சொந்த ஊரில் நிதானமாய்ச் சுவைத்துச் சாப்பிடுவது தனி சுகம்! இசையை ரசிப்பதற்குத் தனி ஈடுபாடு இருப்பதைப் போல சாப்பிடுவதும் கூடத் தனி ரகம் தான்!
எதற்கெடுத்தாலும் அரவை மிஷினுக்குள் தள்ளிவிடுவதைப் போல வாய்க்குள் தள்ளுகிறவர்கள் கொஞ்சம் நகர்ந்துவிடலாம்.
குமுதம் (09.07.98) சிறப்பிதழ் இணைப்பில் வெளிவந்த ‘ருசியான’ கட்டுரை இது :
தலைப்பு : ‘’மூக்குப் புடைக்க…’’
…
தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறதா உங்களுக்கு? அப்படியே படுக்கையை விட்டு ‘ஸ்லோ மோஷனில்’ ஒரு நடையாக மதுரைத் தெருவுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நிறம் மங்கிய அந்த நேரத்தில் கூட காரசாரமாகக் கடகடவென்ற சத்தத்துடன் யாராவது புரோட்டாவைக் கொத்திக் கொண்டிருப்பார்கள்.
அதே மாதிரி தோசைச்சட்டியில் பன்ரொட்டியை இரண்டாக்கி –நடுவில் பட்டரைத் தடவி நல்ல பதத்தில் வேகவிட்டு இளம் சூட்டில் உள்ளே தள்ளிப் பின்னாடியே மசாலாப்பாலை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருப்பார்கள்.
அந்தக் கால ஃபென்னர் ஆலைக்குப் பக்கத்தில் நல்ல அகலமான வெண்கலக் குண்டாவில் பருத்திப் பாலைக் கண் கிறக்கத்தோடு குடித்துக் கொண்டிருப்பார்கள்.
ராத்திரி கடக்கும் நேரத்தில் இந்தக் காட்சிகளைச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும் மதுரையில்!
நாக்கின் மீது மதுரைக்காரர்கள் வைத்திருக்கிற விசுவாசமே தனி! அதை வீணாக நோகடிக்க மாட்டார்கள்.
வெள்ளையாய் இட்லி, சாம்பார், தொட்டுக் கொள்ள நான்கு வகைச் சட்னியுடன் ஆவி பறக்கப் பரிமாறப்பட்டு ஆளாளுக்கு ஒரு பிடி பிடிப்பதெல்லாம் எங்கே என்கிறீர்கள்?
மதுரையில் பல இடங்களில் அங்கங்கே பரவிக்கிடக்கிற ரோட்டாரக் கடைகளில் தான்.
அதிலும் சௌராஷ்டிர சமூகத்தினர் நடத்தும் ரோட்டோரக்கடைகளிலேயே மெல்லிசான இடியாப்பம், குழாய்ப்புட்டு, சர்க்கரைப் பொங்கல் இத்யாதி எல்லாம் கிடைக்கும்.
இதுதவிர புளியோதரை,தக்காளிச்சாதம் இப்படி எல்லாமே குறைவான விலையில் கமகம மணத்துடன்! நெய் மணக்கும் பன் அல்வா, பாதாம் அல்வா இவர்களுடைய தனித்துவம்!
தெப்பக்குளம் பகுதியில் வெல்லம் உருகிய போளியும், சுண்டலும் சுவையின் மகத்துவங்கள்! இந்தப் பக்கம் போனாலே போதும், மிகக்குறைந்த விலையில் வயிறாரச் சாப்பிட்டுச் சுதந்திரமாக ஏப்பம் விட்டுவிடலாம்.
மீனாட்சியம்மன் கோவில் பக்கம் ஒரு நடை போய்விட்டுச் சாவகாசமாய் உலாத்துகிறீர்களா?
மேலக் கோபுர வாசலை அடுத்து அந்தக் கால நாகப்பட்டிணம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை. கிட்டத்தட்ட நம்ம நெல்லை இருட்டுக்கடை அல்வாக் கடையைப் போலத்தான்.
அந்தக் காலப் பழமை மாறாத கடை..இங்கு என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? நல்ல கெட்டியாக நெய் மொறுமொறுவென்று கெட்டியாக நிற்கும் பதத்தில் அல்வா அவ்வளவு சுவை!
மஞ்சள் கலர் பூந்தியும், காராசேவும் பிரபலம். எம்.எஸ். சுப்புலெட்சுமியிலிருந்து பத்மினி, நேரு வரை இங்கு ருசி பார்த்தவர்கள் பட்டியல் நீ…ளம்!
நியூ சினிமா பக்கம் நகர்ந்தால்- இருக்கிற மாடர்ன் ரெஸ்டாரண்டில் காலையிலிருந்து மதியம் துவங்குவதற்குள் கிடைக்கும் ரவாகேசரியும், காராபூந்தி தூவிய தயிர்வடையும் நாவின் அற்புதங்கள்!
இதையெல்லாம் விட ஸ்பெஷல் ஐட்டம் ஜிகர்தண்டா. மஹால் அருகில் இதற்கென்றே தனிக்கடைகள். சுற்றி அவ்வளவு கூட்டம். கடல் பாசி, கெட்டியான பால், சர்க்கரைப் பாகு, மேலே ஐஸ்கிரீம் போட்டு ஜில்லென்று கிடைக்கும் மதுரைக்கே உரித்தான ஸ்பெஷல்!
(இப்போது தமிழகம் தாண்டியும்) தெருவில் கடைக்கு முன்னால் குளிர்ச்சி கையில் ஒட்ட வாங்குகிறவர்கள் குடிக்கும்போது சிலர் கண்ணை மூடித் தியானம் பண்ணுவது மாதிரி மெதுவாக ரசித்துக் குடிக்கும் அழகே தனி !
சைவத்திலேயே இப்படி என்றால் அசைவத்தில் அடித்துக் கொள்ள முடியுமா?
சாலையோரம் போகும்போதே அந்த மசாலா மணம் பட்டதுமே பலருக்கு மூக்கு சுறுசுறுப்பாகி நாக்கில் வேர்த்துவிடும்.
வித்தியாசமான கலவையோடு சுள்ளென்று தயாராகும் மண்பானைச் சமையலான அயிரை மீன்குழம்பு ரொம்ப ஃபேமஸ்.
கலைஞர் துவங்கி சிவாஜி வரை மதுரைக்கு வந்தால் ஆஜராகி விடும் அயிரை மீனுக்கு பிரபலமாக இருந்த இன்னொரு வாடிக்கையாளர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன்.
நெடுமாறனின் அச்சக்கத்திற்கு அருகில் தங்கியிருந்த பிரபாகரன் பொடி நடையாக மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த சாரதா மெஸ்ஸூக்கு வந்து அயிரை மீனையும், சுக்கா வருவலையும் ரசித்துச் சாப்பிட்டுவிட்டுப் போயிருக்கிறார்.
வைரமுத்துவும், பாரதிராஜாவும் இங்குள்ள சில மெஸ்களின் வாடிக்கையாளர்கள்.
மட்டனைப் பரப்பிப் புரட்டி மணமணக்க வரும் மட்டன் தோசை, கறிக்குழம்புக்கென்றே பிரபலமான அருளானந்தம், நாடார் மெஸ்கள், கோனார் கடை, பாலையா கடை, பனை மரத்துக்கடைக்கெல்லாம் மேலாக அந்த நாள் ஞாபகமாக ஒரு ஹோட்டல் – சிந்தாமணி தியேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் – அம்சவல்லி பவன்.
காலையிலேயே புரோட்டாவும், சால்னாவுமாக இயங்க ஆரம்பித்துவிடும் ஹோட்டலில் பிரியாணி அவ்வளவு சுவை.
பெரியார் இந்த ஹோட்டலில் ஒரு பொறித்த கோழியைச் சாப்பிடுவதை ஆச்சர்யத்துடன் முன்னாடி இருந்த கண்ணாடி வழியாகப் பார்த்த சிறுவர்களில் – இந்தக் கட்டுரையை எழுதும் நானும் ஒருவன்.
அப்போது பொறித்த முழுக்கோழி ரொம்பவும் ஆச்சர்யம்!
இரவு இரண்டு மணிக்கு மேல் கூட பசியோடு நடமாடுகிறவர்கள் எவருக்கும் அவரவர் ருசி சார்ந்த உணவைச் சாப்பிட முடியும்.
ராத்திரி வரை மூட்டையும், வெயிலையும் சுமந்த கறுத்த லோடுமேன்கள் சில ஹோட்டல்களில் சாப்பிடுகிற விகிதாச்சாரத்தைப் பார்த்தால் உங்களுக்கும் பசி தொற்றிவிடும்.
காலை மூன்று மணி வரை இந்த நடமாட்டம். அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் அசந்த மாதிரி இருக்கும். அவ்வளவு தான். நான்கு மணி ஆகிவிட்டதா?
அலுமினியப் பாத்திரங்களைக் கழுவி விபூதிப் பட்டையடித்து ஊதுபத்திக் கொளுத்தி, நீர் தெளித்து கடை களை கட்ட, ஸ்டீரியோவில் டி.எம்.எஸ்.ஸின் ‘’உள்ளம் உருகுதய்யா’’ ரகப்பாடலோ, சீர்காழியின் ‘விநாயகனே’ பாடலோ காதில் மெல்லிய தூறல் மாதிரி விழ ஆரம்பித்துவிடும்.
இரவு நேர மதுரை பலருக்கு அதிசயம்.
ஆனால், மதுரையில் உள்ள பலருக்கோ – அது இன்னொரு வாழ்க்கை!
– மணா