தடைகளைத் தாண்டி தகுதி பெறுமா சி.எஸ்.கே?

இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கக் கூடிய 2026 ஐபிஎல் தொடர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

பிளேஆப் சுற்றுக்காக ஒரு சில அணிகள் கடுமையான போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று.

தற்போதைய புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 5 இடத்தில் உள்ளது. தான் விளையாடிய 11 போட்டிகளில் 6-ல் வெற்றியும் 5-ல் தோல்வியும் கண்டுள்ளது.

எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சி.எஸ்.கே வென்றால் உறுதியாக பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றை நினைத்தே பார்க்க முடியும்.

இந்த நிலையில், அந்த அணி மேலும் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் வலது தொடையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தற்போது ஜேமி ஓவர்டனுக்கு லண்டனில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற உள்ளதால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய அவர், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் முழுவதுமே சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

முன்னதாக கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ், ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ் ஆகியோர் காயத்தால் விலகினர்.

தற்போது, பந்துவீச்சில் நம்பிக்கை அளித்து வந்த ஜேமி ஓவர்டனும் தற்போது விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், இந்த தொடரில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.

இவற்றையெல்லாம் மீறி, சென்னை அணி நடப்புத் தொடரில் அடுத்த சுற்றுக்குச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments (0)
Add Comment