துப்பாக்கியைப் போல தாக்கும் கடல் உயிரினம்!

கடலில் வாழும் பல உயிரினங்கள் தங்களின் பாதுகாப்பிற்காகவும், உணவைப் பிடிப்பதற்காகவும் பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளன.

ஆனால், ஒரு சிறிய இறால் தனது நகத்தைப் பயன்படுத்தி துப்பாக்கி சுடுவது போன்ற தாக்கத்தை உருவாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

பார்ப்பதற்கு சாதாரண இறால் போல இருக்கும் Pistol Shrimp (பிஸ்டல் ஷ்ரிம்ப்), தனது சிறிய உடலில் வியக்க வைக்கும் சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளது.

Pistol Shrimp என்பது Alpheidae என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் இறால் வகையாகும்.

இவை பொதுவாக சில சென்டிமீட்டர் நீளம் மட்டுமே கொண்டவை. இவற்றின் உடலில் இருக்கும் இரண்டு நகங்களில் ஒன்று மற்றொன்றைவிட மிகவும் பெரியதாகவும் வலிமையானதாகவும் இருக்கும்.

இந்தப் பெரிய நகத்தைப் பயன்படுத்தி, தண்ணீருக்குள் மிக வேகமான நீரோட்டத்தை உருவாக்கி, அதன்மூலம் ஏற்படும் அதிர்வால் தன் இரையைத் தாக்குகிறது.

இதன் காரணமாகவே இவை Snapping Shrimp என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த இறாலின் பெரிய நகம் சாதாரணமாக இரையைப் பிடிப்பதற்காக மட்டும் பயன்படுவதில்லை. அதன் அமைப்பே ஒரு சிறிய இயந்திரத்தைப் போல செயல்படுகிறது.

பெரிய நகத்தின் ஒரு பகுதியில் நீண்டு காணப்படும் அமைப்பு (Plunger), மற்றொரு பகுதியில் இருக்கும் பள்ளத்திற்குள் (Socket) வேகமாகச் சென்று பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

நகம் மூடும்போது, அந்த அமைப்பு தண்ணீரை மிக வேகமாக வெளியேற்றுகிறது. இதனால் அதிவேக நீரோட்டம் உருவாகிறது.

இந்த நீரோட்டத்தின் வேகம் சில ஆய்வுகளில் மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர் வரை கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வளவு வேகமாக தண்ணீர் நகரும்போது, அந்தப் பகுதியில் அழுத்தம் திடீரென குறைகிறது.

இதனால் தண்ணீருக்குள் ஒரு சிறிய நீர்க்குமிழி உருவாகிறது. இந்த நிகழ்வுக்கு நீர்க்குமிழி உருவாக்கம் (Cavitation) என்று பெயர்.

உருவான அந்த நீர்க்குமிழி சில நொடிகளுக்குள் விரிவடைந்து, பின்னர் மிக வேகமாக சுருங்கி உடைகிறது.

இந்த நீர்க்குமிழி உடையும் தருணத்தில் ஒரு வலுவான அதிர்வலை (Shock wave) உருவாகிறது.

இதனால் ஏற்படும் சத்தம்தான் Pistol Shrimp-ன் துப்பாக்கி வெடிப்பைப் போன்ற சத்தமாகக் கேட்கிறது.

இந்த அதிர்வின் தாக்கம் அருகில் இருக்கும் சிறிய மீன்கள் மற்றும் மற்ற கடல்வாழ் உயிரினங்களை நிலைகுலையச் செய்யக்கூடும்.

இந்த நீர்க்குமிழி உடையும்போது ஏற்படும் மற்றொரு ஆச்சரியமான நிகழ்வு, மிக அதிக வெப்பநிலை உருவாகுவதாகும்.

விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளில், அந்தச் சிறிய நீர்க்குமிழியின் உட்பகுதியில் வெப்பநிலை குறைந்தது 5,000 கெல்வின் (Kelvin) வரை இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

இது சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பநிலைக்கு நெருக்கமானது. ஆனால், இந்த வெப்பம் ஒரு மிகச் சிறிய நீர்க்குமிழிக்குள், மிகக் குறுகிய நேரத்திற்கு மட்டுமே உருவாகிறது.

இதனால் சுற்றியுள்ள கடல் நீர் கொதிப்பதில்லை; அந்த இறாலும் பாதிக்கப்படுவதில்லை.

இந்த நீர்க்குமிழி உடையும்போது ஒரு மிகச் சிறிய ஒளிப்பளிச்சலும் உருவாகிறது. இதனை Shrimpoluminescence என்று அழைக்கின்றனர்.

நீர்க்குமிழி வேகமாகச் சுருங்கி உடையும்போது உருவாகும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தின் காரணமாக இந்த ஒளி தோன்றுகிறது.

இந்த ஒளி மிகவும் மங்கலானது; மனிதக் கண்களால் சாதாரணமாகப் பார்க்க முடியாத அளவிற்கு மிகக் குறுகிய நேரமே நீடிக்கிறது.

Pistol Shrimp தனது இந்தத் திறனை உணவைப் பிடிப்பதற்காக மட்டுமல்லாமல், எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் பயன்படுத்துகிறது.

அருகில் வரும் சிறிய மீன்கள் மற்றும் மற்ற உயிரினங்களை அதிர்வால் நிலைகுலையச் செய்து, அவற்றை உணவாகப் பிடிக்கிறது.

அதேபோல், மற்ற இறால்களுடன் போட்டியிடும்போது அல்லது தன்னுடைய வாழிடத்தைப் பாதுகாக்கும்போதும் இந்த நகத்தைப் பயன்படுத்துகிறது.

இருப்பினும், இந்தத் திறன் இருப்பதால் அவை மற்ற பெரிய கடல்வாழ் உயிரினங்களிடமிருந்து முழுமையாகப் பாதுகாப்பாக இருக்க முடியாது.

சில Pistol Shrimp-கள் Goby என்ற மீனுடன் இணைந்து வாழ்கின்றன. இந்த உறவு இரு உயிரினங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Pistol Shrimp கடலின் மணல் பகுதியில் துளையிட்டு ஒரு பாதுகாப்பான இருப்பிடத்தை உருவாக்குகிறது.

ஆனால், அதற்கு பார்வைத்திறன் குறைவாக இருப்பதால், ஆபத்துகள் வருவதை எளிதில் கண்டறிய முடியாது. Goby மீனுக்கு நல்ல பார்வை இருப்பதால், அது அருகில் வரும் எதிரிகளைக் கவனித்து எச்சரிக்கை செய்கிறது.

இதற்குப் பதிலாக, Pistol Shrimp உருவாக்கும் துளை Goby மீனுக்கும் பாதுகாப்பான இருப்பிடமாக அமைகிறது. இவ்வாறு இரண்டு உயிரினங்களும் ஒன்றுக்கொன்று உதவி செய்து வாழ்கின்றன.

Pistol Shrimp-கள் உருவாக்கும் சத்தம் தனித்தனியாகக் கேட்கும்போது சிறிய வெடிப்பைப் போல இருக்கும்.

ஆனால், ஆயிரக்கணக்கான இறால்கள் ஒரே நேரத்தில் தங்கள் நகங்களை மூடும்போது, கடலுக்குள் தொடர்ந்து வெடிக்கும் சத்தம் போன்ற ஓர் இரைச்சல் உருவாகிறது.

சில கடல் பகுதிகளில் இந்த இறால்கள் உருவாக்கும் சத்தம், நீருக்கடியில் ஒலிகளைக் கண்டறியும் கருவிகளின் (Sonar) செயல்பாட்டையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு வலிமையானது.

இரண்டாம் உலகப் போரின்போது, இந்த இறால்கள் உருவாக்கும் சத்தம் நீருக்கடியில் ஒலிகளைக் கேட்பதில் சிக்கல்களை ஏற்படுத்தியது.

இவ்வளவு வலிமையான நகத்தைக் கொண்டிருந்தாலும், Pistol Shrimp தனது உடல் உறுப்புகளை இழந்தால் மீண்டும் வளர்க்கும் திறனையும் கொண்டுள்ளது.

மற்ற இறால்களைப் போலவே, இவையும் உடல் வளர்ச்சிக்காகவும், இழந்த உறுப்புகளை மீண்டும் உருவாக்குவதற்காகவும் தங்களின் வெளிப்புற ஓட்டை மாற்றும் செயல்முறையை (Molting) மேற்கொள்கின்றன.

சில வகைகளில் பெரிய நகம் இழக்கப்பட்டால், மற்றொரு சிறிய நகம் பெரிய நகமாக மாறி, இழந்த நகத்தின் இடத்தில் புதிய சிறிய நகம் உருவாகக்கூடும்.

சில சென்டிமீட்டர் நீளம் மட்டுமே கொண்ட இந்தச் சிறிய கடல்வாழ் உயிரினம், தனது உடலில் உள்ள ஒரு நகத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் அதிர்வு, வெப்பம், ஒலி மற்றும் ஒளி போன்ற நிகழ்வுகள் அறிவியல் உலகிற்கு பல ஆச்சரியங்களை அளிக்கின்றன.

இயற்கையில் உயிரினங்கள் தங்களின் உடல் அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்தி உயிர்வாழ்கின்றன என்பதற்கு Pistol Shrimp ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றும் இந்தச் சிறிய உயிரினத்தின் நகத்திற்குள், இயற்கையின் வியக்க வைக்கும் அறிவியல் ரகசியம் ஒளிந்திருக்கிறது.

  • சங்கீதா
Comments (0)
Add Comment