முதல்வர் விஜய்யுடனான இரண்டு முக்கிய சந்திப்புகள்!

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு சில வியக்க வைக்கும் அரசியல் நிகழ்வாக தமிழக முதல்வர் விஜய்யை முதல்நாள் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி சந்தித்தார்.

உடன் சாப்பிட்டார். தேநீர் அருந்தினார். மீடியாக்களுக்கு கொஞ்சம் தீனியும் அள்ளிக் கொடுத்தார்.

பிறகு சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள போய்விட்டார்.

அதற்கு மறுநாளே பிரதமர் மோடி 11 மணிக்குமேல் சென்னை விமான நிலையத்தில், வந்திறங்கியபோது அவரை வரவேற்க தமிழக முதல்வர் விஜய்யும் காத்திருந்தார். பொறுப்பு ஆளுநரும் காத்திருந்தார். கூடவே எடப்பாடி பழனிசாமியும் காத்திருந்தார். 

வந்த பிரதமரை பூங்கொத்துக் கொடுத்து வரவேற்று அடுத்தடுத்த காரில் பயணம் செய்த விஜய், சென்னை போரூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்க சென்றபோது, பிரதமர்தான் துவக்குவதாக சொல்லப்பட்டாலும், மோடி விஜய்யின் கையையும் சேர்த்து பச்சைக் கொடி காட்டியது, மீடியா முழுக்க பேசுபொருளானது.

அதைத் தொடர்ந்து ஜலகண்டீஸ்வரர் கோவிலுக்கு மோடியுடன் சென்றுவிட்டு ஐஐடி வளாகத்திலுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டு கலந்துபேசிவிட்டு, பிறகு அதே வளாகத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை மோடி துவக்கி வைத்தபோது, அவருக்கு முன்னால் உரையாற்றியவர் தமிழக முதல்வர் விஜய்.

மற்ற கூட்டங்களில் பேசுவது மாதிரி இல்லாமல், மிகவும் கனிவானபடி அமைந்திருந்தது விஜய்யின் பேச்சு.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி பேசிய விஜய், பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வெளிப்படையாகவே முன் வைத்தார்.

தமிழகத்தில், நிலுவையிலிருந்த நிதியை உடனே பரீசிலித்துக் கொடுக்கச் சொன்னவர், மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தக்கட்டப் பணிகளை மதுரை, கோவை என்று விரிவுபடுத்துவதன் அவசியத்தைப் பற்றிச் சொன்னார். 

தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்பதை வற்புறுத்தினார்.

இப்படி அடுத்தடுத்து, தமிழக நலனை முன்னிறுத்தி பிரதமரான மோடிக்கு முன்பே முதல்வரான விஜய் பேசிய கருத்துக்கள் அன்றைய மாலைப் பொழுதின் தொலைக்காட்சி விவாதங்களுக்கு விவாதப்பொருளானது.

எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு இடங்கொடுக்காத விதத்தில், பிரதமர் சென்னைக்கு வந்ததிலிருந்து அவர், விடைபெற்று டெல்லிக்குச் செல்வது வரை அவரை வழியனுப்பி வைத்தார்.

தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வெளிப்படையாக முதல்வர் விஜய் முன் வைத்தது, தமிழக அரசியல் அரங்கில் விசேஷமாக கவனிக்கப்பட்டது.

முதல்நாள் காங்கிரஸ் மூத்த தலைவராக ராகுல்காந்தியை சந்தித்த விஜய், அதற்கு மறுநாளே பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மக்களின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்தது என்று சென்னையில் அண்மையில் நடந்த இரண்டு நாள் நிகழ்வுகளும் எழுப்பும் அரசியல் அதிர்வு சில காலத்துக்குக் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

Comments (0)
Add Comment