வெப்பம் பழக்கப்பட்டு இயல்பாகிவிட்ட அளவுக்கு மழை நமக்கு இயல்பாகவில்லை.
மழைக்காலம் உணர்த்தியது இதைத்தான்.
சிறிது சிறிதாக சிறுதுளியை எதிர்பார்த்திருந்தவர்களைத் திணறடித்து விட்டது பெருவெள்ளம்.
வீட்டிற்கு அருகே மழை நீரைச் சேகரிக்கிற திட்டத்திற்காக அவ்வளவு கெடுபிடிகள் செய்த தமிழக அரசு, நகரமெங்கும் பெய்கிற மழையின் போக்கிடம் பற்றி யோசித்திருக்கிறதா? இல்லை என்பதை கனமான அனுபவத்துடன் சொல்லியிருக்கிறது மழை.
வறண்டு கிடந்தவனுக்குத் திடீரென்று பணம் கிடைத்து, உடனடியாக அதைத் தவறவிட்ட மாதிரி, மழை கொட்டியும் மூன்றில் இரண்டு மடங்கு நீரைச் சேகரிக்க வழியின்றித் தவறவிட்டிருக்கிறோம்.
கடந்த காலங்களில் வெள்ளத்தினால் எவ்வளவு அலைக்கழிப்புகள்? எத்தனை நூற்றுக்கணக்கான சாவுகள்? சேதங்கள்? அழிந்த பயிர்கள்? வீடிழந்த பரிதாபங்கள்?
நிவாரணத்தைத் தன்னால் இயன்ற வரைக்கும் செய்திருக்கிறது அரசு. சந்தேகமில்லை. ஆனால் பெருமழையினால் சென்னை போன்ற பெருநகரம் பட்ட அவஸ்தைகளுக்கு யார் காரணம்! நகர்ப்புறத் திட்டங்கள் ஏன் இந்த அளவுக்குப் பலவீனப்பட்டிருக்கின்றன.
சென்னை நகரைச் சுற்றி இயற்கையான நீர் சேமிப்பு வங்கிகள் மாதிரி இருந்து வளப்படுத்திய கண்மாய்கள், ஏரிகள் எல்லாம் நகர்மயமாதலால் மேடாக்கப்பட்டு கான்கிரீட் மயமாகும்போது தண்ணீர் எங்கே வடிய வாய்ப்பிருக்கிறது? இதனால்தான் புறநகர்ப் பகுதியில் உள்ள பல வீடுகள் நீரில் மூழ்கிச் சிரமப்பட வேண்டியிருந்தது.
நகர்ப்புற நெருக்கடியை மழை வெள்ளத்தின்போது அபூர்வமாக, அழுத்தமாக உணர்கிறோம். இந்த அளவுக்கு சென்னையைத் தவிர தென்னிந்தியாவில் மற்ற நகரங்களில் அடர்த்தியான மக்கள் தொகையில்லை.
கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த அளவுக்கு அடர்த்தியில்லை. காரணம் கிராமத்து அமைதியும் நகர்ப்புற வசதியும் கிராமத்திலேயே ஒன்றிணைய முடிந்திருக்கிறது.
வசதிகள், வேலைவாய்ப்புக்கு நகர்ப்புறம் அவசியம் என்றாகிவிட்டதால், மக்கள் இங்கு குவிவது அதிகமாகி அதற்கான நெரிசலும் கூடியிருக்கிறது.
இப்படியே விரிவடைந்து கொண்டே போனால் நம்மிடம் மிஞ்சுவது இயற்கைக்கு முன்பு பதில் சொல்ல முடியாத கேள்விகள்தான்.
-16 ஆண்டுகளுக்கு முன்பு ‘புதிய பார்வை’ (2005 டிசம்பர்) இதழில் எழுதிய தலையங்கம் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது.