உங்கள் வாழ்க்கையில் வந்து சென்ற யாராவது, உங்களுக்குள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?
ஒரு சில மனிதர்களைச் சந்தித்த பிறகு, நாம் முன்பிருந்த மனிதர்களாக இருப்பதில்லை.
யாரோ ஒருவர் சொன்ன ஒரு வார்த்தை, பல ஆண்டுகளாக நமக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
யாரோ ஒருவர் காட்டிய சிறிய அன்பு, இந்த உலகத்தின் மீதான நமது நம்பிக்கையை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது.
யாரோ ஒருவர் ஏற்படுத்திய காயம், இன்றும் சில மனிதர்களிடம் நாம் எவ்வளவு நெருங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
விசித்திரமாக இருக்கிறதல்லவா?
நம் வாழ்க்கையில் சிலர் சில நிமிடங்களே இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற ஏதோ ஒன்று, நம்முடைய வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கிறது.
அதேபோலத்தான் நாமும். நாம் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போன ஒரு வார்த்தை, யாரோ ஒருவருக்கு வாழ்வதற்கான நம்பிக்கையாக மாறியிருக்கலாம்.
நாம் மறந்துபோன ஒரு சிறிய உதவியை, யாரோ ஒருவர் இன்னும் நினைத்து நெகிழ்ந்து கொண்டிருக்கலாம்.
நம்முடைய ஒரு பார்வை, ஒரு புன்னகை, ஒரு புறக்கணிப்பு கூட யாரோ ஒருவருக்குள் ஏதோ ஒன்றை மாற்றியிருக்கலாம்.
அமெரிக்க எழுத்தாளர் ஆக்டேவியா பட்லர் தனது Parable of the Sower நாவலில் ஓர் அழகான கருத்தை எழுதுகிறார்.
“நீங்கள் தொடும் அனைத்தையும் மாற்றுகிறீர்கள். நீங்கள் மாற்றும் அனைத்தும் உங்களை மாற்றுகின்றன.”
எவ்வளவு ஆழமான உண்மை!
மழை ஒரு மரத்தின் இலைகளை நனைத்துவிட்டுச் செல்கிறது. அந்த இலைகளில் பட்டுச் சிதறிய மழைத்துளிகளும் முன்பிருந்த வடிவத்தில் இருப்பதில்லை.
மனிதர்களும் அப்படித்தான். ஒவ்வொரு சந்திப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறோம்.
சிலரிடமிருந்து அன்பைக் கற்றுக்கொள்கிறோம். சிலரிடமிருந்து பொறுமையை. சிலரிடமிருந்து இனி எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைக்கூடக் கற்றுக்கொள்கிறோம்.
அத்தனை அனுபவங்களும் நமக்குள் எங்கோ ஓரிடத்தில் தங்கிவிடுகின்றன.
நாம் இன்று என்னவாக இருக்கிறோமோ, அதில் நாம் சந்தித்த மனிதர்களுக்கும் ஒரு சிறிய பங்கிருக்கிறது.
நம்மை நேசித்தவர்களுக்கும், நம்மைக் காயப்படுத்தியவர்களுக்கும், நம்மோடு பயணித்தவர்களுக்கும், பாதியிலேயே பிரிந்து சென்றவர்களுக்கும்.
இன்னும் அழகான உண்மை ஒன்று இருக்கிறது.
நாம் யாரோ ஒருவருடைய நினைவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்கே தெரியாமல்!
அதனால்தான், ஒருவரைச் சந்தித்துவிட்டுப் பிரியும் ஒவ்வொரு முறையும், அவருக்குள் நாம் எதை விட்டுச் செல்கிறோம் என்பது அவ்வளவு முக்கியமானதாகிறது.
உங்கள் வாழ்க்கையில் வந்து, உங்களுக்குள் ஏதோ ஒன்றை அழகாக மாற்றிவிட்டுச் சென்ற அந்த மனிதர் யார்?
முடிந்தால், அவரிடம் அதைச் சொல்லுங்கள்.
சில நேரங்களில், நாம் ஒருவரிடம் விட்டுச் செல்லக்கூடிய மிக அழகான பரிசு, அவர் நம் வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்றியிருக்கிறார் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துவதுதான்.
– தாரிக் அஸீஸ் (Tharique Azeez) முகநூல் பதிவு