துங்கபத்திரை ஆற்றின் கரையில் சிதிலமடைந்து மண்ணில் மறைந்து போகின்ற நிலையில் கட்டிடக் கலையின் உன்னத நகரம் ஒன்று இன்றும் சாட்சியாக விளங்குகிறது என்றால் அதுதான் ‘ஹம்பி’!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு வடக்கே 350 கி.மீ தொலைவில் உள்ள, உலகப் பாரம்பரியச் சின்னங்களில் (World Heritage Monument) மிக முக்கியமான இடம் – ஹம்பி.
14ம் நூற்றாண்டிலிருந்து விஜய நகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் புகழ் பெற்ற கலை, இலக்கிய, வணிக நகரமாக விளங்கியது.
ஹம்பியின் கட்டிடக் கலை தனித்துவமானது. இது திராவிட இந்தோ – இஸ்லாமிய பாணிகளின் கலவையாகும். தூண்கள், மண்டபங்கள் அத்தனையும் கிரானைட் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்டது.
ஹம்பியின் முக்கியமான கோயில்களில் ஒன்று விருபாக்சா கோயில் (Virupaksha Temple) தற்போதும் வழிபாட்டில் உள்ள பழமையான கோயில்.
அதற்கு அடுத்து சிறப்பான கலை வடிவம் விஜய விட்டலா கோயில். இந்த வளாகம் ஹம்பியின் சிற்பக் கலைக்கு உச்சக்கட்ட சான்றாக விளங்குகிறது.
இங்குள்ள புகழ் பெற்ற கல்தேர் (Stone Chariot) கர்நாடக மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்று!
நான் பெங்களூரில் பணியாற்றியபோது தொல்லியல் துறை நண்பரின் உதவியோடு 2004ம் ஆண்டில் ஹம்பிக்குச் சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்தேன்.
நானும் நண்பர் ரமேஷும் ஒரு ஆட்டோ ரிக்சாவை ஏற்பாடு செய்து சிதிலமடைந்த ஹம்பி நகரம் முழுவதையும் இரண்டு நாட்கள் சுற்றியலைந்து இந்த சின்னங்கள் ஒவ்வொன்றாக சென்று பார்த்தோம்.
அழகான துங்கபத்திரை ஆற்றின் கரையோரம் நடந்து சென்று அங்கும் பல கலை வேலைப்பாடுகளைக் கண்டோம்.
இந்தியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய உலகப் பாரம்பரியச் சின்னமாக ஹம்பி நகரைக் கருதுகின்றேன்.
மற்ற சின்னங்களை ஒரே நாளில் கண்டு திரும்பிவிட முடியும். ஹம்பி முழுவதையும் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு நாட்கள் தேவைப்படும்.
ஹம்பி – அளவிலும் பெரியது!
அழகிலும் பெரியது!
அதனால் எனது நினைவுச் சுவடுகளில் முக்கியமானது!
பொ. நாகராஜன்