இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் கட்டுரையின் தொடர்ச்சி:

ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் :

அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968), வள்ளுவர்‌ கண்ட இல்லறம் (1971)  எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம்,
5. பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்,
7. ஒப்புமைக் கருத்துகளைச் சுட்டுதல், 8. எக்காலத்திற்கும் ஏற்ற உரை,
9. தனியர் தாக்குதல் இன்மை, 10. கருத்தில் வன்மை, 11. நடையில் மென்மை,
12. வகுத்தும் தொகுத்தும் விவரித்தல்,
13. சொல்விளக்கமும் இலக்கணக் குறிப்பும்,
14. அறிவியல் பார்வை, 15. புரட்சி எண்ணம்.

ஒருபாலரைக் குறிப்பது மறுபாலருக்கும் பொருந்தும்

“கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்” (திருக்குறள் 54) என்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்’ எனக் கற்புநெறி இருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை விளக்குகிறார்.

“பெய்யெனப் பெய்யும் மழை” (திருக்குறள் 55) என்பதை விளக்கும் பொழுது, ‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமலை.

‘திருடிவயவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல் வேண்டும்.

“தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம் நல்குகிறார்.

திருவள்ளுவர் காலம் சங்கக் காலம்

‘‘ஆலந்தூர் கிழார் என்பவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுங்காலத்தில்,

 “நிலம் புடைபெயர்வதாயினும் ஒருவன்

 செய்திகொன்றோர்க்கு உய்திஇல்லென

அறம்பாடிற்றே ஆயிழை கணவ

என்று பாடுகின்றார் (புறநானூறு 34). இதில்,

 “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற குறளை (110)

– எடுத்தாண்டு திருக்குறளை ‘அறம்’ என்றும் சுட்டுகிறார்.

ஆலந்தூர் கிழார் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்கின்றனர். ஆகவே, வள்ளுவர் காலம் அதற்கு முற்பட்டாதல் வேண்டும்’’ எனப் பேராசிரியர் ஆய்ந்து திருவள்ளுவரைச் சங்கக்காலப் புலவர் என்கிறார்.

திருவள்ளுவர் காலம் அசோகர் காலம்

‘‘திருவள்ளுவர் “மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் சான்றோர் பழித்தது ஒழித்து விடின்” என்ற குறளில் மழுங்கச் சிரைக்கும் புத்தமதக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, புத்தமதம் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். அசோகன் காலத்தில்தான் புத்தமதம் தமிழ் நாட்டிலும் பரவிற்று.

ஆதலால் அசோகன் காலமே வள்ளுவர் காலம் என்று கூறலாம். அசோகன் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பர்’’ என என ஆராய்ந்து நிறுவுகிறார்.

பேராசிரியரின் முடிபுகள்

பேராசிரியர் சி.இலக்குவனார் ஆய்ந்தாய்ந்து கொண்ட ஆராய்ச்சிப் புலமையால் பின்வரும் கருத்துகளை நிலைநாட்டி உள்ளார்.

  1. திருவள்ளுவர் உலகத்தின் முதல் புரட்சியாளர், 2.பெண்களுக்கான முதல் புரட்சியாளர், 3. எண்ணப் புரட்சி செய்தவர் திருவள்ளுவர், 4. தமிழ்ப் பண்பாட்டை அழிந்து போகாமல் காத்தவர் திருவள்ளுவர், 5. திருவள்ளுவர் ஒரு சீர்திருத்தப் பெரியார், 6. திருக்குறள் உலகத்திற்கான நூல், 7. வள்ளுவர் வரலாறு குறித்தன புனைந்துரைகளே!, 8.திருவள்ளுவர் காலம் சங்கக்காலம், 9. திருவள்ளுவர் காலம் அசோகர் காலம், 10. திருக்குறள் தனித்தமிழ் நூல், 11. திருக்குறள் தமிழ்மரபு தழுவியே இயற்றப்பட்டுள்ளது, 12. இன்பத்துப்பால் தமிழர் காதலறத்தின் நெறிமுறையே, 13. இன்பத்துப் பால் ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாக அமைந்துள்ளது, 14. திருக்குறளின் கற்பியல் உயர்ந்த இலக்கியம், 15. குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்

இ.) திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்

திருக்குறள் பற்றிய வினாக்கள், புதிர்கள், போட்டிகள், திருக்குறள் நூல் பரிசாக அளித்தல் மூலம் மாணவர்களிடம் திருக்குறள்பால் நாட்டத்தை உண்டாக்கினார்.

கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றும் நகர்களிலும் திருக்குறள் கழகங்கள் அமைத்துக் குறள்நெறிப் பரப்புப் பணியை மேலும் விரிவாக்கினார்.

பாடத்திட்டத்தின்படியான கற்பித்தலை மட்டும் கடமையாகக் கொள்ளாமல் மக்களிடையே தமிழ்நெறியைக் கற்பித்தலையும் கடமையாகக் கொண்டு ஒழுகினார்.

புராணக் கதைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களைப் பிற்போக்காகக் கருதிய பெரியார் ஈ.வெ.இராமசாமியின் கருத்தை மாற்றினார். திருக்குறளைப் பற்றிய அவரின் தவறான எண்ணத்தையும் போக்கினார்.

பேரா.இலக்குவனார் மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருந்த பெரியார் ஈ.வெ.இராமசாமி திருக்குறள் நெறியே அவரது தன்மானப் பொழிவிற்கு வலு சேர்க்கும் என்னும் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

திராவிடர் கழக மாநாடுகளில் திருக்குறள் கருத்தரங்கத்திற்கும் ஒரு பொழுதை ஒதுக்கினார். இம்மாநாடுகளில் இலக்குவனாருக்குச் சிறப்பான இடத்தை அளித்தார்.

பேரா. இலக்குவனார் விருதுநகரில் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முதலானோரும் பங்கேற்றனர். 

இன்றைக்கு அரசியல் கட்சிகள் கட்சி மாநாடுகளில் இலக்கிய அமர்வுகளையும் சேர்த்திருப்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்  பேரா. இலக்குவனார்.

அரசியலாளர் மூலம் திருக்குறள் நெறி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் தோற்றுவித்த பெருந்தகையாய்ப் பேரா. இலக்குவனார் விளங்குகிறார்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்… )

தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனாரின் 53 ஆவது நினைவாண்டுக் கட்டுரையின் (03.09.2026) முதல் பாகத்திற்கான இணைப்பு கீழே.

https://thaaii.com/2026/09/02/prof-c-ilakkuvanar-memorial-day/

Comments (0)
Add Comment