யாருக்கும் வெட்கமில்லை…!

கண்ணதாசன் 100 :  பாடல்-6

காதல், பாசம், நம்பிக்கை, தத்துவம் என்று பன்முக வடிவத்தில் பல திரையிசைப் பாடல்கள் எழுதியிருக்கிற கவியரசர் கண்ணதாசன் நம்மைச் சுற்றியிருக்கிற அரசியல், சமூக நிகழ்வுகளை அம்பலப்படுத்துகிற மாதிரியான பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

மிக எளிமையான முறையில், தன்னுடைய எதிர்வினையை தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு முன்னால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்படி வெளிப்படுத்திய பாடல் தான் 1975-ல் வெளிவந்த ‘யாருக்கும் வெட்கமில்லை’. இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் ‘சோ’.

அரசியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைப் பேசும் படத்தில், இந்தப் பாடலை பாடியிருப்பவர் கே.ஜே. ஜேசுதாஸ்.

ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் உருவான, 

யாருக்கும் வெட்கமில்லை
ஊருக்கும் வெட்கமில்லை

இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன

என்று துவங்கும் இந்தப் பாடலில் இடம்பெற்ற கீழ்க்கண்ட வரிகள் கவியரசரின் எள்ளலான அரசியல் உணர்வை சொல்லாமல் சொல்லும்.

அத்திப் பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை

மூடர்கள் ஏற்றிய குற்றத்தை
மறந்து முதுகைப் பாருங்கள்
முதுகினில் ஆயிரம் அழுக்கு
அதனை கழுவுங்கள்

சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில் மற்றும்
மூன்று விரல்கள் உங்கள் மார்பினைக் காட்டுதடா

எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போது இந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எ..ம..னு..க்கும் வெட்கமில்லை

– இன்றைய நடப்பு அரசியலுக்கும் மிகவும் கட்சிதமாக பொருந்தும் இந்தப் பாடலை எவ்வளவு எளிமையாகவும் அதேசமயம் செறிவாகவும் உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

கவியரசரின் இம்மாதிரியான வரிகளை என்றைக்கும் பொருத்தமான வரிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது நம்மைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் சமூகச் சூழல்.

– எம்.மாலதி, செய்யாறு

Comments (0)
Add Comment