முடிவுக்கு வரும் மேற்காசியப் போர்!

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இப்போரில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுடனான மோதலைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டது. இதனால் ஈரானுக்கு சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது.

அமைதி ஒப்பந்தம்:

பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியால் அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்காவும் ஈரானும் அறிவித்துள்ளன.

இதன்மூலம் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணை கட்டணமின்றி திறக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துகள்! ஹார்முஸ் நீரிணையை கட்டணமின்றி திறக்க நான் முழுமையாக அங்கீகரிக்கிறேன்.

அதே நேரத்தில், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கவும் அங்கீகரிக்கிறேன். உலகக் கப்பல்களே, ஹார்முஸ் நீரிணையை கடக்க தயாராகுங்கள். எண்ணெய் தடையின்றி பாயட்டும்!”

14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தம்:

30 நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க நடவடிக்கை எடுப்பது, ஈரான் எண்ணெய் மற்றும் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குவது உள்ளிட்ட 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா – ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஹார்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைவு:

அமெரிக்கா, ஈரான் இடையே இறுதியாகியுள்ள அமைதி ஒப்பந்தத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% வரை குறையத் தொடங்கியுள்ளது.

அமைதி ஒப்பந்தம் காரணமாக ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட உள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்களுடன் ஹார்முஸ் நீரிணை பகுதியில் காத்திருக்கும் பல கப்பல்கள் விரைவில் நீரிணையைக் கடக்க உள்ளன.

இதன்மூலம் உலக நாடுகளுக்கு விரைவில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

– வைஷ்ணவி பாலு

Comments (0)
Add Comment