குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் சிறை வேண்டும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “விஜய்யின் தவெக ஆட்சி எப்படி உள்ளது?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, “தவெக ஆட்சி அருமையாக உள்ளது. குற்றச் சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஆட்சிகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்.

அந்தச் சட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றங்கள் ஜாமீனில் விடக்கூடாது.

வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்தான், இந்த மிருகங்களுக்கு கொஞ்சமாவது பயம் ஏற்படும். தற்போது அது நடக்கவில்லை.

எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முன்பும் நடந்துள்ளன.

நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து யோசிக்கவில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று பலர் கூறி வருகின்றனர்.

திமுகவை வெற்றிபெறச் செய்ய எங்களால் முடிந்த அளவிற்கு விசுவாசமாக உழைத்தோம்.

சாத்தூர் தொகுதியில்கூட தீவிரமாக பிரசாரம் செய்து திமுகவை வெற்றிபெறச் செய்தோம்.

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிறகும், தவெகவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார்கள்.

துரை வைகோவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், இனி வரும் தேர்தல்களில் மதிமுக பம்பரம் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் எங்களை எப்படியெல்லாம் பேச முடியுமோ அப்படிப் பேசி வருகின்றனர். நாங்கள் அவசரப்படவில்லை. எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை.

வரும் 27-ஆம் தேதி எங்கள் பொதுக்குழு கூடுகிறது. அனைவரின் கருத்துகளையும் கேட்ட பிறகே முடிவு எடுப்போம்”. என்று தெரிவித்தார்.

– வைஷ்ணவி பாலு

Comments (0)
Add Comment