தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். ஏனென்றால் தொலைபேசியை உருவாக்கியவர் கிரகாம்பெல். பிரிட்டனைச் சேர்ந்த கிரகாம்பெல் (03.03.1847 – 02.08.1922) ஓர் ஆசிரியர்.
இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர்.
ஆனால், உதட்டின் அசைவுகளை வைத்து, சொல்ல வந்த கருத்தை எப்படி விளக்கலாம் என்று நூல் எழுதிப் புகழ்பெற்றவர்தான் கிரகாம்பெல்லின் தந்தை அலெக்சாண்டர் மெல்வில்பில்.
கிரகாம்பெல் 1871ஆம் ஆண்டு அமெரிக்காவில் காதுகேளாத, வாய்ப் பேச முடியாத பள்ளியின் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலி உணர்வதற்கான சாதனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
காது கேட்கும் திறனற்றவர்களை செயற்கைக் காதுகளால் கேட்க வைக்க முடியுமா என்ற உந்துதல் ஏற்பட, பிணக்கிடங்கிலிருந்து ஒருவரின் காதை அறுத்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
தனது உதவிக்காக தாமஸ் வாட்சன் என்பவரை வைத்திருந்தார். போஸ்டன் நகரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் கம்பி மூலம் ஒலியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.
1874-ம் ஆண்டு கிரகாம்பெல் மாடியில் ஒரு அறையிலும் வாட்சன் கீழே ஒரு அறையிலும் அமர்ந்தனர். இயந்திரம் முன்பிருந்து சில மாற்றங்களைச் செய்தார் பெல். எதிர்பார்த்தபடி இயந்திரம் வேலை செய்யவில்லை.
எனவே, வெறுப்பில் கோபத்தில் எழுந்தார். அருகிலிருந்த அமிலக் குடுவை கீழே சாய்ந்து அவரது உடையில் கொட்டியது. உடனே, உதவிக்கு வரும்படி வாட்சனை உரக்கக் கத்தி அழைத்தார்.
பெல் அழைத்தது கீழே அறையிலிருந்த வாட்சனுக்குக் கேட்டது. காரணம், டிரான்மிஷன் என்னும் இயந்திரத்தின் முன் நின்று பெல் கத்தினார். இவ்வளவு விரைவில் ஆராய்ச்சியின் பயன் கிடைத்ததை எண்ணி பெல்லும் வாட்சனும் மகிழ்ந்தனர்.
மக்களிடம் தங்கள் கண்டுபிடிப்பை எடுத்துக் கூறியபோது யாரும் நம்பவில்லை. பின்பு பிலடெல்பியாவில் ஆய்வு செய்து காட்டினர். விக்டோரியா மகாராணியார் முன்பு செயல்படுத்திக் காட்டினர். பலர் தொலைபேசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனவே, காப்புரிக்காக பெல் போராட வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகளுக்குப்பின் தொலைப்பேசியை அவர் அறிமுகப்படுத்தினார்.
இந்தக் கண்டுபிடிப்பை பயன்படுத்தி நாம் பேசும் ஒலி அலைகளை, காந்த அலைகளாக மாற்றி, மீண்டும் ஒலியாக மாற்றினார்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெலிபோனை உருவாக்கினார். இதற்காக தனி கம்பெனியை துவக்கினார்.
* 1876ல் டெலிபோன் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார்.
* 1877ல் “பெல் டெலிபோன்’ கம்பெனியை உருவாக்கினார்.
* 1879ல் இது பிரிட்டன் டெலிபோன் நிறுவனத்துடன் இணைந்தது.
* 1880ல் “அமெரிக்கன் பெல் டெலிபோன் கம்பெனி’ என மாற்றப்பட்டது.
* 1881 ஜன., 25 தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பெல் இணைந்து ஓரியன்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.
கிரகாம்பெல் தனியாக மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களைக் கண்டுபிடித்தார்.
டெலிபோன் தவிர, தந்திக் கருவி, போட்டோபோன், போனோகிராப், செலினியம் செல் போன்றவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.
1922-ல் கனடாவில் உள்ள நோவல் நகரில் கிரகாம்பெல் மறைந்தபோது அமெரிக்கர்கள் தொலைப்பேசிகளை ஒரு நிமிடம் இயங்காமல் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.