எம்.ஜி.ஆருக்கு அண்ணா தந்த அட்டைப் படம்!

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் சோதனை தொடங்கியது. முதலமைச்சர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

சென்னையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அமெரிக்காவுக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அமெரிக்கா புறப்படும்முன், திமுகவில் எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை அவருக்கே மறைமுகமாக உணர்த்தும் வகையில் அண்ணா ஒரு காரியம் செய்தார்.

அது, திமுக முன்னணித் தலைவர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்ட அண்ணா, மும்பை விமான நிலைய வளாகத்தில் தனியறை ஒன்றில் ஓய்வெடுத்தார்.

அந்த அறையில் இரா.செழியன், க.ராசாராம், ராணி அண்ணா, சத்தியவாணி முத்து, அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் ஆகியோர் இருந்தனர்.

அப்போது, அந்த அறைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். கவலையோடும், கலங்கிய கண்களோடும் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த அண்ணா, தனக்கே உரிய பாணியில் மென்மையாக புன்னகைக்கிறார்.

சிறிது நேரத்தில் ராசாராமும் செழியனும் ‘புறப்படத் தயாராவோம்’ எனக் கூறி பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கிறார்கள்.

உடனே, அண்ணா படுக்கையிலிருந்து லேசாக எழுந்து சாய்ந்து அமர்ந்து, “செழியன், நாம் வாங்கிய ஆங்கிலப் புத்தகங்கள் எங்கே?” எனக் கேட்கிறார்.

புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நிலையிலும் படிக்கும் ஆர்வம் அண்ணாவுக்குக் குறையவில்லை என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாறு.

துயரமான அந்தக் காலகட்டத்திலும் தன்னை உருக்கும் நோய் குறித்த வருத்தம் ஏதுமின்றி, வாசிப்பதே தன் விருப்பம் என்றிருந்ததால்தான் அவர் அறிஞர் அண்ணா!

அந்த ஆங்கிலப் புத்தகங்களை செழியன், அண்ணாவிடம் வழங்குகிறார். அதை வாங்கிய அண்ணா, அதில் ஒரு புத்தகத்தை எடுத்து அதன் மேல் அட்டையை மட்டும் கிழித்தார்.

அதை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து “இதை பத்திரமாக நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

உடனிருந்த தம்பிகள் எல்லோரும் ஆர்வப் பரபரப்போடு ‘அண்ணா தந்த அந்த அட்டையில் என்ன இருக்கிறது?’ என்று எட்டிப் பார்த்தனர்.

ஒரு வலிமையான, உழைக்கும் கரம் ஒன்று ஸ்பேனரை உயர்த்திப் பிடிக்கிற படம் அதில் இருந்தது.

அந்த அட்டையைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., “என்னண்ணா இது, இதை நான் என்ன செய்யவேண்டும்?” எனக் கேட்கிறார்.

“இது உங்களிடம் இருக்கட்டும்” என்று மட்டும் அண்ணா கூறி மர்மமாகப் புன்னகைக்கிறார்.

உடனே, எம்.ஜி.ஆர். அந்த அட்டையை தான் கைவசம் கொண்டுவந்திருந்த பையில் வைத்துக்கொண்டார்.

அந்த நேரத்தில் நாவலர் நெடுஞ்செழியனும், கலைஞர் கருணாநிதியும், அண்ணாவின் அறைக்குள் வருகிறார்கள்.

அவர்களைக் கண்ட அண்ணா, எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘உங்களிடம் கொடுத்த அந்த அட்டையைக் கொடுங்கள்’ எனக் கேட்டு வாங்குகிறார்.

அதை நெடுஞ்செழியன், கருணாநிதி இருவரிடமும் காட்டி, ‘இந்த அட்டையை எம்.ஜி.ஆரிடம் கொடுத்துள்ளேன். இது அவரிடமே இருக்கட்டும்’ என அழுத்தமாகக் கூறுகிறார்.

அந்த அட்டைப் படம் உணர்த்தும் பாடம் என்ன என்பதை அங்கிருந்த தலைவர்கள் எல்லோருமே உணர்ந்திருப்பார்கள்; உணரவேண்டும் என்பதுதான் அண்ணாவின் எண்ணம்.

அண்ணா கொடுத்த அந்த அட்டைப் படத்தில் இடம்பெற்ற அந்தப் படத்திலுள்ள சின்னம்தான்… பின்னாளில் எம்.ஜி.ஆர். தொடங்கிய ‘அண்ணா திமுக’வின் தொழிற்சங்கக் கொடியில் இடம் பெற்று இன்றளவும் பறந்துகொண்டிருக்கிறது.

அந்த அட்டைப் படத்தில் உள்ள சின்னத்தின் மூலம் அண்ணா சொல்லவந்த செய்தி என்ன?

தமக்குப் பிறகு திமுகவில் பிரச்சனை வந்தால், கட்சியில் கடும் நெருக்கடி உருவானால், அதை சரி செய்யக்கூடிய ஆற்றலும், தகுதியும், திறமையும் எம்.ஜி.ஆர். ஒருவருக்குத்தான் உண்டு என்பதை அடுத்த கட்ட தலைவர்களுக்கு ‘சிம்பாலிக்’காக உணர்த்துவதற்காகத்தான் ‘ஸ்பேனர் பிடித்த கை’யுடன் கூடிய அந்த அட்டைப் படத்தை அண்ணா, எம்.ஜி.ஆரிடம் வழங்கினார்.

அரசியல் தீர்க்கதரிசியாக வாழ்ந்த அண்ணாவின் கணிப்பு சரியானதுதான் என்பதை அவரது மறைவுக்குப் பிறகு திமுகவில் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உறுதிப்படுத்தின.

அதில் முக்கியமானது – கட்சி மற்றும் ஆட்சிக்குத் தலைமை ஏற்பது யார்? கருணாநிதியா? நெடுஞ்செழியனா என்ற கேள்வி எழுந்து திமுகவில் பலத்த போட்டிகள் நிலவியது.

ஏனென்றால், அண்ணாவுக்கு அடுத்த நிலையிலிருந்த நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக பேராசிரியர் அன்பழகன், கே.ஏ.மதியழகன். சத்தியவாணி முத்து உள்ளிட்டோரும்,

கருணாநிதிக்கு ஆதரவாக என்.வி.நடராசன், நாஞ்சில் மனோகரன், சாதிக் பாட்சா, மன்னை நாராயணசாமி உள்பட பலரும் அணி பிரிந்து, இருதரப்பினரும் கடுமையான விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்தச் சிக்கலான இக்கட்டில் நிலைமையை வெகு சாமர்த்தியமாகச் சமாளித்து, கருணாநிதியை முன்னிலைப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

அவர் மட்டும் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு சுமூக முடிவை ஏற்படுத்தியிராவிட்டால் அப்போதே திமுகவில் பெரும்பிளவு ஏற்பட்டு இருக்கும்.

– துரை கருணா

  • ‘ஒரே ஒரு எம்.ஜி.ஆர்’ நூலிலிருந்து…
Comments (0)
Add Comment