சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சிலிருந்து பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காக்கும் இயற்கை அமைப்பே ஓசோன் படலம் ஆகும்.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் உள்ள ஸ்ட்ரேடோஸ்பியர் பகுதியில், புவிப்பரப்பிலிருந்து சுமார் 15 முதல் 30 கிலோ மீட்டர் உயரத்தில் செறிவாக அமைந்திருக்கும் வாயுப் படலமே ஓசோன் என்று அழைக்கப்படுகிறது.
ஓசோனின் பயன்பாடுகளும் முக்கியத்துவமும்
இயற்கைப் பாதுகாப்பு :
வளிமண்டல மேலடுக்கில் உள்ள ஓசோன் படலம், சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் UV-B மற்றும் UV-C புறஊதா கதிர்களைத் தடுத்து நிறுத்துகிறது.
இக்கதிர்வீச்சு நேரடியாகத் தாக்காததால் பூமியில் வாழும் மனிதர்களுக்குத் தோல் புற்றுநோய், கண்புரை, மரபணுக் கோளாறுகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலப் பலவீனம் போன்ற ஆபத்துகள் தடுக்கப்படுகின்றன.
மேலும் கடல்வாழ் பிளாங்க்டன்கள், தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சமநிலையையும் இந்த ஓசோன் படலம் பாதுகாக்கிறது.
ஓசோன் வாயுவின் தீவிர ஆக்ஸிஜனேற்றும் பண்பு காரணமாக, குடிநீர்த் சுத்திகரிப்பு நிலையங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும் கிருமிநாசினியாகப் பயன்படுகிறது.
மேலும் மருத்துவக் கருவிகளைக் கிருமிநீக்கம் செய்யவும், நீச்சல் குளங்களின் நீரைத் தூய்மைப்படுத்தவும், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் தொழிற்சாலைக் காற்று மற்றும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
ஓசோன் தினம் ஏன் அறிவிக்கப்பட்டது?
1970-களின் இறுதியில், மனிதர்கள் தயாரித்துப் பயன்படுத்திய ரசாயனங்களால் ஓசோன் படலத்தில் பெரும் சிதைவு ஏற்படுவது கண்டறியப்பட்டது.
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து, 1987 செப்டம்பர் 16-ம் தேதி அன்று ‘மாண்ட்ரீல் நெறிமுறை’ (Montreal Protocol) எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்கின.
இந்த ஒப்பந்தத்தின் வெற்றியை நினைவு கூறும் விதமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் 1994-இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை செப்டம்பர் 16-ம் தேதியை ‘உலக ஓசோன் தினமாக’ அறிவித்தது.
ஓசோன் சிதைவிற்கான முதன்மை காரணங்கள் என்ன:
மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கலக்கும் செயற்கை வேதிப்பொருட்களே ஓசோன் படலம் பாதிப்படைவதற்கு முதன்மை காரணமாகும்:
வேதிப்பொருட்கள்:
பழைய ஏசிகள், குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட CFC, தீயணைப்புக் கருவிகளில் உள்ள ஹேலான்கள், HCFC, தொழில்துறை கரைப்பான்களான கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் விவசாயப் பூச்சிக்கொல்லியான மெத்தில் புரோமைடு.
பூமியிலிருந்து வெளியாகும் CFC வாயுக்கள் வளிமண்டல மேலடுக்கை அடையும்போது, சூரிய புறஊதா கதிர்களால் உடைக்கப்பட்டு குளோரின் அல்லது புரோமின் அணுக்களாக பிரிகின்றன.
இதில் பிரியும் ஒரு தனி குளோரின் அணு, தான் அழிவதற்கு முன்பாக சுமார் 1 லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கும் திறன் கொண்டது.
இயற்கைக் காரணிகள்:
அண்டார்டிகாவின் தீவிரக் குளிரால் உருவாகும் ‘துருவப்பகுதி மேகங்கள்’ குளோரின் வினையை வேகப்படுத்துகின்றன. தவிர எரிமலை வெடிப்புகளும் தற்காலிகச் சிதைவுக்கு காரணமாகிறது.
தற்போதைய நிலையும் நம் கடமையும்
மாண்ட்ரீல் நெறிமுறையின் வெற்றிகரமான செயல்பாட்டால், ஓசோனை சிதைக்கும் 99% வேதிப் பொருட்களின் பயன்பாடு உலகளவில் படிப்படியாக நிறுத்தப்பட்டது.
இதன் விளைவாக அண்டார்டிகா பகுதிக்கு மேல் ஏற்பட்டிருந்த ஓசோன் துளை சுருங்கி வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் 2040 முதல் 2066-க்குள் ஓசோன் படலம் 1980-க்கு முன்பிருந்த பழைய இயல்பு நிலையை முழுமையாக அடையும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன:
1. CFC மற்றும் HCFC இல்லாத சுற்றுச்சூழல் – நட்பு (Eco-Friendly) சாதனங்களை மட்டுமே வாங்குதல்.
2. ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளைச் சீராகப் பராமரித்து வாயுக் கசிவைத் தடுத்தல்.
3. தனிநபர் வாகனங்களைக் குறைத்து, பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரித்து மாசைக் கட்டுப்படுத்த உதவுதல்.
4. பிளாஸ்டிக் மற்றும் ரசாயனக் கழிவுகளைத் திறந்தவெளியில் எரிப்பதை தவிர்த்தல் போன்றவை.
ஓசோன் படலம் என்பது பூமிக்கு இயற்கை அளித்த இலவச உயிர்க்கவசம்.
அதைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொருவருடைய கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த பாதுகாப்பாக இதுவே அமையும்.
– யாழினி