கடவுளுக்கே கரண்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்.!

கவியரசர் கண்ணாதாசனும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர அன்பு கொண்டிருந்தவர்கள் என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாகச் சொல்ல்லாம்.

அப்படிபட்ட ஒரு சம்பவம்தான் இது.

”ஒருநாள் மதியம் நல்ல வெயில் ரெண்டு மூணு கம்பெனிக்குப் போயி பாட்டெழுதிக் கொடுத்துவிட்டு தி.நகர் வீட்டுக்கு ரொம்பவும் களைப்பாக வந்து இறங்கினார் கவிஞர்.

வந்ததுமே சட்டையை கழற்றி போட்டுவிட்டு பனியனோடு பால்கனியில் அமர்ந்து மது அருந்தத் தொடங்கினார். திடீரென்று மின்சாரம் தடைபட்டுப்போனது.

சில நொடிகளில் வந்து விடும் என்று நினைத்துக் கவிஞர் காத்திருந்தார். அரை மணி நேரத்திற்கும் மேலானது. போன கரண்ட் வரவில்லை.

இதனால் கவிஞருக்கு கோபம் வந்தது. தி.நகர் பவர் ஹவுஸ் அப்போது பாண்டி பஜார் பகுதியில் இருந்தது. போன் பண்ணினால் யாரும் எடுக்கவேயில்லை.

இதனால் கோபம் அதிகமாகி கவிஞர் சட்டையைக் கூட மாட்டாமல் காரில் பவர் ஹவுசுக்கே கிளம்பி விட்டார்.

கவிஞர் பனியனோடு வந்து இறங்குவதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் பதறிப் போனார்கள். கவிஞரிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்தார்கள்.

ஆனால், பலனில்லை. கரண்ட் வந்தால்தான் போவேன் என்று குழந்தையாக அடம்பிடிக்கிறார்.

கவிஞரின் கோபம் பக்கத்தில் ஆற்காடு தெருவில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கிறது. என்ன நடந்ததென்று தெரிந்துகொள்ள அதிகாரிகளை வரவழைத்து விபரம் கேட்டிருக்கிறார்.

அதிகாரிகள் தி.நகர் பகுதியில் சிங்கிள் லைன்தான் இருக்கிறது. வேறு வழியில்லை என்று தயங்கியபடியே சொல்லியிருக்கிறார்கள்.

உடனே எம்.ஜி.ஆர். சைதாப்பேட்டையிலிருந்து ஒரு லைனை எடுத்து கவிஞர் வீட்டுக்குத் தர உத்தரவிட்டிருக்கிறார். அன்று மாலையே டபுள் லைன் கிடைத்திருக்கிறது.

இன்னொரு சயமத்தில் ஒரு வி.ஐ.பி. வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆரின் கோபத்தைச் சம்பாதித்திருக்கிறார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட இடையூறுகள் வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவருக்கு உயிர் பயமே வந்து விட்டது.

இது பற்றி ஒரு திரைப்பட இயக்குநரிடம் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

அந்த இயக்குநர் ”தலைவரை கட்டுப்படுத்த ஒரே ஒரு ஆளால் மட்டுமே முடியும். நீங்க போய் கவிஞரைப் பாருங்க” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

அந்த பெரிய வீட்டுப் பிள்ளையும் கவிஞரிடம் போய் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

எடுத்தவுடனே கவிஞர் கேட்ட கேள்வி “நீங்க என்ன தப்பு செய்தீங்க” என்பதுதான்.

அவரும் விசயத்தைச் சொல்ல, ”தப்பு செய்தா தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும்” என்று சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆருக்கு போன் போட்டிருக்கிறார்.

”வணக்கம் சின்னவரே..” என்று தஞ்சமடைந்த பிள்ளைக்காக பரிந்து பேசியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரும் “நீங்க சொன்னா சரிதான் ஆண்டவரே” கோபம் தணிந்து அமைதியாகி இருக்கிறார்”

இப்படிக் கவியரசரையும் பொன்மனச் செம்மலையும் பற்றிச் சொல்லும் தகவல்கள் சினிமாவை மிஞ்சும்.

– தேனி கண்ணன்

Comments (0)
Add Comment