சைபர் க்ரைம். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே சைபர் க்ரைமுக்கு வரும் புகார்கள் ஒப்பீட்டளவில் குறைவாகத் தான் இருந்திருக்கின்றன.
இன்று இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஒவ்வொரு நாளும் சைபர் க்ரைமுக்கு வரும் புகார்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன.
முன்பெல்லாம் வீடுகளில் பணத்தை சேமிப்பது பெருவாரியாக வழக்கத்தில் இருந்தபோது, அந்த சேமிப்பு மனோபாவத்தைத் தகர்த்த பெருமை பிரதமர் மோடி அவர்களையே சாரும்.
பண மதிப்பிழப்பு என்கிற அதிரடி நடவடிக்கையை இரண்டு முறை அவர் கொண்டு வந்தபோது உண்மையாகவே கள்ளப்பணம் வைத்திருந்தவர்கள் அதிர்ந்துபோனார்களோ, இல்லையோ, வீட்டில் தங்களது தேவைக்காக பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் சிறுவாடாக சிறுகச் சிறுக சேர்ந்தவர்கள் தான் அதிகமாக அதிர்ந்து போனார்கள்.
அந்த பண மதிப்பிழப்பைத் தொடர்ந்து தான் வங்கிகளில் பணத்தை சேமியுங்கள் என்பதையும் பணமில்லா பரிவர்த்தனை (Cashless Transactions) என்பதையும் பெருமுழக்கமாக முன்வைத்து, கிராமத்தில் உள்ள அவ்வளவு படிப்பறிவு இல்லாத நிலையில், பென்ஷன் தொகையை பெற்றுவரும் மூதாட்டியைக் கூட சேமிப்புக் கணக்கைத் துவக்க வைத்தார்கள்.
சிறிது காலம் கழித்து அந்த வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கச் சொன்னார்கள். அதன்படியே பலரும் இணைத்தார்கள்.
பிறகு செல்போன் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்து யூபிஐ பரிவர்த்தனையை வலியுறுத்தினார்கள்.
அதன்படியே இந்திய அளவில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் யூபிஐ மூலமாகவே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், ரிசர்வ் வங்கி இந்திய அளவில் சைபர் க்ரைம் குற்றங்கள் பெருகி இருப்பதாகவும் வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்கள் செல்பேசியில் தவறான அழைப்புகள் வந்தால், அதை ஏற்க வேண்டாம் என்றும் அப்படி ஏற்றால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
வெவ்வேறு சமூக ஊடகங்களில் ரிசர்வ் வங்கி விடுக்கும் எச்சரிக்கைகளை இப்போது பரவலாகப் பார்க்க முடிகிறது.
அப்படி இருந்தும் வங்கிக் கணக்கில் தங்களது எளிய சேமிப்பை வைத்திருக்கும் ஏழை மக்களின் பணம் எங்கிருந்தோ நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருடப்படுகிறது.
இத்தகைய திருட்டுக்கள் நிகழ்வதற்காக அடித்தட்டு மக்கள் வங்கிக் கணக்குகளைத் துவக்கி, தங்களுடைய குறைந்தபட்ச சேமிப்பை சேமித்திருக்கிறார்கள்.
முறைகேடாகப் பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கையாடல்களைச் செய்கிறார்கள்.
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய குற்றங்களைச் செய்கிறார்கள்.
எது எதற்கோ ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறவர்கள் எங்கோ ஒரு இணையதளத்தில் கூட கடுமையான விமர்சனங்கள் வெளிப்பட்டால் கூட ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதைப் பொறுப்பாக தடுக்க முனைகிறவர்கள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிய மக்களின் பணம் களவாடப்படுவதை ஏன் நிறுத்தக் கூடாது?
ஒரு காலத்தில் கல்வி அறிவு என்பது இல்லாதது பெரும் பிரச்சனையாகப் பேசப்பட்டது. இப்போதோ செல்போன் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தத் தெரியாத தொழில்நுட்ப அறிவு அத்தியாவசிய தேவையைப் போல் மாறியிருக்கிறது.
இத்தகைய நவீன தொழில்நுட்ப அறிவின் உயரத்தை எட்டியவர்கள் எங்கோ இருக்கும் முகம் தெரியாத எளிய மனிதனின் பணத்தை திருடுவதைத் தான் நவீனத் தொழில்நுட்ப யுகத்தின் மாற்றம் என்று சொல்வதா?
– யூகி
#சைபர்க்ரைம் #இணையகுற்றங்கள் #டிஜிட்டல்மோசடி #வங்கிக்கணக்குமோசடி #பணத்திருட்டு #யூபிஐ #டிஜிட்டல்பரிவர்த்தனை #ரிசர்வ்வங்கி #ஏஐதொழில்நுட்பம் #தொழில்நுட்பவிழிப்புணர்வு #மக்களின்சேமிப்பு #CyberCrime #OnlineFraud #DigitalFraud #BankFraud #UPI #DigitalPayments #RBI #CyberSecurity #ArtificialIntelligence #DigitalAwareness