பாஜக யார் பக்கம்?

தவெக ஆட்சி அமைந்ததிலிருந்தே மீடியாவில் பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சமே இல்லை.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறையோ, சமயங்களில் இருமுறையோ பிரேக் நியூஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பார்ப்பவர்களை கலவரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

உண்மையில் என்னதான் நடக்கிறது?

தவெக ஆட்சியைக் கலைப்பதற்கான சதி வேலைகளில் திமுகவினர் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கரூர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் நிபந்தனை ஜாமீன் பெற்றிருக்கிறார்கள்.

அதில் குற்றஞ்சாட்டப்பட்ட இன்னொரு முன்னாள் அமைச்சரான எ.வ.வேலு குற்றம் சாட்டப்பட்டவுடன் வழக்கமாக வரும் உடல்நலக் கோளாறு அவருக்கும் ஏற்பட்டு அவரும் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், தவெகவைக் கலைக்க சதி நடந்ததாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை தானாக முன்வந்து அமலாக்கத்துறை தன்னுடைய விசாரணையைத் துவக்கி இருக்கிறது.

மத்தியில் இருக்கிற பாஜக அரசு இதில் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்பதுதான் தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சிகளில் நடந்து கொண்டிருக்கும் ஊடக விவாதங்களின் மையமாக மாறியிருக்கிறது.

ஒருபுறத்தில் பாஜகவுடன் தேர்தல் முடிந்த பிறகு திமுக இணக்கமானதொரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறதா? என்கின்ற கேள்வி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அதற்கேற்றபடி திமுக பைல்ஸ் என்கின்ற மிகப்பெரும் குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக முன்வைத்த அப்போதைய பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது போடப்பட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.

அதே சமயம் டி.ஆர்.பாலு மீது தான் தொடுத்திருந்த வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார் அண்ணாமலை.

இம்மாதியான மாற்றங்கள் தற்செயலாக நடக்கின்றனவா? என்பது தான் மிக முக்கியமான கேள்வி.

இதோடு திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுகக் கூட்டணி இருந்து வருகிறது என்பதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தவெக துவக்கப்பட்ட விக்ரவாண்டி பொதுக்கூட்டத்தில் துவங்கி தொடர்ந்து ஒரு முழக்கமாகவே முன்வைத்து வந்தார் தற்போதைய முதல்வரான விஜய்.

பொதுவெளியில் விஜய் முன்வைத்து வந்த இந்த வெளிப்படையான குற்றச்சாட்டை இதுவரை பாஜகவும் மறுக்கவில்லை, திமுகவும் மறுக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழில் சொல்லப்படும், “என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்று சொல்லும் ரகத்தில் திமுகவைச் சேர்ந்த சிலரே இந்தக் கூட்டணி நிலவுவதைப் போல தொலைக்காட்சி செய்தியாளர்களிடையே பகிரவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“எப்படியும் இன்னும் ஆறு மாதத்திற்குள் தவெக ஆட்சிக் கவிழ்ந்து, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைக்கப்படும்” என்று படு ஆவேசமாக சொன்னதோடு இன்னொரு பரபரப்பான தகவலையும் அவர் வெளியிட்டார்.

இன்னும் ஆறு மாதத்தில் மத்தியில் மாறக்கூடிய அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த சில எம்பிக்கள் குறிப்பாக திருச்சி சிவாவை போன்றவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிப்பார்கள் என்கிற தகவலையும் வெளிப்படையாகவே முன் வைத்திருக்கிறார்.

இதையடுத்து டெல்லியில் வழக்கமாக ரகசியமான சில செய்திகளை கசியவிடக்கூடிய சில மூத்த பத்திரிகையாளர்கள் பாஜக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவரை திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சந்தித்ததாக ஒரு செய்தியை கசிய விட்டிருக்கிறார்.

ஆனால், இத்தகைய வெளிப்படையான செய்திகள் பரிமாறப்படும்போது அதை எதிர்த்து வழக்கமாக குரல் கொடுக்கும் பாஜக பிரமுகர்கள் குறிப்பாக நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் இதுவரை இத்தகைய குற்றச்சாட்டு பற்றி வாயைத் திறக்கவில்லை.

வழக்கமாக அடிக்கடி வாய் திறந்து பேசுகிறவரான முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்கள் கூட இதுபற்றி வெளிப்படையான கருத்தை முன்வைக்கவில்லை.

ஆக, விஜய் தொடர்ந்து முன் வைத்தபடியே பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான மறைமுகக் கூட்டணி என்கிற நிலை மாறி,

தற்போது வெளிப்படையான கூட்டணிக்கான சூழல் உருவாகி வருவதை இன்றைய பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றனவா?

இது மட்டுமல்ல அண்மையில் கரூரில் நடந்த கூட்டத்தில், “அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்” என்று விஜய் வெளிப்படையாக இன்னொரு கூட்டணி பற்றி பேசிய விவகாரமும் தற்போது அதிமுகவினரை பதற வைத்திருக்கிறது.

முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மிகவும் கொச்சையாக ஒருமையில் முதல்வர் விஜய் குறித்த கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.

கூட்டணி குறித்து தற்போது நிலவும் வெவ்வேறு சந்தேகங்களுக்கு இடையில் இரண்டு விஷயங்கள் தற்போது தெளிவுபடுத்தப்பட வேண்டியிருக்கிறது.

ஒன்று – திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி நிலவுகிறதா?

இரண்டு – கூடுதலாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையில் அடிஷனலான ஒரு கூட்டணிக்கான சூழல் உருவாகி இருக்கிறதா?

இதையெல்லாம் அந்தந்த கட்சி தலைமைதான் தெளிவுபடுத்த வேண்டும்.

அப்போதுதான் பாஜக உண்மையாகவே யார் பக்கம் நிற்கிறது?

விஜய் பக்கம் நிற்கிறதா அல்லது திமுக, அதிமுக பக்கம் நிற்கிறதா? என்பதெல்லாம் தெளிவுபடுத்தப்படும்.

தொலைக்காட்சி விவாதங்களில் நடக்கும் பல குழப்பமான விவாதங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி விழும். அதுவரை இத்தகைய குழப்பங்கள் பொது வழியில் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.

– யூகி

Comments (0)
Add Comment