உலக வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ரஷ்ய சோசலிசப் புரட்சியின் 109-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா (நவம்பர் 7, 2026) காஞ்சிபுரம் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் மக்கள் அதிகாரக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பலர் பங்கேற்றனர்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் உறுப்பினர் எழில் வரவேற்புரையாற்ற, அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர் திலகவதி தலைமையேற்றார்.
ரஷ்யப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தையும், இன்றைய உலக அரசியல் சூழலில் சோசலிசச் சிந்தனைகளின் தேவையையும் எடுத்துரைத்த அவர்,
உலகெங்கும் பரவிவரும் மக்கள் போராட்டங்கள் வெல்லவும், டிரம்ப்–மஸ்க் உள்ளிட்டோரின் உலக மேலாதிக்கப் போக்குகளையும் பாசிச சக்திகளையும் முறியடிக்கவும் ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தினார்.
தொடர்ந்து, காஞ்சிபுரத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த காஞ்சிஅமுதன், ரவிபாரதி, பாசறை செல்வராஜ், மைத்திரி அன்பு, சீதாவரம் மோகன் ஆகியோர் உரையாற்றினர்.
அவர்களது உரைகளில் உழைப்பின் மதிப்பு, சமூக உற்பத்தியில் உழைக்கும் மக்களின் பங்கு, சாதி – மத ஒடுக்குமுறைகள், தலித் மக்களின் உரிமைகள், ஜனநாயகப் போராட்டங்களின் தேவை ஆகியவை இடம்பெற்றன.
சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் ஆ.கா. சிவா, உலகளாவிய சந்தைப் பொருளாதாரம், மூலதனக் குவிப்பு, முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான ஆதிக்கப் போட்டிகள் ஆகியவை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதை விளக்கினார்.
இத்தகைய பாசிச, முதலாளித்துவ சக்திகளை எதிர்கொள்ள உழைக்கும் மக்களையும் ஜனநாயகச் சக்திகளையும் ஒருங்கிணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ரஷ்யப் புரட்சியின் அடிப்படை நோக்கமான உழைப்பின் மதிப்பு, சமத்துவம், சுரண்டலற்ற சமூகம் ஆகியவற்றை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டியதன் தேவையும் உரைகளில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
நிகழ்வின் ஒரு பகுதியாகச் சிறுவர்களின் பாடல்கள், கவிதை வாசிப்புகள், உரைகள், ஓவியங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
42-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய ஜனநாயகம் இதழின் பழைய இதழ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, விரும்பியவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. சிறுவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆக்ஸில்ஸ் இந்தியா கிளைத்தலைவர் பழனிவேல் நன்றியுரையாற்றினார்.
இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஒரு புரட்சியை நினைவுகூர்வது என்பது அதன் வரலாற்றைப் பேசுவதோடு நின்றுவிடுவதல்ல; அது எழுப்பிய சமத்துவம், உழைப்பின் உரிமை, சமூக நீதி ஆகிய கேள்விகளை இன்றைய தலைமுறையிடமும் கொண்டு செல்வதாகும்.
அந்த வகையில், காஞ்சியில் நடைபெற்ற இவ்விழா பல்வேறு ஜனநாயகச் சக்திகளின் கருத்துப் பரிமாற்றத்திற்கும், புதிய தலைமுறையிடம் புரட்சிகர வரலாற்று விழிப்புணர்வை விதைப்பதற்குமான அரங்கமாக அமைந்தது.
– மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.