ஒரு நாவலை எழுதுவதற்கு ஒன்றரை ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை தேவைப்படுகிறது. எழுதியதை எடிட் செய்வதற்கு ஆறு மாத காலமாகும்.
அச்சில் நானூறு பக்கங்கள் உள்ள ஒரு நாவல் முதல் வடிவத்தில் ஐநூறு அல்லது அறுநூறு பக்கங்கள் இருக்கும். எழுதுவதைக் காட்டிலும் சவாலானது அதை எடிட் செய்து குறைப்பது.
அதேபோன்ற இன்னொரு சவால், கதைகளுக்குத் தலைப்பு வைப்பது. சில கதைகளுக்குத் தலைப்பு வைப்பதற்காக மாதக் கணக்கில் காத்திருக்கிறேன்.
நான் தினமும் ஐந்து ஆறு மணி நேரம் எழுதக் கூடியவன். ஒரு அலுவலகம் சென்று பணியாற்றுபவர் எப்படிக் காலையிலிருந்து மாலை வரை பணியாற்றுகிறாரோ அப்படி எழுத்துக்கு நேரம் ஒதுக்குகிறேன்.
வீட்டில் இருந்தாலும் அந்த நேரத்தில் என்னை யாரும் நெருங்க முடியாது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு உடனடியாக அதை எழுத்துக்கு உறுதுணையாக்கிக் கொள்வேன்.
1994 முதலாகவே கணினியிலேயே எழுதுகிறேன். இணையத்தின் வழியே பல்வேறு நாடுகளின் முக்கிய எழுத்தாளர்களுடன் மின்னஞ்சல் தொடர்பு வைத்திருக்கிறேன்.
விவாதக் குழுக்களுடன் இணைந்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்தாலும்கூடப் பெரும்பாலும் பதில் எழுதிவிடுவேன். ஒன்றிரண்டு வரிகளுக்குள் மட்டுமே பதில் எழுதுவது என் பழக்கம்.
ஒருபுறம், மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் நூறு பேரின் பெயர்களையும் நினைவிலிருந்து எப்போதும் என்னால் சொல்ல முடியும்;
ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி படைப்புகளில் எதைக் கேட்டாலும் உடனுக்குடன் சொல்ல முடியும்;
மறுபுறம், என் வங்கிக் கணக்கைக் கையாளும் கடவுச்சொல்கூட என் நினைவில் தங்குவதில்லை.
வெளியூர் விடுதிகளில் தங்கும்போது, அறை எண்ணை மறந்துவிடாமல் இருக்க அறை எண்ணைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு ‘கஜினி’ நான்.
மூளையின் ஒரு பக்கம் மட்டுமே வேலை செய்கிறதோ என்னவோ!