிகழ்கிறது.

இந்தக் கவிதைத் தொகுப்பில் வாசித்து அதிர்ந்த இன்னொரு கவிதை ‘காணாமல்போன சிறுமி’.

// காணாமல்போன
பக்கத்துவீட்டுச் சிறுமி
நட்சத்திராவை
ஆளுக்கொரு திசையில்
தேடிக் கொண்டிருந்தோம்//

இப்படி, இயல்பாகத்தான் துவங்குகிறது அந்தக் கவிதை. எங்கேனும் இருப்பாள், தெருவில், அடுத்த தெருவில், அவள் தோழியர் வீட்டில் என்று எங்கேயும் இருப்பாள் என்கிற நம்பிக்கையோடு அடுத்தவரிக்கு நகர்கிறேன்.

//அனலேறிய காற்று
அவள் பெயரை
எதிரொலித்துக்கொண்டிருந்தது

அந்தியின் ஒளிக்குழப்பத்தில்
அங்கும் இங்குமாக
அவள் பிம்பம்
தோன்றி மறைகிறது //

ஆம், இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று பார்க்கும் குழந்தைகளிலெல்லாம் அவள் சாயல்.

//போக்குவரத்து நெரிசலில்
இடது கையற்று
வலது கையை ஏந்துகிறாள்
ஒரு சிறுமி //

ஐயோவென பதறத் தொடங்குகிறது மனது…

//நடுத்தர வயதுடைய ஒருவன்
அவசர நடையில்
ஒரு சிறுமியை
அழைத்துச் செல்கிறான்//

அடிவயிறு துடிக்கத் தொடங்குகிறது. பேறு முடிந்த தாயின் வயிறு காந்தும் உணர்வு போல…

//சாக்லேட் சுற்றப்பட்ட
மெல்லிய சரிகைத்தாள்கள் காற்றில் புரள்கின்றன

நீல விழிகள் கொண்ட
ஒரு பார்பி பொம்மை
குப்பைகளோடு
ஆடையற்றுக் கிடைக்கிறது //

இங்கிருந்து அரற்றத் தொடங்கிய மனது அடுத்த வரிக்குச் செல்ல தயங்குகிறது. வேண்டாம், வாசித்து கடந்துபோகுமளவு மனோதிடம் உள்ளவர்கள் இல்லை. சிறுபிள்ளைகளை மனதுள்ளும் வயிற்றுள்ளும், சுமந்து கொண்டிருப்பவர்கள்.

இறுதியாக…

// இருளின் துக்கம்
தொண்டையைக் கவ்வ
தலைகுனிந்து எரிந்து கொண்டிருக்கின்றன
தெருவிளக்குகள்//

என்று முடிக்கிறார்.

ஆம், அவை மட்டும்தான் அத்தனைக்கும் மௌன சாட்சியாய் கையறு நிலையில் தலைகுனிந்து.

அடுத்து எந்தக் கவிதையையும் புரட்ட முடியாமல் அங்கேயே வெகுநேரம் வெறித்து நிற்க வைத்துவிடுகிறது.

விளாத்திகுளத்தின் நிகழ்வுகளை கண்முன் கொண்டுவருகிறது.

இனியும் தொடரலாம் எங்கேயும், ஏதேனும் சிறுமிகள் இப்படி கசக்கி வீசப்பட்ட அந்த சாக்லேட் கவர்களை போல…

ஆற்றாமையை அழுத்திக் கடக்கும் போது ஏதோ ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு கணத்தில் அது கழுத்தை அழுத்தி நெரிக்க தொடங்குகிறது. அப்பொழுதெல்லாம் ஒன்றுமட்டும் கேட்டுவிடும் முனைப்புதான் “ஏன் என்னைக் கைவிட்டீர்?”

ஆம் அந்த கவிதை அப்படித்தான் கேட்கிறது. அதன் தலைப்பு அதுதான். ஏன் என்னைக் கைவிட்டீர்?

// இந்தக் கவிதையை
நீங்கள் எழுதியிருந்தால்
நான் எழுத வேண்டியிருக்காது
அந்த ஈர விழிகளில்
பதுங்கிய துக்கத்தை
அகழ்ந்தெடுக்க
ஒரு சுரங்கப் பணியாளனாக
இவ்வளவு ஆழத்தில்
விழுந்திருக்க மாட்டேன்

அவரவர் சுமை
அவரவர்க்கே சரி

நீங்கள்
ஒரே ஒருமுறை
திரும்பிப் பார்த்திருந்தால்
சிறு நம்பிக்கை முளைத்திருக்கும்

ஒரு சிறு புன்னகை
ஒரு பிடிமானமாக இருந்திருக்கும்
ஒரு வார்த்தை
ஒரு சைகை
இந்த மூழ்கலைத்
தடுத்து நிறுத்தியிருக்கும்

உங்கள் மௌனம்தான்
முழுதாகக் கைவிட்டது
என்னையும்
என் கைகளிலிருந்த
அந்த கவிதையையும்//

ஆம். எல்லோரிடத்தும் சில கேள்விகள் இருக்கின்றன. சில கேட்க முடிந்தும், சிலற்றை கேட்க முடியாமல் தொண்டைக் குழியில் முடிந்து வைத்தும், சில செரிக்கவியலாமல் விழுங்கும்படியும்…

ஏன் என்னைக் கைவிட்டீர்?

கடைசியாக தொகுப்பின் அட்டையில் பதிந்திருக்கும் கவிதை,

//வட்டமொன்றை வரைந்துகொண்டிருந்தேன்
முழுமையடைவதற்குச் சற்றுமுன்
அது என்னை
உள்ளே வருகிறாயா
என்று கேட்டது//

நீங்கள் உள்ளே செல்ல வேண்டாம். எந்த வட்டத்துக்குள்ளும் அடங்குபவர் அல்ல நீங்கள்.

இப்பிரபஞ்சம் முழுவதிற்கும் சொந்தமானவர். பறந்து அலைந்து திரிந்து மேலும் பாடல்களை எழுதுங்கள், நாங்கள் வாசித்து கனத்துப் போகிறோம்.

****

நிலவு ஒரு கதைசொல்லி!
நூலாசிரியர் : கவிஞர், பாடலாசிரியர் பழனிபாரதி

கொன்றை வெளியீடு
விற்பனை உரிமை – தமிழ்வெளி
பக்கங்கள் – 80
விலை – 120/-
தொடர்புக்கு : 90940 05600

– சுமித்ரா சத்தியமூர்த்தி

Comments (0)
Add Comment