தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம், “மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு”.
விஜய்யின் தவெக கட்சி பெரும்பான்மையான இடத்தைப் பெற்று, ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் என்பதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டும்தான் வெளிப்படுத்தியிருந்தது.
தொலைக்காட்சி விவாதங்களில் பல்வேறு புள்ளி விவரங்களை அடுக்கி, கணக்குப் போடும் அறிவுஜீவிகள் யாரும் விஜய்யின் தவெகவிற்கு தெளிவாக கணக்குப் போடவில்லை. எதிர்மறையான கருத்துக்களையே பலரும் கூறி வந்தனர்.
ஆனால், இந்தவிதமான கருத்துக் கணிப்புகளையெல்லாம் மீறி, நேரடியாக தேர்தல் பூத்களில் விஜய்யின் விசில் சின்னத்திற்கு வாக்களித்து ஏறத்தாழ ஒன்றரை கோடி வாக்குகளுக்கு மேல் வரவைத்து அவரை வெற்றி பெற வைத்தவர்கள் தமிழக மக்கள்தான்.
ஆனால், ஆச்சர்யமாக நடந்த ஒரு நிகழ்வு, விஜய் தனது கட்சியைத் துவக்கி விக்கிரவாண்டியில் பேசும்போது, “கூட்டணி ஆட்சியில் பங்கு” என்கின்ற முழக்கத்தைத் தெளிவாக முன்வைத்திருந்தார்.
அப்போது, பெரும்பாலான கட்சிகள், “அத்தகைய கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழலை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள்” என்று வழக்கம்போல சொன்னாலும், அவர்களுடைய எதிர்பார்ப்புக்கெல்லாம் மேலாக விஜய் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கியவர்கள் தமிழக மக்கள்தான்.
அப்படி தமிழக மக்கள் அளித்த தீர்ப்பின்படி, விஜய்க்கு தற்போது 108 தொகுதிகள் கிடைத்திருக்கின்றன.
காங்கிரஸ் 5 தொகுதிகளுடன் ஆதரவளிக்க முன் வந்திருக்கிறது. ஆக – தவெகவின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்னும் தவெகவிற்கு தேவைப்படுவது ஏறத்தாழ 6 தொகுதிகள். திமுக கூட்டணியில் தேர்தல் நேரத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளான பொதுவுடைமைக் கட்சிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வெளிப்படையான ஆதரவைக் கோரி கடிதம் எழுதியிருக்கிறார் தவெக தலைவரான விஜய்.
அதேசமயம், திமுக தன்னுடைய கூட்டணியிலிருந்து தேர்தல் முடிவுக்குப் பிறகு ஒவ்வொரு கட்சியாக கழன்றுபோகும் சூழலை சற்றும் விரும்பவில்லை.
ஏற்கனவே விலகிய காங்கிரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள் திமுக தலைவர்கள்.
ஆளுநரை விஜய் சந்திக்கப்போனபோது அவர் எதிர்பார்த்த மாதிரியான கடிதம் ஆளுநரிடமிருந்து வரவில்லை.
அதோடு, பதவியேற்ற 2 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கிடுக்கிப்பிடியான ஒரு பிடியை அறிவித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர்.
தமிழகத்தில் இதற்குமுன்பும் இதே மாதிரி அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சில கட்சிகள் ஆளுநரை அணுகியபோது, கிடைத்த கால அவகாசம் தற்போது விஜய்க்கு வழங்கப்படவில்லை.
அதனால், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்த பதவியேற்பு நிகழ்வையே விஜய் தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகி இருக்கிறது.
இன்னும் தனக்குக் கிடைக்க வேண்டிய மிகச் சில தொகுதி எம்.எல்.ஏகளுக்கான ஆதரவு கடிதத்தை எதிர்பார்த்த நிலையில் விஜய் காத்திருக்கிறார்.
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பே, கூட்டணி ஆட்சி என்பது பற்றிய விவாதங்கள் எழுந்தன.
அப்போது, திமுக, அதிமுக இரண்டு கட்சியின் கூட்டணிகளிலுள்ள கட்சித் தலைவர்களே கூட்டணி ஆட்சி வேண்டும் என்று வலியுறுத்தியபோது, அதை திட்டவட்டமாக மறுத்தன திமுகவும் அதிமுகவும்.
இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான அரசியல் சூழல் கூட்டணி ஆட்சி அமைந்தாக வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விசிக மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் அதில் பங்கு பெற்றால், பதவிக் கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்வது அந்தக் கட்சிகளின் நலனுக்கும் வழிவகுக்கும். விஜய்யின் தவெகவுக்கும் ஆதரவை உறுதிப்படுத்திய விதத்திலும் இருக்கும்.
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்கின்ற வாசகத்தை அடிக்கடி வெளிப்படுத்தும் கட்சிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள தவறினால், அல்லது மறுத்துவிட்டால் அதிமுக கூட்டணியிலுள்ள சில கட்சிகள் தங்கள் ஆதரவைத் தரும் சூழ்நிலை உருவாகலாம்.
விடுதலைச் சிறுத்தைகளும், இரு பொதுவுடைமைக் கட்சிகளும் நீண்ட கால ஆலோசனையில் ஈடுபடாமல், தாமதமில்லாமல் முடிவெடுப்பது தற்போதைக்கு நல்லது.
காலத்தின் உதவியோடு தானாக வரும் வாய்ப்பை இந்தக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளுமா? என்பதுதான் தற்போது தமிழக அளவில் உள்ள பல வாக்காளர்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது.
– ஈஸ்வரி