நம் கல்வி நம்மையும் நாட்டையும் உயர்த்தியதா?

டாக்டர் க. பழனித்துரை

ஒரு பல்கலைக்கழகத்தில் புதிதாக உயர்கல்விக்கு சேர்ந்த மாணவர்களை பல்கலைக்கழக சூழலுக்கு பக்குவப்படுத்தி அவர்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள ஐந்து நாள் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினார்கள்.

அதற்கு ஸ்டூடன்ஸ் இன்டக்‌ஷன் ப்ரொகிராம் என பெயரிட்டு நடத்தினர்.

அந்த பல்கலைக்கழக இயங்கு விதிகள் என்னென்ன? அந்த பல்கலைக்கழக கலாச்சாரம் என்ன? அங்கு மாணவர்களுக்காக பிரத்தியகேமாக செயல்படும் அமைப்புக்கள் எவை எவை, பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? அவைகளைப் பயன்படுத்தும் முறைகள் என்னென்ன? என்று மாணவர்களுக்கு விளக்கினர்.

அந்த நிகழ்வுக்கு என்னை நிறைவுரையாற்ற அழைத்திருந்தனர். பொதுவாக அப்படிப்பட்ட நிகழ்வுகளை இன்று எல்லாப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நடத்துகின்றன.

இது பெரும்பாலும் இன்று ஒரு சடங்குபோல் ஆகிவிட்டாலும், அதில் பங்கு பெறும் மாணவர்கள் திறனைப் பொறுத்து அதில் கிடைக்கும் செய்திகளை தங்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்வர்.

கற்கும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் கவனமாக அவைகளைக் கேட்டு பெரும் பயனை அடைந்துவிடுவர். அதை என் 35 ஆண்டுகால அனுபவத்தில் பார்த்து வருகிறேன்.

அந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து ஐந்து நாட்களும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டிடும் வகையில் உரையாற்ற வைப்பர்.

ஐந்து நாட்கள் நிகழ்வு என்பது சாதாரணமல்ல. ஆயிரம் மாணவர்களை ஐந்து நாள், அதுவும் புதிய சூழலுக்கு வந்தவர்களை நெறிப்படுத்துவது, உரையாடுவதற்கு பேராசிரியர்களைக் கொண்டு வருவது, மாணவர்களை அந்த நிகழ்வில் பேச்சைக் கேட்க வைப்பது அனைத்தும் ஒரு சவாலான பணிதான்.

ஆனால், அந்த நிகழ்வை கூர்ந்து கவனித்தால் அதன் ஆழமான பொருளைப் புரிந்துகொண்டு மாணவர்கள் பங்கேற்க முடியும்.

இந்த நிகழ்வு எங்கே தொடங்கியது என்றால் மேற்கத்திய நாட்டில், அதுவும் குறிப்பாக வட அமெரிக்க நாட்டில்தான்.

அங்கு என்ன குறிக்கோளைக் கொண்டு அந்த நிகழ்வை நடத்தினார்களோ அதை வைத்துத்தான் இந்திய நாட்டில் நாமும் கல்விச்சாலைகளில் நடத்துகிறோம்.

அங்கு நடத்தும் முறைமைக்கும் இங்கு நடத்தும் முறைமைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அங்கு நடத்தும் நிகழ்வில் ஒரு உயிரோட்டம், உணர்வு, உந்து சக்தி அதில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

மாணவர்களை தொடர்ந்து பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு கருத்தாளர் பேசி முடித்து அடுத்த கருத்தாளர் பேச வரும்போது அடுத்த புதுமை என்னவாக இருக்கப்போகிறதோ என்ற ஆவலில் மாணவர்கள் காத்திருக்க வைப்பர்.

 

அந்த அந்த அளவுக்கு அந்த நிகழ்வு காத்திரமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும்.

இங்கு நாம் ஒரு கலாச்சாரத்தில் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறோம். ஆணையிடுவதை நிறைவேற்றும் ஒரு கலாச்சாரம். அதில் உயிரையும், உணர்வையும் பார்ப்பது கடினம். எதையும் சடங்காக்கி செயல்படுவது.

இதற்கு யாரோ ஒருவரை குறை சொல்ல முடியாது, ஒட்டுமொத்தமாக இந்தியர்களாகிய நாம் அனைவரும் காரணம் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

நான் பணியாற்றிய பல்கலைக்ககழகத்தில் நான் வடிவமைத்து செயல்படுத்தியபோதும் முடிவில் அது ஒரு சடங்காகிவிட்டது.

ஆனால் நான் சென்ற நிகழ்வு அங்கு சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் மட்டுமின்றி, இன்று மாணவர்களை தடமாற்றும் பிரச்சினைகள் பற்றியும் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் விவாதித்தது சற்று வித்தியாசமாக மாணவர்களுக்கு சமூகக் கண்ணோட்டத்தை உருவாக்கும் விதமாக இருந்தது என்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதை விடவும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து மாணவர்களுடன் இருந்த இரண்டு பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்தும், ஒவ்வொரு அமர்வில் நடந்த உரை பற்றி பின்னூட்டம் தந்த மாணவர்களையும், தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எதாவது ஊக்கப்பரிசு தரவேண்டும் என வேண்டியபோது அதை நானே தருகிறேன் என்று கூறினேன்.

அதற்கு நான் எழுதிய “அரசமைப்புச் சாசன முகப்புரை: ஓர் எளிய அறிமுகம்” என்ற நூலை 50 பிரதிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

நான் இறுதியாக நிறை உரையாற்ற இருந்த நிகழ்வுக்கு முன் ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது.

அது சினிமா கலப்பு இல்லாமல் அந்தப் பல்கலைக்கழக மாணவர்களே கிராமிய நிகழ்வாக நாட்டுப்புற கலையாக நடத்தியது ஒருவித புது மாதிரியாக இருந்தது.

அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நான் செல்வது முதல் தடவையல்ல. அந்தப் பல்கலைக்கழகத்துடன் எனக்கு நீண்ட நெடிய தொடர்பு உண்டு.

எதையும் அங்கு நிபுணத்துடன் செய்யும் இயல்பும் திறனும் கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் நிறைய பேர் அங்கு உண்டு என்பதை நான் அறிவேன்.

மாணவர்களை நெறிப்படுத்துவது, கூட்டத்தில் அமைதி காப்பது, நேரம் தவறாமை, கண்ணியமாக கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுதல் என்பது அங்கு உள்ள ஒரு கலாச்சாரம்.

எனவே சரியாக 4.30 மணிக்கு நிறைவு விழா ஆரம்பித்தது. அனைவரும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டனர். இந்த நிகழ்வைப் பற்றி இரண்டு மாணவர்கள் கருத்துக்கூற அழைத்தனர். உடனே இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் எடுத்து வந்தனர்.

அந்த நால்வரும் இந்த நிகழ்வில் தாங்கள் பெற்றது என்ன என்பதை விளக்கினர்.

அதன்பின் அந்த நிகழ்வின் தலைவராக இருந்த அந்த பல்கலையின் பதிவாளர் தன் தலைமையுரையில் மாணவர்களுக்கு இன்றைய தேவை என்ன, அதை எப்படி பெறுவது என்பதைப் பற்றியும், இந்த நிகழ்வு எப்படி அமெரிக்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதையும் விளக்கிப் பேசிவிட்டு தன் உரையில் மாணவர்களைப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து என்னை பேச அழைத்தனர். என்னுரையில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டிவிட்டு என் உரையைத் தொடர்ந்தேன்.

மாணவர்களுக்கு புதிய சூழலில் தங்களை எப்படி பல்கலைக்கழக சூழலுக்கு தகவமைத்துக் கொள்வது என்பதை கற்றுத்தந்து மாணவர்களைப் புதிய சூழலுக்கு பழக்குவதுதான் இதன் அடிப்படை நோக்கம்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அறிவைக் கொடுப்பதைக் கடந்து ஒவ்வொரு நோக்கம் மற்றும் குறிக்கோள் இருக்கும். அதை மாணவர்களுக்கு கடத்தி புரிய வைக்க வேண்டும்.

நான் பணியாற்றிய பல்கலைக்கழகத்திற்கு குறிக்கோள் கிராமங்களை அடிப்படை மாற்றங்களைச் செய்து கிராமங்களை கிராமியமாக, குட்டிக் குடியரசாக உருவாக்குவதுதான் நோக்கம்.

அதேபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்றால் அது தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு காக்க தலைவர்களை உருவாக்கும் பல்கலைக் கழகமாகத்தான் விளங்கியது.

அதேபோல் தான் சில கல்லூரிகள், அதில் எந்த படிப்பை படித்தாலும், ஒரு ஆளுமையாக மாணவர்களை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டதாக செயல்படும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றின் இலச்சினையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள் வித்தியாசமானவைகள்.  – இப் நாட் ஐ, கூ “If not I who” “If not now when”

அங்கு சென்ற ஒரு மாணவரிடம் இதைப்பற்றி ஒரு விளக்கம் கேட்டார் ஓர் அறிஞர்.

அந்த மாணவன் கூறினான் உலகம் போட்டியில், போராட்டத்தில் தான் முன்னேற்றம் கண்டுகொண்டு இருக்கிறது. மேம்பாட்டுக்கான போட்டி, உரிமைகளுக்கான போராட்டம் நடந்த வண்ணம்தான் உள்ளன.

இதில் இங்கு படிக்கும் மாணவர்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நான் இல்லை என்றால் யார் என்ற உணர்வில் செயல்படக் கூடியவர்களாக இங்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

அதேபோல் அந்த செயல்பாடுகளில் நான் பங்கேற்கவில்லை என்றால் யார் பங்கேற்பது என்ற பொருளில்தான் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதேபோல் இப்போது செயல்படவில்லை என்றால் எப்போது என்பதுதான் அதன் விளக்கம் என்று அந்த மாணவன் கூறினான்.

கொலம்பியா பல்கலைக்கழகம் வித்தியாசமான பார்வையைத் தரும் என்று கூறுவார்கள்.

அங்குதான் அம்பேத்கார், அமர்த்தியா சென், ஜே.சி.குமரப்பா படித்துள்ளனர். அதேபோல்தான் இந்தியாவில் பரோடா பல்கலைக்கழகத்தைக் கூறுவார்கள்.

எனவே பல்கலைக்கழகம் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவச் சிந்தனையுடன், கண்ணோட்டத்துடன் இயங்கும் தன்மை கொண்டவை.

அந்த புரிதலை உருவாக்கத் தேவையான செய்திகளை முதலில் புதிதாக வரும் மாணவர்களுக்குக் கடத்த வேண்டும்.

அதற்காகத்தான் இந்த நிகழ்வு என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவை அத்தனையும் மாணவர்களை தலைசிறந்த ஆளுமையாக மாற்றிடச் செய்யும் முன்னெடுப்பாகும்.

அடுத்து நமக்கு ஒரு பொதுப்புரிதல் வேண்டும். இன்றைய கல்வி பிழைப்புத் தேடும் ஒன்றைப் புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தி விட்டோம். அதன் விளைவு படித்தவர்கள் சுயநலம் சார்ந்து வாழ்பவர்களாக செயல்படுவதை நாம் பார்த்து வருகிறோம்.

நாம் சமூகமாக வாழ்ந்தவர்கள். இன்று சுயநலமாக வாழ இன்றைய சந்தையும் அரசியலும் நம்மை பழக்கி வைத்திருக்கிறது. கல்வி என்பது பிழைப்புத் தேடுவது அல்ல. கல்வி சமூகத்திற்கானது.

நாம் கல்வி கற்பது நம் அறிவை, திறனை, ஆற்றலை வளர்த்து நற்செயலுக்கான மனிதனாக நம்மை மாற்றிக் கொள்வதற்கு.

இந்த இடத்தில் இந்திய நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஜவஹர்லால் நேரு உயர்கல்விக் கூடங்களைப் பற்றி கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

“ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதாபிமானத்தை வளர்க்கும் இடமாக, அறிவியல் அடிப்படையில் செயல்படும் இடமாக, உண்மை தேடும் இடமாக, புதுக் கருத்துக்களுக்கு சாகசம் செய்யும் இடமாக, மனித குலம் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிவகை காணும் இடமாக செயல்பட வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.

நாம் உருவத்தில் மனிதர்கள்தான். உள்ளத்தில் மனிதர்களுக்கான பண்புகளுடன் இருந்தால் நாம் அனைவரும் பக்குவமான, கட்டுப்பாடு நிறைந்த நேர்மையான ஒழுக்கமான மனிதர்களாக வாழ்ந்தால் அதுதான் சமூகத்திற்கான வாழ்க்கை.

சுயநலமாக வாழ்வதில்தான் அவ்வளவு மனிதப் பண்புகளான அறிவு, கருணை, நேசிப்பு, நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், நியாயம், நியதி, நீதி என அனைத்தையும் இழந்த மனிதர்களாக வாழ்கிறோம்.

சுயநலத்துடன் பணிக்கும் பதவிகளுக்கும் செல்வதால் ஊழல் செய்ய தயங்குவதில்லை. அதில் எந்தச் கூச்சமும் அற்று அதை அனைவரும் செய்வது நம் கல்வியில் நிகழ்ந்த பிழை.

எனவே நமக்கு நாமே தலைமையேற்று நமக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டுபிடித்து சமூகநலம் சார்ந்து செயல்படும் முழு மனிதராக மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் இன்று சாதாரணக் கனவுகளில்தான் வாழ்கிறோம்.

ஒரு ஆசிரியராக வேண்டும், மருத்துவராக வேண்டும், ஒரு பொறியில் வல்லுனராக வேண்டும் என்ற சின்னச் சின்ன கனவுகளில் தான் வாழ்கிறோம்.

இவைகளைக் கடந்து சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாட்டுக்கான பெருங்கனவை நாம் காண வேண்டும். கல்வி அதைத்தான் தூண்ட வேண்டும்.

இன்று நாம் பொருளாதாரத்தில் வளர்ந்தோம், அறிவியலில் வளர்ந்தோம், தொழில்நுட்பத்தில் வளர்ந்தோம், ஆனால் சமூக வாழ்வில் நாம் அனைவருமே பொறுப்பற்று செயல்படுகிறோம்.

அதன் விளைவு பொறுப்பற்று செயல்பட பழகிக்கொண்டோம். ஒரு குடிமகனாக, குடிமகளாக, பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாம் இன்று பயனாளியாகவும், மனுதாரராகவும், வாக்காளராகவும் வெறிபிடித்து நுகர்வோராகவும் மட்டுமே வாழ்ந்து, நாம் நாட்டுக்கு பாரமாக ஆகி விட்டோம்.

அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் குறை கூறி, குற்றம் கூறி வாழப் பழகி விட்டோம்.

இதன் விளைவுதான் நாம் பார்க்கும் மத அரசியல், ஜாதி அரசியல், வன்முறை அரசியல், கட்சி அரசியல். இங்கு அறிவியல்பூர்வமான மக்களாட்சிக்கான ஒரு அரசியல் நடைபெறவில்லை.

உலகில் மக்களாட்சியை எந்த அளவுக்கு பக்குவமாக பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு சமூகம் மேம்பட மக்களாட்சி பயனளிக்கும்.

ஆனால், இன்று நம் நாட்டில் அந்த தாராளமய மக்களாட்சியை எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு கெடுத்துவிட்டோம்.

நாம் எந்தப் பொறுப்பும் இன்றி எந்த விதிகளையும் மீறி வாழ்வதற்கு நாம் அனைவரும் தயாராகி விட்டோம். நம்மிடமிருந்த வாழ்வியல் விழுமியங்களையெல்லாம் நாம் கைகழுவி விட்டு வாழ்க்கைச் சுகம் தேடும் மனிதராக மாறிவிட்டோம்.

அரசியல், ஆட்சி, நிர்வாகம் ஊழலில் ஊறி மிதக்கின்றன. அதில் நாமும் நம்மால் இதை மாற்ற முடியாது என புலம்பி விட்டு அதில் கலந்து கொள்கிறோம். இவற்றையெல்லாம் மாற்றியமைக்க நம் போன்ற படித்தவர்கள் முன்வரவில்லை என்றால் யார் வருவர்.

எனவே நாம் படிப்பது நமக்காகத்தான், அது நாட்டுக்குப் பயன்பட்டால் நமக்கும் பயனளிக்கும்.

நாடும் சமூகமும் மேம்படாமல் நாம் எவ்வளவு வசதிகளை வைத்திருந்தாலும் அமைதியாக வாழ இயலாது என்பதைப் புரிந்துகொண்டு பொறுப்புள்ள குடிமகனாக வாழ நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என என் உரையை நிறைவு செய்தேன்.

Comments (0)
Add Comment