உலகில் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வையே நேரம் என்கிறோம்.
கடந்து போன நேரத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் மீண்டும் பெற முடியாது. ஆனால், அதனை வீணாக்காமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் செலவிடுவது நம் கையில் தான் உள்ளது.
இதன் காரணமாகத்தான் கையில் கடிகாரத்தை கட்டிக்கொண்டு அடிக்கடி நேரத்தை பார்த்து அதன் அருமையை உணர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த கடிகாரங்களை தயாரிப்பதில் உலகளவில் முதலிடத்தை பிடித்திருப்பது ஸ்விட்சர்லாந்து.
இது உலகத்தரம் வாய்ந்த சொகுசு மற்றும் துல்லியமான கைகடிகாரங்களின் தாயகமாக திகழ்கிறது.
உலகளாவிய சந்தையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு கொண்டு, சிறந்த வடிவமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் இவை சிறந்து விளங்குகின்றன.
Made in Swiss என்றிருந்தால் அது வெறும் தயாரிப்பு மட்டுமல்ல ஒரு சர்வதேச தரம் மற்றும் நம்பகத்தன்மையின் அடையாளமாக அறியப்படுகிறது.
பிளாட்டினம், தங்கம், Quartz வகைகள், Mother of Pearls என்று அழைக்கப்படும் முத்துக்களால் பின்னப்பட்டவை, Steel, Ceramic, விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டவை, Sporty, Classic, Trendy என பல தரப்பட்ட கடிகாரங்களை தயாரித்து உலக சந்தையில் கடை விரித்திருக்கிறது ஸ்விட்சர்லாந்து.
ஜப்பான், ஹாங்காங் என்று பல நாடுகளின் போட்டிக்கிடையே தன்னுடைய நானூறு ஆண்டுகள் கடிகாரத் தயாரிப்பில் பின்பற்றி வரும் பாரம்பரியத்தாலும் பல புதிய முறைகளில் வடிவமைக்கும் திறமையாலும் இன்றும் கடிகாரங்களை தயாரிப்பதிலும், உலகம் முழுவதும் அதனை ஏற்றுமதி செய்வதிலும் இந்நாடு முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
உலக அளவில் உள்ள பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் கைக்கடிகாரங்கள் ஸ்விட்சர்லாந்தின் தயாரிப்பே.
Rolex: உலகில் மிகவும் பிரபலமாக அறியப்படும் சொகுசு கை கடிகார வகையைச் சேர்ந்தது. இது அந்தஸ்து மற்றும் செல்வச் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
நீடித்த தன்மை மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு இதன் சிறப்பம்சமாகும். ஹாலிவுட் நடிகர் Brad Pitt தன் திருமண பரிசாக இந்த வகை கடிகாரத்தை தான் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Omega: விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆழ்கடல் ஆய்வுகளில் துல்லியமாக செயல்படுவதில் இந்த வகை கடிகாரங்கள் தனித்துவம் வாய்ந்தவை.
ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ நேர கணக்கீட்டாளராக இருந்ததோடு நாசாவின் நிலவு பயணங்களில் பயன்படுத்தப்பட்ட பெருமையும் இந்த வகை கடிகாரங்களுக்கு உண்டு.
Patek Phillipe: பாரம்பரியமான மற்றும் மிகவும் நேர்த்தியான மெக்கானிக்கல் கடிகார வகைகளில் இது முதன்மையானதாகும். தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் கலை படைப்பாகவும் இவை விளங்குகின்றன.
இதில் minute repeater என்ற ஒரு வகையினை செய்வதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்படும். சிக்கலான வடிவமைப்பை சேர்ந்த இது பிரபலங்களின் விருப்ப தேர்வாக உள்ளது.
TAG Heuer: விளையாட்டு மற்றும் பந்தயங்களில் அதிகம் பயன்படுத்தப்படுபவை இவ்வகை கடிகாரங்கள். கார்களின் வேகத்தை துல்லியமாக கணக்கிடும் தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு இதன் சிறப்பம்சமாகும்.
ஃபார்முலா ஒன் ரேஸ்களின் நேரக்காப்பாளராக இது நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.
Breitling: விமான போக்குவரத்தோடு ஆழமான தொடர்புகளை கொண்டவை இவ்வகை கடிகாரங்கள்.
விமான ஓட்டிகள் மற்றும் சாகச பயணிகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் அதிக செயல் திறன் கொண்டவையாக இவை விளங்குகின்றன.
சுவிஸ் கடிகாரங்கள் வெறும் நேரத்தை அறிய உதவும் சாதனமாக மட்டுமல்லாமல் காலத்தை கடந்த வாழ்வியலோடு தொடர்புடைய ஒரு கலை வடிவமாகவும் கருதப்படுவதால் உலகெங்கிலும் உள்ள கடிகார பிரியர்களின் விருப்பத் தேர்வாக இன்றளவும் திகழ்கிறது.
S. வாணி