தவெக அரசில் யார் முடிவெடுக்கிறார்கள்?

தவெக ஆட்சி அமைத்த நான்கு மாதங்களுக்குள் சிலரது நியமனங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட பிறகு திரும்பவும் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன.

சில செயல்திட்டங்களுக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்த பிறகு பின்வாங்குதலைச் சந்தித்திருக்கின்றன.

மிக குறுகிய காலத்திற்குள்ளேயே இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, தவெக அரசின் முக்கிய முடிவுகளை தீர்மானிப்பது யார்? என்கின்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

அதிலும், சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

இந்தத் தகவல் பரவிய சில நாட்களுக்குள் அரசாணையும் வெளியிடப்பட்டது. அதற்கென 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

ஆனால், மீனவர்கள் தரப்பில் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து பலத்த விமர்சனங்கள் எழுந்த பிறகு தற்போது, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை பார்க்கும்போதுதான் ஏன் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை இவ்வளவு அவசரமாக அறிவித்தார்கள்?

எதிர்ப்புகள் பரவலான பிறகு, ஏன் அதை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார்கள்?

அப்படியென்றால், இந்த செயல்திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் யார்?

இப்படி ஒரு செயல்திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை அதே அதிகாரிகள் யோசித்திருக்க மாட்டார்களா?

முதல்வரான விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டபோதே இப்படியெல்லாம் எதிர்வினையையும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதை ஏன் அவர்கள் உணர்த்தவில்லை?

தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி தலைமைச் செயலகம் அமைவது குறித்த முடிவை எடுத்திருந்தால், தற்போது தவெக அரசு சந்தித்திருக்கிற அவசர அறிவிப்பும், அவசர பின்வாங்கலும் வர வாய்ப்பிருந்திருக்காதே?

ஆனால், ஒன்றை மட்டும் விஜய் நன்கு உணர வேண்டும்.

என்னதான் அதிகாரிகள் சில அவசரமான அல்லது தவறான, நடைமுறை சாத்தியமில்லாத ஒரு செயல்திட்டத்தை தன்னிடம் கூறினால், அதை பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்குத்தான் இருக்கிறது.

அப்படி இல்லாமல், திட்டத்தை ஓகே செய்தால், இம்மாதிரியான பின்விளைவுகளையும் கடும் விமர்சனங்களையும் சூழ்நிலைதான் உருவாகும்.

எந்த ஒரு ஆட்சியிலும் அதிகாரிகள் பொறுப்பிலிருப்பது பரந்துபட்ட மக்கள் நலனுக்காகத்தான் என்பதை உணர வேண்டும்.

அப்படி உணராதபோதுதான் இத்தகைய அவசர அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு சில சறுக்கலை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மக்கள் நலன் சார்ந்து முடிவெடுப்பதாக சொல்கிற முதல்வர் விஜய், தன்னிடம் எந்த ஒரு அதிகாரியும், சரிவர உணராத நிலையில் சில செயல் திட்டங்களை அறிவித்தால், அதை கவனத்துடன் பரிசீலித்து தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர வேண்டும்.

– யூகி

Comments (0)
Add Comment