K2-18b பாரடைஸ்!

“என்ன சொல்றீங்க ராம் ஒளியின் வேகத்தில் பயணப்பட போகிறோமா?” கூட்ட அரங்கில் மதுதான் முதலில் குரலை உயர்த்திக் கேட்டாள்.

“ஆமாம், அது போலதான், ஆனா இல்லை.”

ராம் பதிலளிக்க,

“பின்ன எப்படி ராம் இந்த பிராஜெக்ட்?”

“லிசன் மது, சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு அற்புதமான விஷயத்தை நமக்கு காண்பிச்சிருக்கு”

“என்ன சொல்ற ராம்?” தொடர்ந்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த மதுவை கையமர்த்தி, சக ஆய்வாளன் யாழ் தொடர்ந்தான்.

நம்மளோட இந்த எக்ஸோ பிளானிட்டரி குடியேற்றத் திட்டத்தில் K2-18b பிளானட் 120 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கு.

இன்றைக்கு நம்ம கிட்ட இருக்கிற தொழில்நுட்ப வேகத்தில பயணப்பட்டால் ஒளி ஒரு நாளில பயணிக்கிற தூரத்தை கடக்கிறதுக்கே நமக்கு 50 வருஷம் தேவைப்படுது தெரியும்தானே?

வாயேஜர் 2 இப்பதான் அந்த இடத்த கடந்திருக்கு. அப்படி இருக்கும்போது 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிற கோளுக்கு எப்படிப் போக முடியும்?”

“நாம போக வேண்டிய தூரம் 120 ஒளி ஆண்டுகள் இல்ல, நாலு ஒளி ஆண்டுகள்தான் யாழ்”

குழுவினரிடம் திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான் ராம்.

“ஆமா நம்ம மில்கிவை கேலக்ஸிக்கும் ஆண்ட்ராமீடா கேலக்ஸிக்கும் இடையில நாலு ஒளி ஆண்டுகள் தூரத்தில் லாரன்சியன் என்கிற ஒரு வார்ம்ஹோல் சமீபத்துல அடையாளம் காணப்பட்டிருக்கு. அதைத்தான் நாம பைபாஸா யூஸ் பண்ணப் போறோம்.”

 ராம் விவரிக்க, மது மீண்டும் கேள்விகளைத் தொடர்ந்தாள்.

 “அது சரி K2-18b முழுதாக தண்ணீர் நிரம்பி இருக்கும்போது அதில் எப்படி காலனி அமைக்க முடியும்? எப்படி மனிதர்கள் வாழ முடியும்?”

“சீ மது… ஸ்பேஸ்ல இருந்து நம்ம பூமியை டிரேஸ் பண்ணாலும் கடல் உயிரினங்கள் வெளியிடும் டை மீத்தேன் சல்பைட் வாயுவைக் காட்டும். அப்போ இங்க கடல் மட்டும்தான் இருக்கா?”

 விழிகள் விரிய மது ராமை பார்த்துக் கொண்டிருக்க, ராம் தொடர்ந்தான்.

 “ஜேம்ஸ் வெப்  K2 -18b ல கடல் இருக்குன்னு சொல்லல மது”

ராம் சொல்லிவிட்டு சிறிது இடைவெளி விட, மது குழப்பமாக ராமையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 ராம் தொடர்ந்தான். “இப்படி யோசி, கடலும் இருக்குன்னு சொல்லியிருக்கு.”

“ராம் ரியலி இன்ட்ரஸ்டிங், ஆனாலும் நாலு ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிற லாரன்சியன் வார்ம்ஹோலுக்கு எப்படி போறது?”

மதுவின் கேள்விக்கு ராம் பதிலளித்தான்.

“நம்ம ஸ்பேஸ்பாக்ஸ் விண்கலத்தோட திறன், எரிபொருள், வேகம் எல்லாம் இண்டஸ்டெல்லர் பகுதிக்கு இரண்டு வருடத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

அதுவரை இருக்கவே இருக்கு சோலார் எனர்ஜி. அதன்பிறகு விண்வெளியில் இருக்கிற ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடை வடிகட்டி மீத்தேனாவும் ஆக்சிஜனாகவும் மாற்றினா ஆல்டர்நெட் எரிபொருள் ரெடி. தாராளமா லாரன்சியன் வார்ம்ஹோல் போயிடலாம்.”

“கிரேட் ராம். ஆனா, மிஷன் தோற்றுப்போனா எல்லோரும் விண்வெளியில் கரைஞ்சிட வேண்டியதுதான். இல்ல? அப்புறமும் அங்கிருந்து திரும்பி வருவதற்கான வழி ஏதும் இதுல பேசப்படல”

“சோ வாட் மது? சக்சஸ் ஆனா புதுசா ஒரு உலகத்தைக் கண்டுபிடித்த பெருமை நம்மை சேரட்டுமே.”

“நாம மேரேஜ் பண்ணனும். உன்ன மாதிரியே ரெண்டு பிள்ளைங்க பெத்துக்கணும். கூடவே இருக்கணும். இதெல்லாம் நம்ம கனவில்லயா ராம்?”

மது பேசப் பேச ராம் அவசரமாகக் குறுக்கிட்டான்.

“மது ப்ளீஸ்… ஸ்டாப் இட். நீ இப்படி எல்லாம் பேசுறது புரியல எனக்கு. நம்ம சராசரியா வாழ்ந்து செத்து போறதுக்கு இல்ல.

நீயும் நானும் தவிர நம்ம குழந்தைங்க வாழ்ற அளவுக்கு பூமி தகுதியானதா இல்ல.

பூமி தன்னுடைய நாட்களை எண்ணத் தொடங்கி வருடங்கள் ஆச்சு. இது தவிர்க்க முடியாது மது. உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ இங்கேயே இருந்திடு. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.”

கோவமாக ராம் பேச,

“ராம் அப்படி சொல்லாத, அந்த ராமனோட சீதை காட்டுக்குத்தான் போனா, நான் இந்த ராம் கூட K2க்கே வருவேன்.”

மது பேசப் பேச இருவரும் சிரித்து விட்டு, திட்டப் பணி சார்ந்த வேலைகளைத் தொடரச் சென்றானர்.

ஸ்டார்பாக்ஸ் நிறுவனத்தின் திட்டபணிகள் வேகமெடுத்தது.

திரும்பலாம், திரும்ப முடியாமல் போகலாம் என்கிற நிபந்தனைகளோடு ராம், மது, யாழ், ஜீவா என நான்கு பேர் கொண்ட குழுவோடு ஸ்டார்பாக்ஸின் மிஷன் பாரடைஸ் ஸ்பேஸ் ஸிப் விண்ணில் ஏவப்பட்டது.

நால்வரும் 4 ஆண்டுகள் உணவு, இயக்கமின்றி பயணிப்பதற்காக ஹைபர்நேட் செய்யப்பட்ட கேபின்களில் சீலிடப்பட்டார்கள்.

முழுதாக நான்கு வருடங்கள் பயணப்படும் விண்வெளிக் கப்பல், இண்டஸ்டெல்லர் பகுதி வந்தவுடன் ராம் மட்டும் விழித்து எழுந்து மாற்று எரிபொருள் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இதுதான் திட்டம்.

இருள் மட்டுமே நிறைந்திருந்த அமைதியான பெருவெளியில் அந்த விண்வெளி ஓடம் மட்டும் தனித்துப் பயணித்துக் கொண்டிருந்தது.

எதிர்காலக் கனவுகளோடும், பெரும் நம்பிக்கைகளோடும் சூரிய மண்டலத்தின் அத்தனை கிரகங்களையும் தாண்டிப் பயணித்து, சூரியக் குடும்பத்தின் எல்லையான இண்டஸ்டெல்லர் பகுதியை அடைந்தது விண்கலம்.

ஹைப்பர் நெட் செய்யப்பட்ட கேபினின் கடிகாரம் உரிய நேரத்தில் தன்னுடைய சிக்னலை அனுப்ப, நீண்டகால உறக்கம் களைந்து, மெல்ல விழிப்பு வந்து தன்னுடைய கேபினை விட்டு எழுந்தான் ராம்.

திடீர் சூழல் மாறுபாட்டால் சமநிலை தவறி தலைச்சுற்றலோடு மீண்டும் மயங்கி கேபினுள்ளேயே சாய்ந்தான். சிறிது நேரம் கழித்து நிலைக்கு வந்தவனின் அருகிலிருந்த கேபினும் திறந்திருக்க ஒரு கணம் குழம்பினான்.

“இது மதுவோட கேபினில்ல? அவ எப்ப எழுந்தா? நான் மட்டும் எழுதுவதுதானே திட்டம்?”

 “மது எங்கே? அவள் விழிப்பது திட்டத்தில் இல்லையே?”

குழப்பமாக கேபினின் அடுத்த அறைக்கு மெல்லப் பறந்து நகர, விட்டுவிட்டு ஒலித்த ரேடியோ அலைவரிசையோடு கூடிய அந்த சத்தம் என்னது?

மதுவின் குரலா?

மதுவின் குரல் போலவும் இல்லை என்ன கொஞ்சம் இயந்திரத்தனமாக ஒலிக்கிறதே?  

அடுத்து மூடப்பட்டிருந்த அறையிலிருந்து வந்த சத்தத்தை நோக்கிக் குழப்பமாகச் சென்றவன் மது யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான்.

“யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்?”

“எஸ் ரோஜர் பேரடைஸ் ஒன் டூ த்ரீ சிக்னல் ஆன்”

மதுவின் குரல்தான்… மது யாரிடமோ பேசத் தொடங்கினாள்.

“ஆமாம் மிஸ்டர் கே திட்டம் துரதிஷ்டவசமாக வெற்றியடைந்து நம் பாரடைஸை நெருங்குகிறது.”

“நம் பாரடைஸா?”

எதைச் சொல்கிறாள்? குழப்பத்தோடு ராம் மூடப்பட்ட அறையைப் பார்த்துக் கொண்டிருக்க, இன்னும் இரண்டு மணித் துளிகளில் ஸ்பேஸ் ஷிப் லாரன்சியனின்  வடகிழக்கு மூலை சரியாக RA72 H45 M40.04S பகுதிக்கு வரும் தாக்குதலுக்கு தயாராக இருங்கள்.”

மது பேசப் பேச ராமுக்கு தலைச்சுற்றியது.

தொடர்ந்து மது, “மிஸ்டர் கே என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம் பாரடைஸைக் காப்பாற்ற நான் என்னைத் துறப்பேன்.

இந்த மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். வளமிக்க தங்கள் பூமியை திட்டமிட்டும், அலட்சியமாகவும் அழித்த கொடூரர்கள்.

அதை அழித்தது போதாதென்று, நம் பாரடைஸைத் தேடி வருகிறார்கள். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.”

அதிர்ச்சியில் ராம் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருக்க, சரியாக விண்கலத்தின் திரையில் விண்கலம் இருக்குமிடத்தைச் சுட்டியது RA72 H45 M40.04S.

திடீரென கிளம்பிய கண் கூசும் ஒளியால் விண்கலத்திற்கு வெளியே பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.

கண் பார்வையைப் பறிக்கும் தீப்பிழம்பொன்று விண்கலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

  • சுமித்ரா சத்தியமூர்த்தி
Comments (0)
Add Comment