ஆளுநர்கள் ஏன் அதிகார மையமாக மாறுகிறார்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தற்போது, தமிழக அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான நிலைக்கு மாறி இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியிருக்கிறார் தமிழகத்திற்கு வந்த பொறுப்பு ஆளுநரான அர்லேகர்.

2-வது முறையாக விஜயை ராஜ்பவனுக்கு வரவழைத்து அவர் சுமார் ஒரு மணி நேரம் அளவுக்குப் பேசியதாக சொல்லப்படும் பேச்சுக்கள் அரசியலில் சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

இதற்கு முன்புவரை கூடுதலான எண்ணிக்கையில் தனிப்பெரும் கட்சியாக எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சியை ஆட்சி அழைக்க அழைப்பதுதான் இதுவரையிலான ஆளுநர்களின் செயல்பாடாகவும் மரபாகவும் இருந்திருக்கிறது.

ஆனால், தமிழகத்திற்கு நியமிக்கப்படும் ஆளுநர்கள் மட்டும் ஏன் இதில் விதிவிலக்காக நடந்து கொள்கிறார்கள்.

இதற்கு முன்பு, அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் உருவானபோது அதை மீறி கட்சியின் பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி சசிகலாவை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தபோது அவரை ஆட்சிக்கு அழைக்க வேண்டியவரான அப்போதைய ஆளுநர் வித்யாசகர் தமிழகத்திற்கு வராமலேயே ஏறத்தாழ காணாமல் போன நிலைக்கு போய்விட்டார்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா பெங்களூரு சிறைக்குப் போனபிறகு தமிழகத்திற்கு வந்த அப்போதைய ஆளுநரான வித்யாசாகர் தமிழகத்திற்கு மிகச் சரியாக திரும்பி வந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இவர்கள் இருவருடைய கரங்களையும் வலுப்படுத்தியவாறு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

இப்படி பல காட்சிகளை நாம் தமிழகத்தில் பார்த்திருக்கிறோம்.

பீகாரிலும் இதற்கு முன்பு இதே மாதிரியான ஒரு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வெற்றி பெற்ற அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சிப் பொறுப்புக்கு அழைக்க வேண்டிய ஆளுநர், அந்தக் கட்சியை அழைக்காமல் குறிப்பிட்ட அந்த ஆட்சியையே  கலைக்கும் அளவுக்குப் போனார்.

அப்போது அந்த ஆளுநர் எடுத்த முடிவை பிறகு உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டிக்க நேர்ந்தது.

இப்படி தமிழகத்தில் பல்வேறு ஆளுநர்கள் தனக்கான அதிகார வரம்பை மீறி பல்வேறு சந்தர்ப்பங்களில் செயல்பட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சிப் பொறுப்பில் தமிழகத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி பல அத்துமீறல்களில் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்கும் ஆளாகி இருக்கிறார். தற்போதும் அதே நிலைதான்.

தமிழகத்தில் ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், கேரளாவிலிருந்து பொறுப்பு ஆளுநராக தமிழ்நாட்டிற்கு வந்த ஆர்.வி.அர்லேக்கர் விஜய்யை சந்தித்துப் பேசியதுடன் நிறுத்தி இருக்கலாம்.

அதோடு, எந்தக் கட்சி பெரும்பான்மையான பலத்துடன் வருகிறதோ அதிக எண்ணிக்கையில் பெரும்பான்மை பலத்துடன் வருகிறதோ, அந்தக் கட்சியை தான் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவதாகவும் சொல்லியிருக்கிறார்.

அதில் திமுகவும் அதிமுகவும் இணைந்து வந்தால்கூட, கட்சிப் பொறுப்பில் அமர்த்த தயாராக இருப்பதாகவும், அவர் சொல்லியிருப்பதாக வெளியாகும் செய்திகள் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் விதத்தில் இல்லை.

அருகே பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்திருக்கும் ஒருவரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தாமல், இன்னொரு கூட்டணிக்குக் கைகாட்டும் வேலையை ஆளுநர் ஏன் செய்கிறார்?

தன்னுடைய பொறுப்பை சரிவர ஆளுநர் நிறைவேற்றாமல் போனதால்தான், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போது போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது, பலரும் ஆளுநரின் செயல்பாட்டுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் இதில் அடக்கம். இனி அதே ஆளுநர், என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

ஏறத்தாழ விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடமைக் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடோ அல்லது கூட்டணிப் பற்றிய நிலைப்பாடோ இன்றைக்கு வெளியாகிவிடும்.

அப்படி வெளியானால் அவர்களையும் இணைத்த அந்த ஆதரவு கடிதத்தை விஜய் அளிக்கும் பட்சத்தில், அவரை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் ஆளுநருக்கான ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையாக இருக்கும்.

அப்படி அவர் கொடுக்கத் தவறும் பட்சத்தில் மட்டுமே, ஆளுநர் வேறு முடிவு எடுக்க வாய்ப்பிருக்கிறது, அதுவரை ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது.

Comments (0)
Add Comment