‘பிரேக்கிங் நியூஸ்’ என்று பி.ஜி.எம் அதிர செய்திகள் தொலைக்காட்சியில் வெளிவந்தாலே, பார்ப்பவர்கள் பலருக்கு பிரஷர் எகிறிவிடும்.
அதிலும் குறிப்பாக ஏற்கனவே ‘பிளட் பிரஷ்ஷர்’ இருப்பவர்களின் பி.பி.யின் அளவு இன்னும் அதிகரித்து அவர்கள் அரை கிறக்க நிலைக்குக் கூட போய்விடலாம்.
இப்படித் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரத்திற்கு அடுத்தடுத்து, பல பிரேக்கிங் நியூஸ் வெளிவந்தால் பார்க்கிறவர்கள் என்னதான் செய்வார்கள்.
இப்படியொரு நிலையை தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்து, தவெக 108 தொகுதிகளிலேயே வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கியிருந்த நிலையில், பல்வேறு தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது.
5 நிமிடங்களுக்கு ஒருமுறை கூட ‘பிரேக்கிங் நியூஸ்கள்’ வந்து, வீட்டின் உள்ளறங்கிற்குள் ஆற அமர உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோரையும் கிறங்கடிக்க வைத்துவிட்டன.
அதிலும் காங்கிரஸ் கூட்டணி ஆதரவை வௌிப்படுத்திய நிலையில், அடுத்து பொதுவுடமைக் கட்சிகள் தங்கள் ஆதரவை தெளிவுபடுத்திய நிலையில், இறுதியாக மீடியாவையும், மீடியாவைப் பார்ப்பவர்களையும் மிகவும் பதற்றத்திற்கு உள்ளாக்கியது விடுதலைச் சிறுத்தைகளின் தரப்பிலான தாமதம்.
முதல் நாள் மாலை 3 மணிக்கு மீடியாவைச் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு ஆறரை மணி என்று மாற்றப்பட்டது. பிறகு மறுநாள் காலை பத்து மணி என்று கூறப்பட்டது.
பிறகு மறுபடியும் மாலை 4 மணிக்குமேல், விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்குள் மீடியாக்கள் பெரும் பாடுபட்டுவிட்டன.
பல்வேறு தொலைக்காட்சிகளில் அந்த இறுதிக்கட்ட ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் கொடுத்து, விஜய் சக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்திக்கப் போனதுவரை, தொடர்ச்சியாக எத்தனை பிரேக்கிங் நியூஸ்? எவ்வளவு பதற்றங்கள்?
இதற்கிடையில், முந்தைய தினம் அமமுக தலைவரான டி.டி.வி.தினகரன் லோக் பவனுக்குள் தனியே ஒரு எண்ட்ரியைக் கொடுத்து அவரும் தனது வேட்பாளர் காணாமல் போனதாகவும், குதிரை பேரம் நடந்திருப்பதாகவும் சொல்லி, பகீர் பேட்டியைக் கொடுத்தார்.
ஏற்கனவே, அரைகுறை வயிற்றுக் கலக்கத்துடன் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மேலும் கதிகலங்க வைத்தது டிடிவி தினகரன் அளித்த பகீர் பேட்டி.
இதற்கிடையில், அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்து விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவனை முதலமைச்சர் பொறுப்புக்கு உயர்த்த இருப்பதாக, ஒரு பிரேக்கிங் நியூஸ் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் ஒரே நேரத்தில் தொற்று நோயைப் போல பரவி, பார்வையாளர்களை அதிர வைத்தன.
அண்மைக் காலத்தில், எந்த ஒரு தொலைக்காட்சியும் இப்படி அடுத்தடுத்து, பிரேக்கிங் நியூஸை கொடுத்திருக்க முடியாது.
அந்த அளவுக்கு ஞாயிற்றுக் கிழமை காலை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக கோட் சகிதமாக விஜய் பதவியேற்ற போது, இசைக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலும் சர்ச்சைக்குள்ளானது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பது தொடர் விவாதமாகியது.
முதல்வரானதுமே, திமுக விட்டுவிட்டுப் போன கஜானாவைப் பற்றி விஜய் ஏன் கேள்வி எழுப்பினார்? என்பதும் மாறி மாறி சர்ச்சைக்குள்ளானது.
அடுத்த நாள் திங்களன்று எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டாலும் வரும் 13-ம் தேதிக்குள் விஜய் தனக்கான பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வரையிலும் தமிழகத்திலும் தேசிய அளவிலும் இருக்கும் பல்வேறு ஊடகங்களுக்கு பிரேக்கிங் நியூஸ் போடுவதில், ஒருவித போட்டியே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.
வாக்களித்த வாக்காளப் பெருமக்களை மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலிருந்து, தமிழகத்தின் அரசியல் முடிவை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கும் பெரும் டென்ஷன் காத்துக்கொண்டிருக்கிறது.
தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கிற்காக எப்படியெல்லாம், பார்வையாளர்களின் பிரஷ்ஷரை ஏற்றி, டென்ஷனாக்கி வருகின்றன இங்குள்ள காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும்.
– அகிலன்