அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்?

சமீபத்தில் தாராபுரம், மதுராந்தகம் என்று இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்துமுடிந்து முடிவுகள் வெளிவந்த பிறகு, பலராலும் கேட்கப்பட்ட கேள்வி “இனி, அதிமுகவின் எதிர்காலம் எப்படியிருக்கும்?” என்பதுதான்.

இந்தக் கேள்விக்குக் காரணம், ஏற்கனவே அதிமுகவிற்கு தொடர் வெற்றியைக் கொடுத்த இந்தப் பகுதிகளில் அதிமுக தோற்று மூன்றாம் இடத்துக்குச் சென்றிருப்பது பலரை யோசிக்க வைத்திருக்கிறது.

குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுக என்கிற இயக்கத்திற்கு அடிப்படை வேராக இருந்த தொண்டர்களை வருத்தமடைய வைத்திருக்கிறது.

அதிமுக குறித்து பல தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கின்றன. சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

தொடர்ந்து 12 முறைகளுக்கு மேல் தோல்வியைச் சந்தித்து வரும் அதிமுகவின் எதிர்காலம் குறித்து, அதில் தற்போதிருக்கும் தலைவர்களைவிட அதிகம் கவலைப்படுவது அதனுடைய தொண்டர்கள்தான்.

தற்போது தலைமைப் பொறுப்பிலிருக்கும் எடப்பாடி பழனிசாமி தனது கட்சிப் பதவியைத் தக்க வைக்க தன்னுடன் இருந்த பல மூத்தத் தலைவர்களை தொடர்ந்து புறக்கணித்திருக்கிறார்.

அவர்களே, வழிய வந்து அவருடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தாலும்கூட எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளாததன் மிக முக்கிய காரணம், “கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ” என்பதால்தான்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலின்போது கூட கொங்கு பகுதியில், மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த செம்மலை போன்றவர்கள் அந்தக் கட்சியைவிட்டு விலகி தவெகவிற்கு சென்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே அதிமுகவிலிருந்து தவெகவிற்குச் சென்ற வைகைச் செல்வன் உள்ளிட்ட பலருக்கும் தவெக கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அதோடு, முதல்வர் விஜய்யின் பரப்புரையின்போதும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரப்புரையின்போதும் முன்வைக்கப்பட்ட முதன்மையான விஷயம் அசலான அதிமுக நாங்கள்தான் என்பதாகத்தான் அமைந்திருந்தது.

இதை வலியுறுத்துகிற விதத்தில், ஏஐ தொழில்நுட்பத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே விஜய்யை வாழ்த்தி, தனது தொண்டர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு அவரே சொல்வதாக வடிவமைக்கப்பட்டு, அந்தக் காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.

எம்.ஜி.ஆர். வகித்த அதே நிலைக்கு முதல்வரான விஜய்யை நகர்த்துவதற்கான உத்திகளை அதிகம் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?

தனது கட்சி ஏன் இப்படி யாரையும் ஒருங்கிணைக்காமல், ஒருங்கிணைக்க முயற்சியும் செய்யாமல் பிடிவாதமாய் இருக்கிறது?

அதே நேரத்தில், மக்கள் திலகத்தின் அடையாளத்தை தன்னுடைய அடையாளமாக மாற்ற தவெக ஏன் முயற்சிக்கிறது?

இத்தகைய கேள்விகள் அதிமுக தொண்டர்களிடம் இருப்பதனால்தான் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையிலும் அதிமுக தனது அடிப்படையான வாக்குகளைத் தக்க வைத்திருக்கிறது.

ஆக, அதிமுகவின் தொண்டர்கள் சோர்ந்துவிடவில்லை. குழப்பத்தில் ஆழ்ந்து விடவில்லை. ஆனால், குழப்பம் இருப்பது தற்போதைய அதிமுக தலைமையிடம்தான்.

அதனால்தான், அக்டோபர் 17-ம் தேதி அதிமுக துவங்கப்பட்ட நாளில் கூட கட்சி ஒன்றுபட்டு மக்களைச் சந்திக்காமல், கட்சியில் நடக்கும் பிளவுகளை பெரிதாகத் தெரிகின்றன.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தன்னை விமர்சித்து வெளியேறிய எஸ்.டி. சோமசுந்தரம் போன்றோரை அவர்களது வீடு தேடிச் சென்று மீண்டும் இணைய வைத்திருக்கிறார். அவர் ஈகோ பார்க்கவில்லை.

அதேமாதிரி தன்னை கடுமையாகவும் கொச்சையாகவும் விமர்சித்த ஆர்.எம்.வீரப்பன், பி.எச். பாண்டியன், காளிமுத்து போன்றவர்களை அதிமுகவில் இணைத்து, அவர்களுக்குப் பதவி தருவதற்கு அதிமுக தலைமைப் பொறுப்பிலிருந்த ஜெயலலிதா தயங்கவில்லை.

அவர்களை இணைப்பதில் அவரும் ஈகோ பார்க்கவில்லை.

அதிமுக என்கின்ற மாபெரும் இயக்கத்தில் ஜா, ஜெ அணி என்று பிரிந்து நின்றபோது, திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். காட்டிய அளவுகடந்த பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஈகோவை முன்னிறுத்தாத தன்மை போன்றவற்றால்தான் அதிமுக என்கின்ற இயக்கம் மீண்டும் வலிமைபெற்றது.

இரட்டை இலை சின்னத்தை மீட்டு, மீண்டும் பெரும் வெற்றியைப் பெற்றது.

இதெல்லாம், கடந்த காலத்தில் அதிமுக தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கான சில உதாரணங்கள்.

இத்தகைய உதாரணங்களை அதிமுகவிலிருக்கும் எல்லா தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்.

அதனால், இன்றைய அதிமுக தலைமை இதனை ஏற்று, தன்னை மறுபரீசிலனை செய்து கொள்ளுமா?

தனது நலனை மட்டும் பார்க்காமல், அதிமுக என்கிற கட்சியின் நலனை மையமாக வைத்து, காலத்திற்கேற்ற முடிவுகளை எடுக்குமா?

இந்தக் கேள்விகளில் தான் தொக்கி நிற்கிறது அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தின் எதிர்காலம்.

– லியோ

Comments (0)
Add Comment