முன்னாள் முதல்வரும் முன்னாள் துணை முதல்வரும் தேர்தலுக்கு முந்தைய பரப்புரையில், அடிக்கடி சொன்ன வார்த்தை, “நாங்கள் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்டே்ரோல்”.
அதே வார்த்தையை இப்போது திமுகவிலேயே சிலர், திமுகவை மீறிய அவுட் ஆஃப் கண்ட்ரோலாக இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் அவர்களுடைய பேச்சுக்கள்.
திமுக கூட்டணியிலிருந்து அதன் கூட்டணிக் கட்சிகள் திமுக தலைவரான ஸ்டாலினிடம் கலந்து பேசிவிட்டு, தவெக ஆட்சியை ஆதரித்தன. அதன் அமைச்சரவையிலும் பங்கேற்றன.
அப்போது, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா மிகக் கொச்சையான விமர்சனத்தை முன்வைத்து, அந்த வாசகம் உண்டாக்கிய பரபரப்புக்குப் பிறகு அதை நீக்கினார்.
ஆனாலும், ஆ.ராசா குறிப்பிட்ட அந்த வாசகம் சில பகுதிகளில் நேரடி மோதலுக்கு வித்திட்டது.
அதைப்போலவே திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி காங்கிரசை தங்களை விட்டுச் சென்ற சனியன் என்று குறிப்பிட்டபோது, காங்கிரசாரும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள்.
என்னதான் கவனமாகப் பேச வேண்டுமென்று முன்னால் முதல்வரான ஸ்டாலின் வலியுறுத்திய பிறகும் கூட தென்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைவரான அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்டாலினுக்கு ஓட்டுப் போட மறந்த வாக்காளர்களை கண்டபடி வசை பாடினார்.
ஒரு காலத்தில் திமுகவின் நீண்டகாலத் தலைவரான கலைஞர் வசனம் எழுதி வெளிவந்த பராசக்தி படத்தில், “பராசக்தி எந்தக் காலத்திலடா பேசினாள்” என்றும் “பக்தி பகல் வேசமாகி விடக்கூடாது” என்றும் காரசாரமாக எழுதியிருந்த வசனத்தை இன்றைக்கும் திமுகவினரால் மறந்துவிட முடியாது.
அண்மையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில், முருகப் பெருமானை பார்க்க வரும் பக்தர்களிடம் சிறப்புக் கட்டணம் என்கிற பேரில் தனியே வசூலிக்கப்படுவதான புகார்கள் சென்ற ஆட்சியிலும் இருந்தன.
தவெக ஆட்சிக்கு வந்தபிறகு தற்போதைய அறநிலையத்துறை அமைச்சரே தன்னுடைய உதவியாளருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு ஆய்வுக்குச் சென்றபோது, அவரிடமும் சிறப்புக் கட்டணம் கேட்கப்பட்டது.
கேட்டு அதை வாங்கியவர் கோவிலிலுள்ள அர்ச்சகர் ஒருவர்தான்.
அந்தக் கட்டணைத்தையும் தொழில்நுட்பத்துடன் ஆதர பூர்வமாக ஜிபேவில் கட்டியிருக்கிறார்கள் அமைச்சரும் உதவியாளரும்.
அப்படி, கையும் ஜிபேயுமாக பிடிபட்ட அர்ச்சகர் மீதும் இன்னும் சில நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பெரும்பாலான முருக பக்தர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.
ஆனால், இப்போதும் அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு மாறான கருத்தை தெரிவித்து, தவெக அரசை சாடியிருக்கிறார் திமுகவைச் சேர்ந்தவரான அனிதா ராதாகிருஷ்ணன்.
திமுகவிலேயே இருந்த திராவிடக் கொள்கையில் ஊறின பலருக்கு திமுக உள்ளேயே நிகழும் இம்மாதிரியான முரண்பாடான நிகழ்வுகள் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
திமுகவிற்குள்ளேயே சிலர் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக இயங்க ஆரம்பித்துவிட்டார்களோ?
– லியோ