நாம் ரசித்த நடிகைகளுக்குக் குரல் கொடுத்த சரிதா!

இதெல்லாம் பார்த்து, “அடடா… என்ன ஒரு குரல்!”ன்னு நாம ரசிச்சிருப்போம். ஆனால், அந்தக் குரல் யாரோடதுன்னு கேட்டா… பல பேருக்கு தெரியாது!

சினிமாவில் நடிக்கிறதுங்கிறது ஒரு கலை. ஆனால், திரையில ஒருத்தர் நடிக்கிற அந்த நடிகையோட உடம்புக்கு பின்னாடி இருந்து, இன்னொருத்தர் தன்னோட குரலைக் கொடுத்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிரே கொடுக்கிறது எவ்வளவு பெரிய கலை!

அந்தக் கலையில தனக்குன்னு ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் நடிகை சரிதா.

நடிகை சரிதா… ஒரு நடிகைன்னு நமக்குத் தெரியும். ஆனா, தமிழ் சினிமாவோட “குரல் ராணி”ன்னு சொன்னா… எத்தனை பேருக்குத் தெரியும்?

நாம திரையில பார்த்து ரசிச்ச எத்தனையோ முன்னணி கதாநாயகிகள்…
அவங்க பேசுற கம்பீரமான வசனம்…
அவங்க காட்டுற பாசம்…
அவங்க கோபப்படுற அந்த ஆக்ரோஷம்…

என பல்வேறு நடிகைகளின் குரலுக்குப் பின்னாடி இருந்தவர் சரிதா.

பொதுவாக ஒரு நடிகையா ஜெயிக்கிறதே பெரிய விஷயம். ஆனால், ஒரு நடிகையா ஜெயிச்சதோட மட்டுமல்லாமல், பின்னணிக் குரல் கொடுக்கிறதுலயும் ஒரு தனி சாதனையே படைத்திருக்கிறார் சரிதா. 

500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவோட முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார் சரிதா.

சரிதாவின் குரலில் ரசித்த சில கதாபாத்திரங்களின் தொகுப்பு.

சௌந்தர்யா – அம்மன்!

அம்மன் படத்துல சௌந்தர்யா கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தது சரிதா. அந்தப் படத்துக்காக சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.

நக்மா – பாட்ஷா!

பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் துடிப்பான நடிகை நக்மாவிற்கு குரல் கொடுத்திருக்கிறார் சரிதா. 

நதியா – எம். குமரன் S/O மகாலட்சுமி!

நவீன காலத்து அம்மாவா நதியா காட்டுன அந்த கம்பீரம், அதற்குள் இருக்கும் பாசம் என்று அந்த கதாபாத்திரத்திற்கு சரிதா கொடுத்த குரல் இன்னும் கூடுதலாக நதியாவை ரசிக்க வைத்திருக்கும்.

விஜயசாந்தி – மன்னன், வைஜயந்தி IPS

விஜயசாந்தி நடிச்ச அந்த ஆக்ரோஷமான பெண் அதிகாரி கதாபாத்திரத்துக்கு, கம்பீரமான குரல் தேவை இருந்தது. அப்போது அந்த குரலுக்குத் தேர்வானவர் சரிதாதான். அவரது குரல் அந்த கதாபாத்திரத்துக்கு  கன கச்சிதமா பொருந்தியிருக்கும்.

தபு – காதல் தேசம்!

தபுவோட அந்த மென்மையான, அழகான கதாபாத்திரத்துக்கு, குரல் கொடுத்து அந்த கதாபாத்திரத்தை உயிர்த்திருப்பார் சரிதா.

இப்படி பின்னணிக் குரலில் மட்டுமல்ல,  நடிப்புலகத்துலயும் சரிதாவிற்கு ஒரு தனி இடம் உண்டு.

1978-ம் ஆண்டு கே. பாலசந்தர் அவர்களோட ‘தப்புத் தாளங்கள்’ படத்துல அறிமுகமான சரிதா, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகள்ல 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

4 மாநில விருதுகள், 6 நந்தி விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ள சரிதா, ‘மாவீரன்’ படத்தில் தன் இயல்பான நடிப்பால் நம்மை மறுபடியும் அசரடித்தார்.

ஒரு நடிகையாக மட்டுமே நாம் கொண்டாடி வரும் சரிதா, திரைப்படங்களில் தன் குரலால், பல கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த ஒரு மிகப்பெரிய கலைஞராகவும் திகழ்கிறார்.

தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சரிதா ஒரு நடிகை மட்டுமல்ல, தமிழ் சினிமா கண்ட ஒரு அற்புதமான பின்னணிக் குரல் கலைஞர், குரல் ராணி, தமிழ் சினிமா கண்ட அரிதான பொக்கிஷங்கள்ல இவரும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.

  • நன்றி: முகநூல் பதிவு 
Comments (0)
Add Comment