நாட்டில் ஏற்பட்டுள்ள தொழிற்புரட்சி ஒருபுறம் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வித்திட்டு இருந்தாலும், மறுபுறம் சைபர் குற்றங்கள் பெருகுவதற்கான காரணமாகவும் உள்ளது. பல்வேறு வடிவங்களில் இவை தினந்தோறும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய இணைய குற்றங்களில் ஒன்றுதான் கிரிப்டோ ஜாக்கிங். ஒருவரின் கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் சர்வர் போன்ற சாதனங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பிறர் கிரிப்டோ கரன்சி சம்பாதிக்க பயன்படுத்தும் ஒரு வகை குற்றமாகும்.
இதற்கு, 24 மணி நேரமும் இணையத் தொடர்பு கொண்டுள்ள அதிக திறன் வாய்ந்த கணினி அமைப்பு தேவைப்படுகிறது.
இதனை செயல்படுத்துவதற்கு உண்டாகும் செலவுகளைத் தவிர்க்க ஹேக்கர்கள், பிறரின் சாதனத்தில் உள்ள கணினித் திறனைத் திருடி அதன்மூலம் டிஜிட்டல் பணத்தை உருவாக்குகின்றனர். இதற்கு மைனிங் என்று பெயர்.
இச்செயல்முறையினால் ஒருவருக்கு தெரியாமலேயே அவர்களின் சாதனம் மெதுவாக இயங்கத் தொடங்கும்.
இரண்டு முக்கிய வழிகளில் ஹேக்கர்கள் இதனைச் செய்கின்றனர். ஒருவர் தான் பார்க்கும் போலி மின்னஞ்சல் இணைப்பையோ அல்லது விளம்பரத்தையோ கிளிக் செய்யும் போது, ஹேக்கர்களின் மென்பொருளானது அவரின் சாதனத்தில் தானாகவே பதிவிறக்கம் ஆகிவிடும்.
சில இணைய தளங்களில் பாதிப்பு அளிக்கும் குறியீடுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
அந்த வலைதளப் பக்கத்தை பார்வையிடும்போது பிரவுசர் மூலமாகவே கணினியின் திறன் திருடப்படும். சைபர் குற்றங்கள் வரிசையில் இது தொடர்பான புகார்கள் அதிகம் பதிவாகி வருகின்றன.
இருப்பினும் இதற்கான தீர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது. இத்துறையைச் சேர்ந்த வல்லுனர்களே பெரும் சவால்களைச் சந்தித்து வரும் வகையில்தான் இந்தக் குற்றங்கள் நடைபெறுகின்றன.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகரித்துள்ளதால் இதனை பயன்படுத்தும் ஹேக்கர்களின் பணி சுலபமாகிறது.
மேலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வுகளுக்கு உதவும் வகையில் அதிக திறன் கொண்ட கணினியினை பயன்படுத்துகின்றனர்.
இவை எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பதால் ஹேக்கர்கள் தங்களின் தேவைக்கு இவற்றை தேடிச் செல்கின்றனர்.
மாணவர்கள் பெரும்பாலும் கட்டண மென்பொருள்கள், திரைப்படங்கள் மற்றும் கணினி விளையாட்டுகளை இலவசமாக பெறுவதற்கு முறையற்ற இணையதளங்களை நாடுகின்றனர்.
இவற்றை பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் கிரிப்டோ ஜாக்கிங் செய்யும் தீம்பொருட்களும் தானாகவே சாதனத்தில் இன்ஸ்டால் ஆகிவிடுகின்றன.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் அனுப்புவது போல போலியான மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் அனுப்புகின்றனர். அதை கிளிக் செய்யும்போது கிரிப்டோ ஜாக்கிங் மென்பொருள் சாதனத்தில் ஊடுருவுகிறது.
இந்நிறுவனங்களில் உள்ள கருவிகளை கண்காணிக்க தனிப்பட்ட நிபுணர்கள் இருப்பதில்லை. இதனை சாதகமாக்கி ஹேக்கர்கள் சுலபமாக சர்வரை கைப்பற்றுகின்றனர்.
இவை தவிர ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் தொழில் முனைவோர் பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முதல் நிதி இழப்புகள் வரை பல்வேறு சவால்கள் அடங்கியுள்ளன.
கணினியின் திறன் திருடப்பட்டுள்ளதை அறிய உதவும் அறிகுறிகளும் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
கணினியின் இயக்கம் குறைந்து கொண்டே போகும்; மென்பொருட்களைத் திறக்க அதிக நேரம் எடுக்கும்; கணினி வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாக வெப்பமடையும்; மின்சாரக் கட்டணம் திடீரென்று அதிகரிக்கும்; கணினியின் CPU மற்றும் RAM பயன்பாட்டின் சதவீதமும் உயரும்.
இத்தகைய மாற்றங்கள் கண்டறியப்பட்டால் கணினியைப் பரிசோதித்தல் முக்கியமாகிறது.
இணையவழிக் குற்றங்களைக் கையாள்வதற்கு என சிறப்பு புலனாய்வு பிரிவுகள் செயல்படுகின்றன. தேவைப்படில் இவற்றின் உதவியையும் நாடலாம்.
நுட்பமாக நடைபெறும் இதுபோன்ற செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்க, சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல் மிகவும் அவசியம்.
எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து மட்டுமே மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்; பாதுகாப்பான anti-virus மென்பொருளைப் பயன்படுத்தி சாதனத்தை அவ்வப்போது scan செய்ய வேண்டும்;
பிரவுசர்களில் கிரிப்டோ ஜாக்கிங்கை தடுக்கும் எக்ஸ்டென்ஷன்களை உபயோகிக்க வேண்டும்; தெரியாத நபர்களிடமிருந்தோ அல்லது இலவசம் என்று கூறியோ வரும் லிங்குகளைத் தொட்டு கிளிக் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
பொதுவாக அனைத்து இணைய வழிக் குற்றங்களையும் தடுக்க, போதிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மட்டுமே கை கொடுக்கும்.
S. வாணி