‘அவன் பெயர் சொல்’ உள்பட உங்களின் பல பிரதிகளில் திருநங்கைகள், திருநம்பிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களை உங்களின் படைப்புகளில் கொண்டுவரவேண்டும் என்கிற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பதில்:
தமிழ் இலக்கியப் பெருவெளியில் ஏராளமான பாத்திரங்களை ஏராளமான எழுத்தாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். ஆனால், அவர்கள் உருவாக்கிய பாத்திரங்களும், அப்பாத்திரங்களின் வழி அவர்கள் நிகழ்த்தும் பாலியல் அரசியலும் பழக்கப்பட்டதே.
சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட மாற்றுப் பலினத்தவர்களின் வாழ்வியலைப் பேசிய எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஹெலன் சீக்சூ கூறியதைப் போல், உலகில் மானிடராய்ப் பிறக்கும் ஒவ்வொரு உயிரிக்குள்ளிருக்கும் பால்தன்மை என்பது ஒருபடித்தானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவன் நான்.
இங்கே, ஸ்தூலமாக இருக்கும் உடலின் உறுப்பினை வைத்துக்கொண்டு ஒருவரின் பால் தன்மையை நிர்ணயிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படியிருந்தால் அதுவும் ஒரு அதிகாரம்தான். இங்கு யாரும் முற்றுமுழுதான ஆணாகவும் இல்லை. பெண்ணாகவும் இல்லை. அப்படி இருப்பதாக உணர்ந்தால், அவர்களுக்குள் செயல்படும் அதிகாரத்தை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள் என்பதாகத்தான் பொருள். இந்த அதிகாரத்தை நிர்மூலமாக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆபெண் எழுத்து எனும் சொல்லாடலைக் கட்டமைக்க முனைந்தேன்.
இனம், மொழியைப் பற்றிய உங்களுடைய புரிதல்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பதில்:
வரலாற்றில் அடையாளம் என்பது அவசியம்தான். தமிழினத்தையும் தமிழையும் சிதைப்பதுதான் வரலாறாக இருந்துவந்துள்ளது. அத்தகைய சூழல்களில், தமிழர்கள் மொழியின் மூலமாகத் தங்களை நிறுவிக்கொள்வது அவசியம். தமிழர்களின் சிந்தனையே உலகம் தழுவியதாகத்தான் இருந்தது.
பின்நவீனத்துவச் சூழலில், இந்த மொழி மற்றும் இன அடையாளங்களை இன்னும் கவனமாகக் கொண்டு செல்லவேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசியம் என்பது இன்று பல்வேறு வகையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது என நினைக்கிறேன்.
வரலாற்றின் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப எதையும் கட்டமைக்க வேண்டும். அதிகாரத்தைக் கட்டமைக்கும் எந்த அடையாளத்தையும் என் எழுத்து நிராகரிக்கிறது. அதே நேரத்தில், உலகில் நடைபெறும் பல்வேறு போர்களை நான் கவனித்துக்கொண்டு வருகிறேன்.
நிலம், மொழி, இனம், பாலினம், பண்பாடு போன்ற எல்லாவற்றையும் கடந்ததாக என் எழுத்துகள் இருந்தாலும், பின்நவீனத்துவச் சூழலில், மொழி மற்றும் இன அடையாளங்கள் இந்த நூற்றாண்டில் நீடிக்கும் என்பதுதான் என் கணிப்பு.
- நன்றி : அந்திமழை
#எழுத்தாளர்ரமேஷ்பிரேதன் #WriterRameshPredan #RameshPredan #திருநர் #திருநங்கை #திருநம்பி #Transgender #TransWoman #TransMan